இலங்கை பல் மருத்துவ சங்கத்தின் (SLDA) வெற்றிகரமான 91ஆவது வருடாந்த விஞ்ஞான அமர்வுக்கு, முன்னணி வாய்ச் சுகாதார பராமரிப்பு வர்த்தக நாமமான சிக்னல், பிரதான அனுசரணை வழங்கியுள்ளது. இது கடந்த 2024 ஜூன் 28ஆம் திகதி “புதுமை, புத்தாக்கம் மற்றும் தொழில்நுட்பம்” எனும் கருப்பொருளின் கீழ் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. அறிவுப் பகிர்வு, தொடர்பை ஏற்படுத்தும் வலையமைப்பு, இத்துறையிலான முன்னேற்றங்களை ஆராய்தல் ஆகிய அம்சங்களை முன்னிலைப்படுத்தி மூன்று நாட்கள் இடம்பெற்ற இந்த நிகழ்வு, இலங்கை முழுவதிலும் உள்ள முன்னணி பல் மருத்துவ நிபுணர்களை ஒன்றிணைத்திருந்தது.
சுகாதார அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரண, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன உள்ளிட்ட முக்கிய அதிதிகளின் பங்கேற்புடன் இதன் ஆரம்ப வைபவம் இடம்பெற்றது.
இலங்கை பல்மருத்துவ சங்கத்தின் தலைவர் பேராசிரியர் ஹேமந்த அமரசிங்க இதன் போது தெரிவிக்கையில், “இலங்கை பல்மருத்துவ சங்கத்திற்கு (SLDA) சிக்னல் வழங்கும் தொடர்ச்சியான ஆதரவு மற்றும் இலங்கையில் வாய்ச் சுகாதார அறிவூட்டல் மற்றும் புத்தாக்கத்தை மேம்படுத்துவதற்கு அது கொண்டுள்ள அர்ப்பணிப்புக்கு நாம் நன்றியுடையவர்களாக இருக்கிறோம். இந்த வருடத்திற்கான நிகழ்வின் கருப்பொருளானது, புதிய தொழில்நுட்பங்களை தழுவுதல் மற்றும் வாய்ச் சுகாதார பராமரிப்பை மேம்படுத்துவதன் முன்னேற்றத்தை பிரதிபலிக்கிறது.” என்றார்.
யூனிலீவர் ஸ்ரீ லங்கா நிறுவனத்தின் தனிநபர் பராமரிப்பு, அழகு மற்றும் சுகவாழ்வுக்கான சந்தைப்படுத்தல் பணிப்பாளர் ஷாமர சில்வா கருத்துத் தெரிவிக்கையில், “இலங்கையில் வாய்ச் சுகாதார பராமரிப்பின் தரத்தை உயர்த்துவதற்கு சிக்னல் ஆழ்ந்த அர்ப்பணிப்புடன் உள்ளது. இந்த அர்ப்பணிப்பானது, பன்முகத்தன்மை கொண்டதாகும். நாம் பயனுள்ள வாய்ச் சுகாதார பராமரிப்பு தயாரிப்புகளை உருவாக்கி வழங்கி வருகின்ற போதிலும், நாம் அதையும் கடந்த விடயங்களையும் மேற்கொள்கிறோம். சிறந்த வாய்ச் சுகாதார நடைமுறைகள், விஞ்ஞான ஒத்துழைப்புகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களின் மூலம், தனிநபர்கள் மற்றும் சமூகங்களை வலுவூட்டும் வகையில், அடிப்படை மட்டத்திலான அறிவூட்டல் முயற்சிகளில் நாம் மும்முரமாக ஈடுபட்டுள்ளோம். அனைத்து இலங்கையர்களும் ஆரோக்கியமான புன்னகையை அடைவதில் இவை முக்கியமாக விளங்குகின்றன. SLDA போன்ற மதிப்புமிக்க நிறுவனங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதானது, வாய்ச் சுகாதார முன்னேற்றங்களில் முன்னணியில் இருக்க எமக்கு வழி ஏற்படுத்துகிறது. வருடாந்த விஞ்ஞான அமர்வு போன்ற இவ்வாறான நிகழ்வுகளுக்கு ஆதரவளிப்பதன் மூலம், அறிவுப் பரிமாற்றத்திற்கான பங்களிப்பை வழங்குவதோடு, அனைவருக்கும் பயனளிக்கும் புத்தாக்கத்திற்கும் வழி ஏற்படுத்துகிறோம்.” என்றார்.
இந்த மாநாட்டில் டிஜிட்டல் பல் மருத்துவம், வாய்ச் சுகாதார பராமரிப்பில் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், பல் மருத்துவ உபகரணங்களின் முன்னேற்றம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளின் கீழான விளக்கக்காட்சிகள், பட்டறைகள், கலந்துரையாடல் அமர்வுகள் போன்ற நிகழ்வுகள் இடம்பெற்றன. நவீன பல் மருத்துவ உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை காட்சிப்படுத்துவதற்கான ஒரு தளமாக இந்த நிகழ்வு அமைந்திருந்தது. 91ஆவது வருடாந்த விஞ்ஞான அமர்வின் வெற்றிகரமான நிறைவானது, இலங்கை முழுவதும் வாய்ச் சுகாதாரத்திற்கான தொடர்ச்சியான முன்னேற்றங்களுக்கான வழியை ஏற்படுத்தியுள்ளது.
END