‘ருஹுணு வட்டம்’: இலங்கையின் தென்கரையின் கதையை சொல்லும் ஒரு புதிய அத்தியாயம்

ஷங்ரி-லா (Shangri-La) ஹோட்டலினால் ஆரம்பிக்கப்பட்ட ஒரு தொலைநோக்குக் கருத்தாக்கமான ‘ருஹுணு வட்டம்’ (Ruhunu Ring) மூலம், இலங்கையின் தெற்கு கரையோரப் பகுதியானது, ஒரு முதன்மையான பயணத் தலமாக உத்தியோகபூர்வமாக அதற்கே உரித்தான  இடத்தைப் பிடித்துள்ளது. இக்கருத்தாக்கமானது, அப்பகுதியின் கதையைக் கூறுவதற்கும் சுற்றுலா விரிவாக்கத்தை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில், 2025 இலங்கைச் சுற்றுலா எக்ஸ்போ (Sri Lanka Tourism Expo 2025) நிகழ்வின் இறுதி நிகழ்வு மற்றும் 2025 சர்வதேச சுற்றுலாத் தலைவர்கள் உச்சிமாநாடு (International Tourism Leaders Summit 2025) ஆகிய நிகழ்வுடன் இதன் அறிமுக நிகழ்வு இடம்பெற்றது.

ருஹுணு வட்டம் எனப்படுவது, 1978 கலாசார முக்கோண வலயத்திற்குப் (Cultural Triangle) பின்னர் அறியப்படும் இலங்கையின் முதலாவது பாரிய பயணப் பாதையாகும். இது, மேற்கு கடற்கரையில் உள்ள பெந்தோட்டையில் இருந்து கிழக்குக் கரையில் உள்ள அறுகம் குடா வரை நீண்டு, எல்லை பிரதேசம் வரை பரந்துபட்டுள்ளது. இது தங்கக் கடற்கரைகள், வனவிலங்கு சரணாலயங்கள், வன மடாலயங்கள், கறுவாத் தோட்டங்கள் மற்றும் கடல் அலை சறுக்கல் நகரங்களை சுற்றுலாவின் கதையாக இணைத்து, நாட்டின் மிகவும் வசீகரமான, ஆனால் மிகவும் குறைவாக அறியப்பட்ட இடங்களை ஒன்றிணைக்கிறது. இது வனஜீவராசிகள், உணவுகள், சாகசங்கள் மற்றும் விளையாட்டுகள், உடல் ஆரோக்கிய அம்சங்கள், கலாசார விடயங்கள் ஆகிய 5 எண்ணக்கருக்களை உள்ளடக்கிய பயணங்களை ஒன்றிணைக்கிறது.

கண்டுபிடிப்புகளின் ஐந்து வட்டங்கள்

  • வனவிலங்கு வட்டம் – 12 அதிசய முனைகள்

யால பகுதியில் உலகின் மிக அதிகம் செறிந்த சிறுத்தைகள், மிரிஸ்ஸவிற்கு அப்பால் உள்ள கம்பீரமான நீலத் திமிங்கலங்கள், உடவளவையில் ஆசிய யானைகள், அரிய கரடிகள், குமணவில் உள்ள உள்ளூர் பறவை இனங்கள், துடிப்பான கடல்வாழ் உயிரினங்கள் உள்ளிட்ட உலகின் மிக உயர்ந்த உயிர்ப்பல்வகைமை வாழ்விடங்களில் தென் பகுதியும் விளங்குகின்றது. சுற்றுலா பயணிகளால் உலகில் வேறு எங்கும் இவ்வாறு சில மணிநேரப் பயணத்தில் திமிங்கலங்கள், யானைகள் மற்றும் சிறுத்தைகளைச் சந்திக்க முடியாது.

  • சமையல் வட்டம் – கறுவா மற்றும் கடல்

தென்னிலங்கையின் சமையல் கதையானது மசாலா, பாரம்பரியம் மற்றும் கடலோரச் செழுமை ஆகியவற்றைக் கொண்டதாகும். காரமான மீன் கறிகள் மற்றும் செவ்விளநீர் முதல் கறுவா தோட்டங்கள், தங்காலை கடற்கரை தீயினால் சுட்ட உணவுகள், காலிக் கோட்டையில் காலை உணவை பகல்நேரத்துடன் சேர்த்து ருசிக்கும் மாறுபட்ட உணவுகள் மற்றும் எல்ல பகுதியில் மெதுவாக காய்ச்சப்படும் கோபி வரை, இந்தப் பிராந்தியமானது உண்மையான சுவைகளின் கலவையாகும். இது உணவை மட்டுமல்ல, அதன் பின்புலத்தில் உள்ள மரபுகளையும் மக்களையும் கொண்டாடுகிறது.

  • சாகசம் மற்றும் விளையாட்டு வட்டம் – தனிநபர்கள் முதல் குடும்பங்கள் வரை

சாகசமே இந்த வட்டத்தின் இதயத் துடிப்பாகும். வெலிகம, ஹிரிகெட்டிய, அறுகம்பை ஆகியவற்றில் அலைச் சறுக்கல்கள், எல்ல பகுதியில் சூரிய உதய காட்சி பயணங்கள், கறுவா காட்டுப் பாதைகள் வழியான சைக்கிள் பயணங்கள், ஆழ்கடல் மீன்பிடி, படகுச் சவாரி, கூடாரம் அமைத்தல், காலி சர்வதேச மைதானத்தில் கிரிக்கெட் மற்றும் அம்பாந்தோட்டையில் கோல்ப் விளையாட்டு ஆகிய அனைத்தையும் இது உள்ளடக்கியுள்ளது. இது தனியாக பயணிப்போருக்கும், குடும்பங்கள் மற்றும் திகில் அனுபவங்களை தேடுவோருக்குமான விளையாட்டு மைதானமாகும்.

  • ஆரோக்கிய வட்டம் – ஆயுர்வேத மற்றும் முழுமையான நலன்

ருஹுணு வட்டம் ஆன்மாவுக்கான ஒரு புகலிடமாகவும் விளங்குகின்றது. பண்டைய ஆயுர்வேத சிகிச்சைகள், கடற்கரை யோகா, வன தியானம் மற்றும் முழு குணநலன்களுடனான இதம் தரும் சடங்குகள் மூலம் மாற்றத்தை ஏற்படுத்தும் ஆரோக்கிய அனுபவங்களை இலங்கையின் தென் பகுதி வழங்குகிறது. தங்காலையின் கடற்கரைகளில் சூரிய உதய யோகா அமர்வுகள் முதல் எல்லவில் உள்ள மழைக்காடுகளின் பின்புலங்கள் வரை, இங்கு ஆரோக்கியமானது காலத்தின் போக்காக அன்றி, ஒரு வாழ்க்கை முறையாக அமைகின்றது.

  • கலாசார வட்டம் – வரலாறு • வாழ்க்கை முறை • திருவிழாக்கள்

கலாசாரம் தெற்கின் விகாரைகள், திருவிழாக்கள், கைவினைப்பொருட்கள் மற்றும் அன்றாட அம்சங்களில் வாழ்கின்றது. காலிக் கோட்டையின் கூழாங்கல் தெருக்கள் முதல் கதிர்காமத்தின் யாத்திரைகள், முல்கிரிகலையின் பாறை விகாரைகள், அம்பலாங்கொடையின் முகமூடிகள் மற்றும் மேளம் இசைக்கும் மரபுகள், ரன்மினிதென்ன சினிமா கிராமம் மற்றும் ஹபராதுவையில் உள்ள கறுவா கைவினைப்பொருட்கள் வரை, இது அசைவின்றி கிடக்கும் ஒரு அருங்காட்சியகமாக அன்றி, உயிரோட்டமான பாரம்பரியமாக விளங்குகின்றது. திருவிழாக்களும் சடங்குகளும் வருடாந்தம் இடம்பெறுவதோடு, பயணிகளுக்கு இலங்கையின் உயிரோட்டத்தை பார்வையிடுவதற்கான ஜன்னலை திறக்கின்றது.

ஒத்துழைப்புக்கான தேசிய அழைப்பு

இந்த முயற்சிக்கு இலங்கைச் சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தலைவர் புத்திக ஹேவாவசம் தனது ஆதரவை தெரிவித்தார். அவர் பயண இடங்களின் கவர்ச்சியை மேம்படுத்த அரச – தனியார் ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

அவர் தெரிவிக்கையில், “இலங்கையின் சுற்றுலாத் துறைக்கு பாரம்பரிய ரீதியான தொடு புள்ளிகளுக்கு அப்பால், துணிச்சலான புதிய விடயங்களின் தேவைப்பாடு உள்ளது. ருஹுணு வட்டம் அதையே குறிக்கிறது. மேல் மற்றும் தென் மாகாணங்களில் இருந்து கிழக்கு நோக்கி நீண்டு செல்லும் தெற்கின் முழுத் திறனையும் வெளிப்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பாகும். இந்த பிராந்தியம் நாட்டின் மிகவும் கவர்ச்சிகரமான மற்றும் பெரிதும் அறியப்படாத இடங்களைக் கொண்டுள்ளது. அதன் பலமானது அசல் தன்மை, பல அடுக்குஅனுபவங்கள், வாழும் நிலப்பரப்புகள் ஆகியவற்றிலேயே உள்ளதே அன்றி, மேடையில் கொண்டாடும் சுற்றுலாவில் அல்ல.” என்றார்.

தனியார் துறையால் ஆரம்பிக்கப்பட்ட இடங்களை கவரும் முதலாவது மிகப் பெரும் திட்டம் இது என்றும், “இது பிராந்திய மற்றும் தேசிய வளர்ச்சிக்கு மகத்தான வாக்குறுதியை கொண்டுள்ளது” என்றும் அவர் குறிப்பிட்டார். “இந்த தொலைநோக்கு பார்வையை உயிர்ப்பிக்க, ஹோட்டல் உரிமையாளர்கள், அதனை செயற்படுத்துபவர்கள் மற்றும் சமூகங்களை எம்முடன் இணையுமாறு நாம் அழைப்பு விடுக்கிறோம். இது மக்களுடன் ஒரு ஈடுபாட்டை ஏற்படுத்துவதற்கும், வருமானம் ஈட்டுவதற்கும், அனைவரையும் உள்ளடக்கிய சுற்றுலா மேம்பாட்டுக்கான புதிய வழிகளை உருவாக்குவதற்கும் உதவும். இலங்கை ஒரு சுற்றுலாத் தலமாகக வளர்ச்சியடைய வேண்டுமானால், தனியார் மற்றும் அரச துறைகள் கைகோர்த்துச் செயற்பட வேண்டும். அந்த ஒத்துழைப்புக்கான கட்டமைப்பை ருஹுணு வட்டம் வழங்குகிறது.” என்றார்.

ஷங்கிரி-லா அம்பாந்தோட்டை ஹோட்டல் பொது முகாமையாளர் ரெபான் ரசீன் தெரிவிக்கையில், “இது ஒரு திட்டம் மாத்திரமல்ல; இது ஒரு இடத்தின் இலக்கை அடைவதற்கான கதையாகும். ருஹுணு வட்டம் இலங்கையின் தெற்கிற்கு அதன் சொந்த அடையாளத்தை வழங்குகிறது. இது உலகெங்கிலும் உள்ள பயணிகளை ஊக்குவிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு சக்திவாய்ந்த, ஒத்திசையும் கதை ஆகும்.” என்றார்.

ஒரு முக்கிய தருணம்: ஷங்கிரி-லா அம்பாந்தோட்டையின் பொது முகாமையாளர் ரெபான் ரசீன், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் ஒரு டோக்கனை வழங்கி வைத்ததன் மூலம் இடத்தின் கதைசொல்லலில் ஒரு புதிய அத்தியாயமான ருஹுணு வட்டத்தின் உத்தியோகபூர்வ வெளியீடு கொண்டாடப்படுகிறது.

ருஹுணு வட்டம் உத்தியோகபூர்வமாக 2025 ஒக்டோபர் 02ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. ஒரு பகிரப்பட்ட தொலைநோக்குப் பார்வையின் கீழ், ஹோட்டல் உரிமையாளர்கள், விமான நிறுவனங்கள், தலங்ளை முகாமைத்துவம் செய்வோர், செயற்படுத்துவோர், மாகாண சபைகள், கலாசார மற்றும் வனஜீவராசி அதிகாரிகள் மற்றும் சமூகங்களை ஒன்றிணைப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. முயற்சிகளைச் சீரமைப்பதன் மூலம், 1978 இல் கலாசார முக்கோணம் ஏற்படுத்திய மாற்றத்தின் தாக்கத்தைப் பிரதிபலிக்கும் வகையில், இலங்கையின் தெற்கை உலகளாவிய ரீதியில் அங்கீகாரம் பெற்ற இடமாக உயர்த்த இது முயற்சிக்கிறது.

டிஜிட்டல் தளம் தற்போது செயற்பாட்டில்

இந்த முயற்சியை ஆதரிக்க, www.ruhunuring.com எனும் பிரத்தியேக இணையத்தளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது பங்குதாரர்கள் மற்றும் பயணிகள் ஆகிய இருவருக்கும் திட்டமிடப்பட்ட பயண ஒழுங்குகள், பாதை வரைபடங்கள், கதைசொல்லும் உள்ளடக்கங்கள், புகைப்படங்கள் மற்றும் ஊடக வளங்களை வழங்குகிறது.

Ends

Image Caption
ருஹுணு வட்டம் – கலாசார ரீதியான சின்னம்

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *