யூனிலீவர் ஸ்ரீ லங்கா தனது ஹொரணை தொழிற்சாலையில் சூரிய மின்சக்தி திட்டத்தை திறந்து வைத்துள்ளதன் மூலம், தேசிய புதுப்பிக்கத்தக்க வலுசக்தி இலக்குகள் மற்றும் உலகளாவிய நிலைபேறான தன்மைக்கான அர்ப்பணிப்புகளுக்கு பங்களிக்கிறது

யூனிலீவர் ஸ்ரீ லங்கா நிறுவனம் தனது ஹொரணை தொழிற்சாலையில் புதிய 2.33 மெகாவோற் சூரிய மின்சக்தித் திட்டத்தை அண்மையில் ஆரம்பித்து வைத்தது. இந்த திட்டத்தை Abans Electricals PLC நிறுவனத்துடன் இணைந்து அது முன்னெடுத்திருந்தது. யூனிலீவரின் நிலைபேறான தன்மை மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்திக்கான அர்ப்பணிப்பிற்கான இந்த முக்கிய திட்டம், மொத்தமாக 1.3 மில்லியன் யூரோ முதலீட்டைக் கொண்டுள்ளது. யூனிலீவரின் உலகளாவிய காலநிலை மாற்றத்தை தணிக்கும் நடவடிக்கைத் திட்டத்துடன் (CTAP) இத்திட்டம் இணைந்துள்ளது. 2030ஆம் ஆண்டளவில் நாட்டின் மின்சார விநியோகத்தை புதுப்பிக்கத்தக்க மூலங்களில் இருந்து பெறுவதனை நோக்கி மாறுவதற்கான, இலங்கையின் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சின் இலட்சிய இலக்குகளுக்கு பங்களிப்புச் செய்கிறது.

யூனிலீவர் ஸ்ரீ லங்காவின் தலைவரும், பிரதம நிறைவேற்று அதிகாரியுமான அலி தாரிக் இது பற்றி தெரிவிக்கையில், “இந்த சூரிய மின்சக்தி திட்டத்தை ஆரம்பித்து வைப்பதில் நாம் பெருமிதம் கொள்கிறோம். நிலைபேறான நடைமுறைகள் மூலம் எமது சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான மற்றுமொரு முதலீடு இதுவாகும். இது, தரமான பொருட்கள் மற்றும் வர்த்தகநாமங்களை மட்டும் உற்பத்தி செய்வதை மாத்திரம் கொண்டதல்ல. நிலைபேறான வாழ்க்கையை அனைவருக்கும் பொதுவானதாக மாற்றும் எமது உலகளாவிய தூரநோக்கத்திற்கு அமைய, நாம் மேற்கொள்ளும் அனைத்து விடயங்களிலும் ஒரு பொறுப்புள்ள பெருநிறுவனமாக செயற்படுவதையும் உறுதி செய்கிறோம். இந்த முதலீடானது, எமது ஹொரணை தொழிற்சாலையின் மின்சக்தித் தேவையில் 30% -35% உற்பத்தி செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.

வருடாந்தம் 2,090 மெட்ரிக் தொன் காபன் வெளியீட்டைக் கட்டுப்படுத்துவதன் மூலம் யூனிலீவரின் காபன் வெளியீட்டைக் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது 48,000 மரங்களை நடுவதன் மூலம் ஏற்படும் சூழல் மாற்றத்திற்குச் சமமானதாகும்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, “ஹொரணை உற்பத்தி நிலையத்தில் கூரை மீதான சூரிய மின்சக்தித் திட்டத்தை ஆரம்பித்தமைக்காக யூனிலீவர் ஸ்ரீ லங்கா அணியினரை நான் வாழ்த்த விரும்புகிறேன். இது தொழிற்சாலையின் மின்சார உற்பத்திக்கு உதவுவதோடு, புதுப்பிக்கத்தக்க வலுசக்தியின் தேசிய இலக்குகளுக்கும் பங்களிக்கிறது. 2050 ஆம் ஆண்டுக்குள் 70% புதுப்பிக்கத்தக்க மின்சக்தி மற்றும் காபன் நடுநிலைமையை ஏற்படுத்துவது தொடர்பில் நாம் நிர்ணயித்த இலக்குகளோடு, தொழில்துறையில் தனியாரின் பங்களிப்பு அதிகம் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம். 2.33 மெகாவோற் கூரை மீதான இந்த சூரிய மின்சக்தி திட்டமானது, கூரை மீதான சூரிய மின்சக்தி வசதிகள் மூலம் இவ்வருடத்திற்கான எமது இலக்கில் 1.5% வரை பங்களிக்கும் என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். காலநிலை மாற்றம் என்பது ஒரு உண்மையான சவாலாகும் என்பதோடு, இது இலங்கையில் முன்னெப்போதையும் விட அதிகமாக அவதானிக்கப்படுகின்றது. எனவே நாம் பாரம்பரிய நீர் மின் உற்பத்தியிலிருந்து சூரிய சக்தி, காற்றாலை, உயிரியில் வாயு, மின்கல சேமிப்பு வசதிகளுடன் கூடிய புதிய முயற்சிகளுக்கு மாறுவது அவசியமாகும்.” என்றார்.

யூனிலீவர் ஸ்ரீ லங்கா நிறுவனமானது, ஒரு முன்னணி உற்பத்தி நிறுவனமும், விரைவாக நுகரப்படும் நுகர்வோர் உற்பத்திகளின் (FMCG) விநியோகஸ்தரும் ஆகும். இது பிரபலமான 30 வர்த்தகநாமங்களின் தயாரிப்புகள் மூலம், நாளாந்தம் மில்லியன் கணக்கான இலங்கையர்களுக்கு சேவையாற்றுகிறது. நிறுவனம் தனது Unilever Sustainable Living Plan (USLP) மூலம் நிலைபேறான தன்மையில் கவனம் செலுத்தி வணிகத்தை மேற்கொள்ளும் நிலையில், சிறந்ததைச் செய்ய உறுதி பூண்டுள்ளது. இந்த உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாக, காலநிலை மாற்றத்தை தணிக்கும் நடவடிக்கைத் திட்டத்திற்கு (CTAP) யூனிலீவர் நிறுவனம் தீவிரமாகப் பங்களிப்புச் செய்கிறது. இதன் மூலம், முழு வணிக செயற்பாட்டிலும் பெறுமதிச் சங்கிலி முழுவதும் பச்சை இல்ல வாயு (GHG) வெளியீட்டைக் குறைப்பதற்கான ஒரு விரிவான உத்தியை அது கொண்டிருப்பதை சுட்டிக் காட்டுகின்றது. இந்த மூலோபாயத்தின் ஒரு பகுதியாக யூனிலீவர் ஶ்ரீ லங்கா அதன் வலையமைப்பில் காணப்படும் மொத்த சூரிய மின்சக்தி உற்பத்தியை 2024 இல் 4MW ஆக அதிகரிக்கும். காலநிலை மாற்றத்தை தணிப்பதற்கான நடவடிக்கையின் அவசரத்தை உணர்ந்துள்ள யூனிலீவர் நிறுவனம், 2039 ஆம் ஆண்டிற்குள் நிகர காபன் வெளியீட்டை பூச்சியமாக குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 2024 முதல், காலநிலை மாற்றம், இயற்கை பாதுகாப்பு, பிளாஸ்டிக் பயன்பாட்டு குறைப்பு, வாழ்வாதாரத்தை ஆதரித்தல் போன்றன யூனிலீவரின் நிலைபேறான தன்மை நிகழ்ச்சி நிரலின் அடிப்படை அடையாளமாக காணப்படுவதோடு, பொறுப்பான வணிக நடைமுறைகளில் அதன் அர்ப்பணிப்பையும் அது உறுதிப்படுத்துகிறது.

END

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *