தங்க நகை உலகில் முடிசூடா மன்னனாக திகழும் ராஜா ஜுவலர்ஸ், 2024 ஆம் ஆண்டின் சிறந்த தேசிய தொழில்துறை வர்த்தகநாம விருது (Best National Industry Brand of the year 2024) வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இலங்கையின் இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் தொழில்துறையின் தலைவனாக தன்னை நிலைநிறுத்தியுள்ளது. அத்திட்டியவில் உள்ள ஈகிள்ஸ் லேக்சைட் கன்வென்ஷன் மண்டபத்தில் இவ்விருது விழா நடைபெற்றது. இந்நிகழ்வில், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, கைத்தொழில் அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி, கைத்தொழில் மற்றும் தொழில்முனைவு பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்க, அமைச்சின் செயலாளர் திருமதி திலகா ஜயசுந்தர உள்ளிட்டோர் கலந்து கொண்டதோடு, பல்வேறு தொழில்முனைவோரும் பங்குபற்றியிருந்தனர்.
கைத்தொழில்துறை அமைச்சின் கீழுள்ள கைத்தொழில் அபிவிருத்தி சபையினால் (IDB) இவ்விருது விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் நாட்டின் பொருளாதாரத்தின் உயிர்நாடியாக இருந்து, சாதிக்க முடிந்த தொழில்துறைகளைக் கொண்டாடுவதற்கும் ஊக்கப்படுத்துவதற்கும், அந்தந்த துறைகளில் சிறந்த செயல்திறனுக்கான ஒரு கௌரவிப்பு நிகழ்வாக, 2024 தேசிய கைத்தொழில் வர்த்தகநாம விசேடத்துவ விருதுகள் முதன்முறையாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ராஜா ஜுவலர்ஸ் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் அத்துல எலியபுர இது பற்றித் தெரிவிக்கையில், “கடின உழைப்பை அங்கீகரிப்பதன் மூலமும், வாடிக்கையாளர் திருப்திக்கான அர்ப்பணிப்பை வலுப்படுத்துவதன் மூலமும் உரிய அங்கீகாரத்தை வழங்கியமைக்காக, தேசிய தொழில்துறை வர்த்தகநாம விருது ஒழுங்கமைப்பாளர்கள், அதன் நடுவர் குழு மற்றும் கைத்தொழில் அபிவிருத்தி சபை (IDB) ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார். அத்துடன் விழாவில் விருது வென்ற அனைவருக்கும் எலியபுர தனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
அது மாத்திரமன்றி, பாரிய மட்டத்தின் (இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் துறை) கீழ், சிறந்த தேசிய தொழில்துறை வர்த்தகநாமமாக, மதிப்புமிக்க 2024 தேசிய கைத்தொழில் வர்த்தகநாம விருது வழங்கி ராஜா ஜுவலர்ஸ் கௌரவிக்கப்பட்டுள்ளது. இது வெறுமனே விருது வென்றதற்கு அப்பால், நிறுவனத்தின் கைவினைத்திறன், புத்தாக்கம் மற்றும் 1928 இல் நிறுவப்பட்டதிலிருந்து ஆபரணத் தொழில்துறையின் பாரம்பரியத்திற்கான சான்றாகும்.
இந்த சந்தர்ப்பத்தில் ராஜா ஜுவலர்ஸ் நிறுவனத்திற்கு விருது வழங்கியமை தொடர்பில் இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவனத்திற்கும் (SLIM) கைத்தொழில் அபிவிருத்தி சபையுடன் இணைந்து சுமார் 20 கைத்தொழில் வல்லுநர்கள் அடங்கிய புகழ்பெற்ற நடுவர் குழுவின் பக்கச்சார்பற்ற மற்றும் சுதந்திரமான தீர்ப்புக்கும் எலியபுர நன்றி தெரிவித்தார்.
இந்த அங்கீகாரமானது, ராஜா ஜுவலர்ஸின் சுமார் ஒரு நூற்றாண்டு காலமாக காலத்தால் அழியாத நகை வடிவமைப்புகள் மீதான நம்பிக்கை மற்றும் ஆர்வத்தின் அடிப்படையில் தலைமுறை தலைமுறையாக கட்டமைக்கப்பட்டுள்ளதால், உயர் தரம், படைப்பாற்றல், புத்தாக்கம் மற்றும் வாடிக்கையாளர் திருப்தி ஆகியவற்றிற்கான அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பையும் பிரதிபலிக்கிறது. எதிர்கால தலைமுறையினர் இடையே இலங்கையில் மிகவும் நம்பகமான மற்றும் விரும்பப்படும் வர்த்தகநாமமாக இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் துறையில் தனது இருப்பை வலுப்படுத்தும் வகையில், ராஜா ஜுவலர்ஸ் மேலும் விரிவாக்கத்தை மேற்கொள்வதற்கான திட்டங்களையும் புதிய ஆபரண வடிவமைப்புகளுடன் தனது புத்தாக்கங்களைத் தொடர்ந்தும் முன்னெடுக்கும்.