2025 ஸ்ரீ லங்கா பரோமீட்டர் (SLB) ஆய்வு அறிக்கையானது இன்று, கொழும்பு தாஜ் சமுத்திராவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை நடாத்தப்படும் இக்கருத்தாய்வானது, பொது மக்களிடமிருந்து பெறப்படும் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு, ஆயுத மோதலுக்கு பின்னரான நல்லிணக்கம், ஆளுகை மற்றும் குடிமக்கள் ஈடுபாடு போன்ற முக்கிய துறைகளில் பொதுமக்களின் கருத்து காலவோட்டத்தில் மாறுபடும் போக்கை கண்காணிக்கின்றது.
ஸ்ரீ லங்கா பரோமீட்டரானது இத்தரவுகளை அடிப்படையாகக்கொண்டு பொதுமக்கள் கருத்தாடல், கொள்கை உருவாக்கம் மற்றும் நாட்டில் நல்லிணக்கம் மற்றும் சமூக ஒற்றுமையினை மேம்படுத்துவதற்கான சிவில்சமூக முனைப்புக்கள் போன்றவற்றிற்குத் தேவையான தகவல்களை வழங்குவதனை நோக்காகக் கொண்டிருக்கின்றது. ஸ்ரீ லங்கா பரோமீட்டரானது, இலங்கையில் சமூக ஒற்றுமை மற்றும் சமாதானத்தினை வலுப்படுத்தல் (SCOPE) எனும் திட்டத்தினால் ஆதரவளிக்கப்பட்டு, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஜேர்மன் பெடரல் வெளிநாட்டு அலுவலகம் ஆகியவற்றினால் கூட்டாக நிதியனுசரணை அளிக்கப்பட்டு, இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து GIZ இனால் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
2025 இன் SLB ஆய்வு அறிக்கையானது, 2024/2025 காலப்பகுதிகளில் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தின் மத்தியில் மக்கள் நல்லிணக்கத்தினை எவ்வாறு புரிந்துகொள்கின்றார்கள், அதனை எவ்வாறு அனுபவிக்கின்றார்கள் என்பதனை ஆய்வுசெய்கின்றது. பல கண்டடைவுகள் மக்கள் மாற்றத்திற்கான எதிர்பார்ப்புகளை வெளிப்படுத்தினாலும், உண்மையான முன்னேற்றம் குறித்த அவர்களது பார்வைகள் இன்னும் வரையறுக்கப்பட்டும் பன்முகப்படுத்தப்பட்டதாகவும் உள்ளது. இவ்வறிக்கையானது நல்லிணக்கம் என்பது நிரந்தர இலக்கு அல்ல, மாறாக நம்பகத்தன்மை, உள்ளடக்கம் மற்றும் தொடர்ச்சியான செயற்பாடுகளால் உருவாகும் ஒரு நடைமுறை என்பதை வலியுறுத்துகின்றது. இவ்வறிக்கையை http://www.srilankabarometer.lk/publications இல் பெற்றுக்கொள்ளலாம்.
அரச, சிவில்சமூக, கல்விப்புலம் சார்ந்த, ஊடகத்தினைச் சேர்ந்த பங்காளர் மற்றும் ராஜதந்திர பிரதிநிதிகளை ஒருங்கிணைத்த உயர் மட்ட வெளியீட்டு விழாவாக இது அமைந்தது. விசேட பிரமுகர்களாக சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் பிரதி அமைச்சர், கௌரவ. முனீர் முல(f)ப்பர்; இலங்கை மற்றும் மாலைத்தீவிற்கான ஐரோப்பிய ஒன்றிய தூதுவர், மாண்புமிகு கார்மன் மொரேனோ; இலங்கை மற்றும் மாலைத்தீவிற்கான ஜெர்மனி கூட்டாட்சி குடியரசு தூதுவர் மாண்புமிகு கலாநிதி பிலீக்ஸ் நியூமான் மற்றும் தென்னாபிரிக்காவின் உயர்ஸ்தானிகர் மாண்புமிகு சண்டிலே எட்வின் ஸ்சால்க் ஆகியோர் கலந்து கொண்டனர்.
“ஸ்ரீ லங்கா பரோமீட்டர் கருத்தாய்வானது, நாட்டின் குடிமக்கள், நல்லிணக்கத்தையும் ஆளுகையையும் எவ்வாறு காண்கிறார்கள் என்பதற்கான முக்கிய விளக்கங்களை வழங்குகிறது,” எனவும் “மக்களின் கருத்துக்களை தேசிய மட்ட கலந்துரையாடல் தளங்களுக்கு கொண்டுவரும் முயற்சிகளுக்கு தங்களது ஆதரவை வழங்குவதில் ஐரோப்பிய ஒன்றியம் பெருமை அடைகிறது” என்றும் தூதுவர் மொரெனோ தெரிவித்தார்.

தூதுவர் நியூமன் குறிப்பிட்டதாவது, “இவ்வறிக்கையானது இலங்கையர்கள் தங்களின் குடியுரிமைகளையும் பொறுப்புகளையும் முன்பை விட அதிகமாக உணர்ந்திருப்பதைக் காட்டுகிறது. இக்கண்ணோட்டங்களைப் புரிந்துகொள்வது நம்பிக்கையை உருவாக்கவும் நிலையான சமாதானத்தை முன்னேற்றவும் முக்கியமானது. ஸ்ரீ லங்கா பரோமீட்டரை ஒரு பகுப்பாய்வு கருவியாக மட்டுமல்லாது, செயலில் ஈடுபடுத்தும் கருவி ஆகவும் உருவாக்கியதற்கு ஆதரவளித்ததற்காக ஜெர்மனி பெருமிதம் கொள்கின்றது.”
மேலும், பொதுமக்களின் பங்கேற்பை அதிகரிக்கும் நோக்கில், SLB தனது இணையதளம் http://www.srilankabarometer.lk மூலமாக புதிய இணைய தரவுப்பகுப்பாய்வு கருவியை வெளியிட்டது. இந்த ஊடாடும் கருவியானது, 2020, 2021, 2023 மற்றும் 2025 ஆகிய நான்கு ஆண்டுகளின் கருத்தாய்வு முடிவுகளை பொது மக்களின் அணுகலுக்கு வழங்குகிறது. இது ஆராய்ச்சியாளர்கள், ஊடகவியலாளர்கள், கொள்கை வடிவமைப்பாளர்கள் மற்றும் குடிமக்கள் ஆகியோருக்கு தரவுகளை விரிவாக ஆராயும் வசதியை ஏற்படுத்துகின்றது.
நிறுவனத்தின் நிலைத்திருக்கும் தன்மைக்கான மிக முக்கிய படிமுறையாக, இவ்விழாவில் “த இன்சைட்ஸ் இனிசியேட்டிவ் (The Insights Initiative)” என்ற புதிய ஆய்வு நிறுவனம் அறிமுகப்படுத்தப்பட்டது. இது எதிர்காலத்தில் ஸ்ரீ லங்கா பரோமீட்டரை முன்னெடுத்து செல்வதோடு, உள்ளூர் உரிமை உணர்வை வலுப்படுத்துதல், ஆய்வு திறனை மேம்படுத்துதல் மற்றும் பொதுக்கருத்தாடல்களுக்கும், கொள்கை உருவாக்கத்திற்கும் தேவையான பெருமளவிலான தரவுகளை வழங்குவதையும் குறிக்கோளாகக் கொண்டுள்ளது. மேலும், நல்லிணக்கம், சமூக ஒற்றுமை மற்றும் பொறுப்புக்கூறலுடனான ஆட்சியை முன்னேற்றம் செய்வதில் ஈடுபட்டுள்ள கல்வியியலாளர்கள், செயற்பாட்டாளர்கள் மற்றும் தன்னார்வத்தொண்டர்களைக்கொண்ட வளர்ந்துவரும் வலையமைப்புகளின் மையமாகவும் இது செயல்படும்.