
இந்திய பாரம்பரியக் கைத்தறித் தொழில் மரபையும், நிலைபேறான நாகரிகத்தையும், பொறுப்புள்ள வாழ்க்கை முறையையும் கொண்டாடும் இந்தியாவின் மிகப் பிரபலமான பாரம்பரிய வாழ்க்கைமுறை வர்த்தகநாமமான Fabindia நிறுவனம், இலங்கையில் தங்களது முதலாவது காட்சியறையை Havelock City Mall இல் கோலாகலமாக திறந்து வைத்துள்ளது. இந்திய உயர் ஸ்தானிகர் மேன்மை தங்கிய சந்தோஷ் ஜா அவர்கள் பிரதான விருந்தினராக கலந்துகொண்ட இந்த நிகழ்வில், Fabindia பிரதிநிதிகள் மற்றும் முக்கிய விருந்தினர்கள், ஊடகங்கள் மற்றும் கொழும்பிலுள்ள பிரபலங்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நேர்த்தியான கைத்திறன் மற்றும் பொறுப்புள்ள நுகர்வை பிரதிபலிக்கும் இவ்வர்த்தகநாமத்தின் வருகையை இந்நிகழ்வு கொண்டாடியது.
Fabindia, நிலைபேறான நவநாகரிகத்தை வழங்கும் பொருட்டு, இந்தியாவின் மிகப்பெரிய தனியார் சில்லறை விற்பனைத் தளங்களில் ஒன்றாக 1960ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்நிறுவனம் 55,000 இற்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் கிராமியக் கைத்தறி கலைஞர்களை உலக சந்தைகளுடன் இணைக்கும் பாலமாகச் செயற்படுகிறது. இயற்கை மூலப்பொருட்கள், நெறிமுறை ரீதியான வளப் பயன்பாடு மற்றும் சமூக வலுவூட்டல் ஆகியன தொடர்பான அர்ப்பணிப்புக்காக நன்கு அறியப்பட்ட Fabindia, ஸ்டைலான வீட்டு அலங்காரம் முதல் வாழ்க்கைமுறை பயன்பாட்டு பொருட்கள், இயற்கையான பருத்தி மற்றும் பட்டு ஆகியவற்றால் உற்பத்தி செய்யப்பட்ட ஆடைகள் வரை பரந்த அளவிலான தயாரிப்புகளை வழங்குகிறது.
கொழும்பில் தற்போது திறந்து வைக்கப்பட்டுள்ள புதிய காட்சியறையில், இவ்வர்த்தகநாமத்தின் இயற்கையான மற்றும் அழகியல் கைவினை வடிவமைப்பு தோற்றப்பாடுகளை காணலாம். இது இந்திய கைவினை அழகியலோடு இலங்கை கலாசாரத்துடன் சிறப்பாக இணைக்கிறது. மிகக் கவனமாக தெரிவு செய்யப்பட்ட, Fabindia வர்த்தகநாமத்தின் தனித்துவமான பாரம்பரிய உடைகள் மட்டுமன்றி, உள்ளூர் விருப்பங்களுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்ட உயர்தர மேற்கத்திய ஆடைகளும் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த திறப்பு விழாவில் கலந்துகொண்ட விருந்தினர்கள், இலங்கை சந்தைக்காக Fabindia நிறுவனத்தினால் விசேடமாக வடிவமைக்கப்பட்ட ஆடை அணிகலன்களை முதன்முறையாகக் காணும் வாய்ப்பைப் பெற்றனர்.
இலங்கைச் சந்தைக்கென சிறப்பாக வடிவமைக்கப்பட்ட Fabindia நிறுவனத்தின் புதிய தொகுப்புகளை அறிமுகம் செய்யும் இந்நிகழ்வில் கலந்து கொண்ட Fabindia Ltd நிறுவனத்தின் விற்பனை தலைவர் அஜய் கபூர் கருத்துத் தெரிவிக்கையில், “இலங்கைக்கு Fabindia வர்த்தகநாமத்தை அறிமுகப்படுத்துவதில் நாம் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம். இது வெறுமனே ஒரு வணிகத்தின் விரிவாக்கம் அல்ல; இது நீடித்த பெறுமதி, இணைந்த பாரம்பரியம் மற்றும் காலத்தால் அழியாத அழகின் திருவிழாவாகும். இலங்கையின் சில்லறை வணிகத் துறையில் இணைவதில் நாம் பெருமை கொள்கிறோம்.” என்றார்.
சுதேசி நிறுவனத்தின் பிரதித் தலைவரும் முகாமைத்துவ பணிப்பாளருமான திருமதி சூலோதரா சமரசிங்க கருத்து வெளியிடுகையில், “இலங்கைக்கு Fabindia நிறுவனத்தை அறிமுகப்படுத்துவதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம். அத்துடன் நிலைபேறான பேஷனுக்கான இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் மிகவும் புகழ்பெற்ற சில்லறை விற்பனை வர்த்தகநாமங்களில் ஒன்றான Fabindia நிறுவனத்துடன் இணைந்து செயற்படுவதிலும் நாம் மகிழ்ச்சி அடைகிறோம். Fabindia என்பது ஒரு விற்பனை வர்த்தகநாமத்திற்கு அப்பாற்பட்டதாகும். இது கைவினைத்திறனை கொண்டாடுவதோடு, பாரம்பரியத்தின் கலையை தற்கால உலகிற்கு ஏற்றவாறு மீள் வடிவமைத்து, பாரம்பரியக் கலையின் வாழ்வை பிரதிபலிக்கிறது.” என்றார்.
Fabindia வர்த்தகநாமத்தின் Havelock City Mall காட்சியறையில், கைவினைத்திறனுடன் உருவாக்கப்பட்ட பாரம்பரிய மற்றும் நவீன மேற்கத்திய வடிவமைப்புகளில் அமைந்த உள்ளத்தை கவரும் மகளிர் மற்றும் ஆடவர்களுக்கான ஆடைகள், கைப்பைகள் மற்றும் அணிகலன்கள், வீட்டை அழகுபடுத்தும் பொருட்கள், ஆரோக்கியம் சார்ந்த பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு விதமான பொருட்கள் காணப்படுகின்றன. இன்று, Fabindia நிறுவனம் அதன் கதவுகளை கொழும்பிலுள்ள Havelock City Mall இல் திறக்கின்ற இந்த தருணமானது, Fabindia வின் இலங்கைக்கான பயணத்தின் ஒரு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தருணமாகும்.
Fabindia Ltd. நிறுவனம் 1960 ஆம் ஆண்டு நிறுவப்பட்டதோடு, அதன் முதலாவது விற்பனை நிலையம் புதுடில்லியில் திறந்து வைக்கப்பட்டது. கைவினைத் திறனை நவீன வடிவமைப்புகளுடன் இணைத்து, இந்தியாவின் செழுமையான பாரம்பரியத்தை கொண்டாடும் 65 வருட பாரம்பரியத்தை Fabindia கொண்டுள்ளது. இந்தியா முழுவதும் 127 நகரங்களில் 340 இற்கும் மேற்பட்ட வர்த்தக நிலையங்களையும் 7 நாடுகளில் 11 சர்வதேச விற்பனை நிலையங்களையும் இந்நிறுவனம் கொண்டுள்ளது. இவ்வர்த்தகநாமத்தின் தயாரிப்புகளில் ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கான இந்திய மற்றும் மேற்கத்திய ஆடைகள் உள்ளடங்குகின்றன.
பல ஆண்டுகளாக நகைகள், கைப்பைகள், காலணிகள், வீட்டுப் பயன்பாட்டு உபகரணங்கள், அலங்காரப் பொருட்கள், தளபாடங்கள், பரிசுப் பொருட்கள், இயற்கை உணவுகள் மற்றும் தனிநபர் பராமரிப்பு தயாரிப்புகள் ஆகியன அதன் தயாரிப்பு வரிசையில் உள்ளடங்குகின்றன. அழகியலையும், கட்டுப்படியான விலையையும் இவ்வர்த்தகநாமம் ஒருங்கிணைக்கிறது. பாரம்பரிய நுட்பங்கள், திறமைகள் மற்றும் கைவினை செயன்முறைகளால் தயாரிக்கப்படும் பொருட்களுக்கான இந்தியாவின் மிகப்பெரிய தனியார் தளங்களில் ஒன்றாக Fabindia திகழ்கின்றது.
END