இலங்கை வர்த்தக சம்மேளனத்துடன் இணைந்த, வாகனத் தொழில்துறைக்கு குரல் கொடுக்கும் அமைப்பான சிலோன் மோட்டார் வாகன வர்த்தகர்கள் சங்கமானது (Ceylon Motor Traders Association – CMTA), பல்வேறு இறக்குமதியாளர்கள் மூலம் வாகனங்களை கொள்வனவு செய்கின்ற நிலை அதிகரித்து வருவதன் அபாயங்கள் மற்றும் CMTA இனால் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் மூலம் வாகனங்களை கொள்வனவு செய்வதன் நன்மைகள் குறித்துத் தேசிய ரீதியிலான விழிப்புணர்வு பிரசாரத்தை ஆரம்பித்துள்ளது.
இலங்கைச் சந்தையில் பல மறைமுக இறக்குமதியாளர்கள் தொடர்ச்சியாக அதிகரித்து வருவதனால், நுகர்வோர் பல்வேறு மறைவான அபாயங்களுக்கு உள்ளாகின்றனர். அவற்றில், மாற்றியமைக்கப்பட்ட வாகன பயண தூரம் (மைலேஜ்), விபத்துக்குள்ளாகிய திருத்தப்பட்ட வாகனங்கள், உறுதிப்படுத்தப்படாத வாகன உரிமை வரலாறு, உற்பத்தியாளரால் உத்தரவாதம் வழங்கப்படாமை, பாதுகாப்பு அம்சங்கள் குறித்த கவலைகள், அசல் உதிரிப்பாகங்களுக்கு எவ்வித உத்தரவாதமும் இன்மை அல்லது விற்பனைக்குப் பின்னர் நாட்டில் சேவைகள் கிடைக்கப்பெறாமை ஆகியன இதில் உள்ளடங்கும். இத்தகைய வாகனங்கள் குறிப்பிட்டளவான குறுகிய இலாபங்களை வழங்கிய போதிலும், நுகர்வோருக்கு அபாயங்களையும் நீண்ட காலச் செலவுகளையும் ஏற்படுத்துவதன் மூலம் மிகவும் செலவுகளை ஏற்படுத்தும் பிரச்சினைகளாக மாறக்கூடும் என CMTA எச்சரிக்கை விடுத்துள்ளது.
மறைமுக இறக்குமதியாளர்களால் வழங்க முடியாத பல உத்தரவாதங்களை வாகன உற்பத்தியாளரால் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் வழங்குகின்றனர். பயிற்சி பெற்ற பணியாளர்கள், உதிரிப்பாகங்கள் கிடைக்கும் தன்மை, வாகனத்திற்கு வாழ்நாள் முழுவதும் 24 மணி நேர வீதியோர உதவி, உற்பத்தியாளர்களிடமிருந்து நேரடி உதவி உள்ளிட்ட விடயங்கள் இதில் உள்ளடங்குகின்றன. அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் மூலம் கொள்வனவு செய்யப்படும் வாகனங்கள் விரிவான உற்பத்தியாளர் உத்தரவாதம் வழங்கப்பட்டு ஆதரவளிக்கப்படுகின்றன என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இது, உத்தரவாதக் காலத்தில் செலவுகளை கணிசமாக சேமிப்பதுடன், அதிக நம்பகத்தன்மையையும் உறுதி செய்கிறது. அத்துடன், பழுதுபார்ப்பு மற்றும் உதிரிப்பாகங்கள் இறக்குமதி மூலம் அரசாங்கத்திற்கு ஏற்படும் தேவையற்ற அந்நியச் செலாவணி வெளியேற்றத்தையும் வெகுவாகக் குறைக்கிறது.
அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் மூலம் இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள் இலங்கையின் நிலமைகளைக்கு ஏற்ற வகையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டவையாகும். அவை உற்பத்தியாளரின் உத்தியோகபூர்வ வாகன மீளப் பெறல் நடவடிக்கைகளுக்கு (recall actions) தகுதியானவை ஆகும். இது, மறைமுக இறக்குமதி மூலமான வாகனங்கள் பெரும்பாலும் தவறவிடும் முக்கியமான பாதுகாப்பு அம்சங்களில் ஒன்றாகும். அத்துடன், வாகனங்களை நாட்டிற்கு இறக்குமதி செய்வது தொடர்பான அனைத்து கொடுப்பனவுகளும் உரிய விதிமுறைகளின்படி மேற்கொள்ளப்படுகின்றன. இதன் மூலம், அரசாங்கத்திற்கு இறக்குமதி வரிகள் துல்லியமாக செலுத்தப்படுகின்றன. அத்துடன், அங்கீகரிக்கப்படாத வழிகள் மூலம் விநியோகஸ்தர்களுக்கு நிதி மாற்றம் இடம்பெறுவதில்லை. வாடிக்கையாளர்களுக்கு மேலும் ஒரு நன்மை யாதெனில், தேவைப்படும்போது முகவர்கள் மூலம் தமது வாகனங்களை அவர்கள் மேம்படுத்த முடியும் என்பதுடன், அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் மூலம் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு மீள்விற்பனையின் போது அதிக மதிப்பு காணப்படுகிறது.
இது குறித்து கருத்துத் தெரிவித்த CMTA இன் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் தரங்க குணவர்தன, “மறைமுக இறக்குமதிகளின் அதிகரிப்பானது, நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் தேசிய பொருளாதாரம் ஆகிய இரண்டு விடயங்களிலும் தீவிரமான கவலைகளை உருவாக்கியுள்ளது. இந்த விழிப்புணர்வு பிரசாரத்தின் மூலம், நுகர்வோர் தகவலறிந்த முடிவுகளை எடுக்க உதவுவதும், அங்கீகரிக்கப்பட்ட முகவர் மூலம் ஒரு புதிய வாகனத்தை கொள்வனவு செய்வதன் மூலம், அவர்கள் உண்மையான பெறுமதியையும், ‘மன அமைதி’ மற்றும் சரியான வழியிலான பணப் பரிவர்த்தனைகளையும் மேற்கொள்கின்றார்கள் என்பதை புரிந்துகொள்ளச் செய்வதே எமது நோக்கமாகும்.” என்றார்.
2025 பெப்ரவரியில் இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, பல்வேறு வழிகள் மூலமான வாகன இறக்குமதியானது, துரிதமான அதிகரிப்பை காட்டுவதோடு, வாகன பதிவுகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பையும் காட்டுகின்றன. இந்த வாகனங்கள், அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் மூலமான இறக்குமதிகளைப் போலல்லாமல், முக்கியமான எந்தவொரு பாதுகாப்பு ஆய்வுகளுக்கோ, உத்தரவாதச் செயன்முறைகளுக்கோ அல்லது மீளழைப்பு நடவடிக்கைகளுக்கோ உட்படுத்தப்படுவதில்லை. இது பாதுகாப்பு அல்லது உதவியை வழங்காமல் கொள்வனவாளரை நீண்ட கால அடிப்படையில் கைவிட்டுவிடுகிறது.
இந்த நடவடிக்கையானது வெறுமனே நுகர்வோர் பாதுகாப்புக்கான உத்தரவாம் மட்டுமல்லாமல், இலங்கையின் வாகனத் தொழில்துறையை பாதுகாப்பதற்கும், சமமான போட்டித் தன்மையையும், அரசாங்க வருமானத்தை பாதுகாப்பதையும் நோக்கமாகக் கொண்டதென CMTA வலியுறுத்துகின்றது. வாகனத் துறையில் நெறிமுறைசார்ந்த வர்த்தகம், பாதுகாப்பு மற்றும் தரநிலைகளை உறுதி செய்யும் ஒழுங்குமுறைப்படுத்தும் முயற்சிகள் தொடர்பான அதன் தொடர்ச்சியான உதவியையும் சங்கம் மீண்டும் வலியுறுத்துகிறது. வாகனங்களை நுகர்வோர் கொள்வனவு செய்வதற்கு முன் தமது வாகனத்தின் மூலதாரத்தை சரிபார்க்கவும், CMTA இனால் அங்கீகரிக்கப்பட்ட முகவர்களிடம் இருந்து எப்போதும் புதிய வாகனங்களை கொள்வனவு செய்யவும் இந்தப் பிரசாரம் ஊக்குவிக்கிறது. இதன் மூலம், அனைவருக்கும் சிறந்த, பாதுகாப்பான, அதிக வெளிப்படையான, மற்றும் நிலைபேறான வாகனச் சூழல் தொகுதியை உருவாக்க அவர்கள் உதவுகிறார்கள்