இது அவுஸ்திரேலியா அரசாங்கம் மற்றும் இலங்கை அரசாங்கம் இணைந்து வெளியிடும் கூட்டு ஊடக வெளியீடு
இலங்கையில் 18 மாவட்டங்களைச் சேர்ந்த, 32 பாடசாலைகளைச் சேர்ந்த 170 மாணவர்கள் பங்குபற்றிய, அவுஸ்திரேலியா அரசாங்கத்தின் ‘சீரோ சான்ஸ்’ (Zero Chance) சித்திரம் மற்றும் கட்டுரை போட்டியின் 2ஆவது போட்டித் தொடருக்கான பரிசு வழங்கும் விழா இன்று கொழும்பு BMICH இல் கொண்டாடப்பட்டது.
இலங்கையின் கல்வி அமைச்சு, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சுடன் இணைந்து, “ஏமாறாதிருப்போம் தவறு செய்யாதிருப்போம்” (Norawatemu Novaradimu) எனும் எண்ணக்கருவில் சட்டவிரோதமான அவுஸ்திரேலியாவுக்கான கடல்வழி குடிபெயர்வு எனும் தலைப்பில் 2024 ஜூன் முதல் ஓகஸ்ட் வரை இடம்பெற்ற போட்டித் தொடரில், 1,520 மாணவர்கள் தங்களது கலைப்படைப்புகள் மற்றும் கட்டுரைகளை வெளிப்படுத்தினர்.
இந்த பரிசு வழங்கும் விழாவில் உரையாற்றிய இலங்கைக்கான அவுஸ்திரேலியா உயர் ஸ்தானிகர் திரு. போல் ஸ்டீபன்ஸ், இந்த முயற்சியானது அவுஸ்திரேலியா அரசாங்கத்தின் சீரோ சான்ஸ் செய்தியை வலுப்படுத்த உதவியதோடு, பாதிக்கப்படக்கூடிய இலங்கையர்கள் இது போன்ற பயணங்களை மேற்கொள்வதிலிருந்து தடுப்பதை உறுதி செய்கிறது என்றார்.
போல் ஸ்டீபன்ஸ் மேலும் தெரிவிக்கையில்,
“சீரோ சான்ஸ் மூலோபாய தகவல்தொடர்பாடல் பிரசாரமானது கடல் வழியாக ஆபத்தான பயணங்களை மேற்கொள்வதிலிருந்து மக்களைத் தடுப்பதற்கும், அவர்களுக்கு இது பற்றித் தெரிவிப்பதற்கும், விழிப்பூட்டுவதற்கும் வடிவமைக்கப்பட்டுள்ளது. 2024 சீரோ சான்ஸ் சித்திரம் மற்றும் கட்டுரை போட்டியின் ஆக்கங்களை மதிப்பீடு செய்ய எனக்கும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். அத்துடன் நான் பார்த்த ஆக்கங்கள் தொடர்பிலும் மகிழ்ச்சி அடைகிறேன். குறித்த எண்ணகருவை தங்களது சொந்த முயற்சியில் ஆக்கபூர்வமான படைப்புகள் மூலம் வெளிப்படுத்த மாணவர்கள் அருமையாக பணியாற்றியுள்ளனர். அத்துடன், இது பெருமளவான பாடசாலைகளில் ஏற்படுத்தியுள்ள பங்கேற்பானது ஒப்பிட முடியாததாகும். இதற்காக ஆதரவளித்த அமைச்சு, பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி” என்றார்.
இந்த விழாவில் அவுஸ்திரேலியாவுக்கான பிரதி உயர் ஸ்தானிகர் திருமதி லலிதா கபூரும் கலந்து கொண்டார்.
9 முதல் 11 வயது மற்றும் 12 முதல் 13 வயது வரையிலான இரண்டு வயதுக் குழுக்களாகப் பிரிக்கப்பட்டு இடம்பெற்ற இந்த போட்டியின் ஆக்கங்கள், கல்வி அமைச்சு, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சினால் நியமிக்கப்பட்ட 14 நடுவர்களால் மதிப்பீடு செய்யப்பட்டு வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.
மாணவர்கள் தங்களது ஆக்கங்களை உருவாக்குவதற்கு முன்னர் அவர்களுக்கு இந்த எண்ணக்கரு தொடர்பில் எந்தவொரு முறையான தகவலும் கிடைக்கப் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது என, திரு. ஸ்டீபன்ஸ் இங்கு சுட்டிக்காட்டினார்.
“குறிப்பாக நடுவர்கள் குழுவின் ஒருமித்த கருத்தானது, இங்கு ஒரு முக்கிய விடயமாக காணப்படுகின்றது. வெளிப்படுத்தப்பட்ட புரிதல், விமர்சன சிந்தனை மற்றும் அறிவின் ஆழம் ஆகியன தொடர்பில் நடுவர்கள் மிகவும் ஈர்க்கப்பட்டனர். அவர்கள் வழங்கிய பின்னூட்டம் மிகச் சிறப்பானதாகவும் உண்மையானதாகவும் இருந்தது. சீரோ சான்ஸ் சித்திரம் மற்றும் கட்டுரை போட்டியில் முன்வைக்கப்பட்ட முன்னோக்குகள் என்னை மிகவும் ஊக்கப்படுத்தியுள்ளன. ஏனெனில் அவை அமைதியான சகவாழ்வின் முக்கியத்துவத்தைப் பற்றி பேசுவதோடு, சட்டவிரோத இடம்பெயர்வின் மூலமான ஆபத்துகள் தொடர்பில் பாதிக்கப்படக்கூடிய இலங்கையர்களுக்கு எச்சரிக்கையை ஏற்படுத்துகின்றன” என திரு. ஸ்டீபன்ஸ் மேலும் குறிப்பிட்டார்.
இந்த முயற்சி குறித்து கருத்துத் தெரிவித்த கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ, “எமது நட்பை மேலும் வலுப்படுத்தவும், இந்த சவாலை உரிய முறையில் எதிர்கொள்ளவும், சட்டவிரோத இடம்பெயர்வின் ஆபத்துகள் மற்றும் அது மக்களின் உயிருக்கு ஏற்படுத்தும் அச்சுறுத்தல்களை எடுத்துக்கூறும் பல்வேறு சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக நடத்த இரு நாடுகளும் ஒத்துழைத்துள்ளன. இது உண்மையில் ஒரு பாராட்டத்தக்க சாதனையாகும்” என்றார்.
இந்த திட்டங்களில், “அவுஸ்திரேலியாவுக்கு படகில் பயணம் செய்ய முயற்சிப்பது ஒரு முட்டாள்தனமான செயல்” எனும் தலைப்பின் கீழ், 15 மாவட்டங்களைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களை அணுகி, 2023 இல் முதல் முறையாக கட்டுரை மற்றும் கலைப் போட்டியைத் ஆரம்பித்தோம். வெற்றியாளர்களுக்கு, தேசிய தொழிற்பயிற்சி நிறுவனத்தின் கணனிப் பாடநெறி புலமைப்பரிசிலாக வழங்கப்பட்டது. இந்த வெற்றியின் அடிப்படையில், இரண்டாவது கட்டம் 2024 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 2025 ஆம் ஆண்டு மார்ச் 01 ஆம் திகதி BMICH இல் இடம்பெற்ற விருது விழாவில் நிறைவடைந்தது. இந்த இளம் மனங்களின் நம்பமுடியாத படைப்பாற்றலை பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் மூலம் நாம் வெளிப்படுத்தினோம்.
வெற்றி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் மற்றும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு இணைந்து கையொப்பமிட்ட சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கணனி அடிப்படையிலான மென்பொருட்கள் தொடர்பான புலமைப்பரிசில் வழங்கப்பட்டதோடு, சித்திரப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கிரபிக் டிசைன் (Graphic Design) தொடர்பான புலமைப்பரிசில் வழங்கப்பட்டது. இந்த இரண்டு பயிற்சி நெறிகளும் இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபையால் முன்னெடுக்கப்படுகின்றன.
அவுஸ்திரேலியாவின் எல்லைப் பாதுகாப்புக் கொள்கைகள் பற்றிய மேலதிக தகவல்களுக்கு, www.australia.gov.au/zerochance எனும் இணையத்தளத்தைப் பார்வையிடவும்.