வடமத்திய மாகாணத்தில் 6ஆவது தொழில் முனைவோர் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் பதிவுகளை ஆரம்பித்த தீவா கரத்திற்கு வலிமை

‘தீவா கரத்திற்கு வலிமை தொழில் முனைவோர் திறன் மேம்பாட்டுத் திட்டம்’ ஆனது, பெண் தொழில்முனைவோரை ஆதரிப்பதற்காக, Hemas Consumer Brands நிறுவனத்தின் முதன்மையான சலவை பராமரிப்பு வர்த்தகநாமமான தீவாவிற்கும் Women in Management (WIM) அமைப்பிற்கும் இடையேயான ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் ஒத்துழைப்பு முயற்சியாகும். இந்த நிகழ்ச்சித் திட்டம் 5 மாகாணங்களில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு, 275 இற்கும் மேற்பட்ட பெண் தொழில் முனைவோர் தமது தொழில்களை மேம்படுத்த வலுவூட்டி உள்ளது. இந்தத் திட்டமானது, இப்பெண்களுக்குத் தேவையான தொழில் முனைவுத் திறன்களை வழங்குவதன் மூலம், அவர்களின் தொழில்களை மேம்படுத்த உதவுவதோடு மட்டுமல்லாமல், நாட்டின் பொதுவான பொருளாதார வளர்ச்சிக்கும் பங்களிக்கிறது.

இத்திட்டத்தின் 6ஆவது கட்டமானது, ஒரு நாள் கருத்தரங்காக எதிர்வரும் 2024 ஒக்டோபர் 07ஆம் திகதி அனுராதபுரம் நுவரகம் பலாத்த மத்திய பிரதேச செயலகத்தில் மு.ப. 9.00 மணி முதல் நடாத்தப்படவுள்ளது. இந்த கருத்தரங்கானது, WIM அமைப்பின் தலைவர் கலாநிதி சுலோச்சனா சிகேராவினால் முன்னெடுக்கப்படும். WIM ஆனது, மிகவும் சவாலான தொழில் முனைவோர் உலகில் திறமைகள், அறிவு, தன்னம்பிக்கையுடன் பெண்களை வலுவூட்டுவதை நோக்கமாகக் கொண்ட மிகவும் வெற்றிகரமான நிகழ்ச்சித் தொடரின் ஒரு அங்கமாக விளங்குகின்றது. இந்த கருத்தரங்கானது சிங்கள மொழியில் முன்னெடுக்கப்படும்.

‘தீவா கரத்திற்கு வலிமை’ தொழில் முனைவோர் திறன் மேம்பாட்டுத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது முதல், தொழில்முனைவை பெண்கள் அணுகுகின்ற முறையை மாற்றியமைத்து, அவர்களை உற்பத்தியாளர்கள் எனும் நிலையிலிருந்து வெற்றிகரமான வணிக உரிமையாளர்களாக மாற உதவியுள்ளது. வணிகப் பதிவு, நிதி முகாமைத்துவம், விலை நிர்ணய உத்திகள், வாடிக்கையாளர் பராமரிப்பு, ஒன்லைன் சந்தைகள், வர்த்தகநாம பிரபலப்படுத்தல், பொதியிடல் போன்ற விடயங்களில் அவர்களுக்குத் தேவையான திறன்களை இந்தத் திட்டம் வழங்குகிறது. இந்த விடயங்கள் மூலம், பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் பெண்கள் தங்கள் வீட்டுப் பொருளாதாரத்தை தாமே முன்னின்று எதிர்கொள்ள தீவா உதவுகிறது.

தங்கொட்டுவ, யாழ்ப்பாணம், காலி, வெலிமடை, மாத்தளை உள்ளிட்ட இலங்கை முழுவதிலும் உள்ள பல்வேறு பிரதேசங்களில் ஏற்கனவே முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள இந்த திட்டமானது, 275 இற்கும் மேற்பட்ட பெண்கள் தமது வியாபாரங்களை ஆரம்பிப்பதற்கும் அவற்றை விரிவுபடுத்துவதற்கும் வலுவூட்டியுள்ளது. அந்த வகையில், அநுராதபுரத்தில் இடம்பெறவுள்ள இக்கருத்தரங்கானது, மாற்றத்தை ஏற்படுத்தும் இந்த முயற்சியின் 6ஆவது நிகழ்வைக் குறிக்கிறது. இதில் பங்கேற்க விரும்புபவர்களுக்கு ஒக்டோபர் 03ஆம் திகதி வரை விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்படும்.

வடமத்திய மாகாணத்தில் நடைபெறவிருக்கும் “தீவா கரத்திற்கு வலிமை” தொழில் முனைவோர் திறன் மேம்பாட்டு கருத்தரங்கில் இணைய ஆர்வமுள்ள எந்தவொரு பெண் தொழில்முனைவோரும், தீவா ஸ்ரீ லங்காவின் உத்தியோகபூர்வ Facebook பக்கத்தின் ஊடாக மேலதிக தகவல்களைப் பெறலாம். பெண் தொழில் முனைவோர், கருத்தரங்கில் உங்களுக்கான ஆசனங்களை முன்பதிவு செய்ய, 076 056 4734 எனும் இலக்கத்திற்கு WhatsApp, SMS அல்லது தொலைபேசி அழைப்பை மேற்கொள்ளலாம்.

Hemas Consumer Brands நிறுவனத்தின் சிரேஷ்ட வர்த்தகநாம  அலுவலரான, திருமதி பியூமி ராஜபக்ஷ இது பற்றிக் கருத்துத் தெரிவிக்கையில், “தீவாவின் ‘தீவா கரத்திற்கு வலிமை’ திட்டம் தொடர்பான எமது அர்ப்பணிப்பானது, “தொட்டிலை ஆட்டும் கைகளே உலகையும் ஆளுகிறது” எனும் பழமொழியில் இருந்து உருவானது. இந்த திட்டமானது, இன்றைய பொருளாதார சவால்களை எதிர்கொள்ளும் பெண்களை வலுவூட்டவும் அவர்களுக்கு ஆதாரவளிக்கவும் செயற்பட்டு வருகிறது. Women in Management (WIM) போன்ற அமைப்புகளுடனும், நுவரகம் பலாத்த மத்திய பிரதேச செயலகம் போன்ற உள்ளூராட்சி நிறுவனங்களுடனும் கூட்டுச் சேர்ந்து, தொழில் முனைவோர் உலகில் செழித்து வளர்வதற்கு தேவையான வழிகாட்டல்களையும் வளங்களையும் இதில் பங்கேற்கும் பங்கேற்பாளர்கள் பெறுகின்றனர்.” என்றார்.

தீவா கரத்திற்கு வலிமை திட்டத்தின் மூலம் பெண் தொழில்முனைவரை வலுவூட்ட தீவா உறுதியுடன் உள்ளது. தீவாவின் பரந்துபட்ட வர்த்தகநாம நோக்கத்தின் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக இந்த அர்ப்பணிப்பு விளங்குகின்றது. குடும்பங்களின் வலிமை மற்றும் ஆதரவாக மாறுவதை நிறுவனம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

Hemas Consumer Brands பற்றி

கடந்த 60 வருடங்களாக வீடு மற்றும் தனிநபர் பராமரிப்புத் தயாரிப்புகளின் இலங்கையின் முன்னணி உற்பத்தியாளராக திகழும் Hemas Consumer Brands நிறுவனம், குடும்பங்கள் சிறந்த நாளைய தினத்தை அனுபவிப்பதற்காக வலுவூட்டுவதில் கவனம் செலுத்துகிறது. இலங்கையில் நம்பகமான வீட்டுப் பெயர் வர்த்தக நாமமாக தங்களை நிறுவ உதவிய நுகர்வோரை மையமாகக் கொண்ட முன்மொழிவுகளில் புத்தாக்கத்தை ஏற்படுத்தவும், மேம்படுத்தவும் உள்ளூர் தகவல் தரவுகளைப் பயன்படுத்துவதில் நிறுவனம் பெருமை கொள்கிறது. இலங்கையின் நுகர்வோர் பற்றிய ஆழமான புரிதல் மற்றும் அதன் தயாரிப்புகளில் உயர் தரம் மற்றும் பெறுமதியை வழங்குவதற்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பினால் உந்தப்பட்டுள்ள Hemas Consumer Brands, நாடு முழுவதும் உள்ள சமூகங்களின் வாழ்க்கையை தொடர்ச்சியாக வளப்படுத்துகிறது.

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *