இலங்கையின் பொருளாதார மற்றும் சூழல் ரீதியான எதிர்காலத்தில் புதுப்பிக்கத்தக்க வலுசக்தியின் பங்கு

சங்கைக்குரிய பாஹியங்கல ஆனந்த சாகர தேரர் தலைமையிலான தேசிய சுற்றாடல் ஒன்றியம் மற்றும் இலங்கை நிலைபேறான வலுசக்தி அதிகார சபையின் (SLSEA) தலைவர் ரஞ்சித் சேபால ஆகியோருக்கு இடையில் அண்மையில் இடம்பெற்ற சந்திப்பு தொடர்பான கண்ணோட்டம்…

சங்கைக்குரிய பாஹியங்கல ஆனந்த சாகர தேரர் தலைமையிலான தேசிய சுற்றாடல் ஒன்றியமானது, “புதுப்பிக்கத்தக்க வலு சகத்தி மூலம் இலங்கையில் நிலவும் வலுசக்தி நெருக்கடியை நிவர்த்தி செய்தலும்; இலங்கையின் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் பாதுகாத்தலும்” எனும் தலைப்பில், இலங்கை நிலைபேறான வலுசக்தி அதிகாரசபையின் தலைவர் ரஞ்சித் சேபாலவிற்கு அண்மையில் அறிக்கையொன்றை சமர்ப்பித்திருந்தது. அத்துடன் இலங்கையானது, நிலைபேறான பாதையில் வேகமாகப் பயணிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் பாஹியங்கல ஆனந்த சாகர தேரர், ரஞ்சித் சேபாலவுடன் முக்கிய கலந்துரையாடலிலும் ஈடுபட்டிருந்தார். குறித்த அறிக்கையின் முதன்மையான கவனமும், குறித்த கலந்துரையாடலின் தலைப்பும், இலங்கையில் புதுப்பிக்கத்தக்க வலுசக்தியின் தற்போதைய நிலை மற்றும் எதிர்கால வாய்ப்புகள் ஆகியன பற்றியதாக அமைந்திருந்தன. நாட்டின் புதுப்பிக்கத்தக்க வலுசக்தித் திறனை மேம்படுத்துவதற்கான நிலைபேறான நடைமுறைகளின் முக்கியத்துவத்தையும், அது தொடர்பான மூலோபாய நடவடிக்கைகளையும் ஆராய்ந்தமை தொடர்பில் இக்கலந்துரையாடலில் எடுத்துக் கூறப்பட்டிருந்தது.

பாஹியங்கல தேரர் இந்த கலந்துரையாடலைத் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், “நாட்டின் செலவினங்களை ஆராயும்போது, நாம் பெறும் வெளிநாட்டு கையிருப்பில் கணிசமான பகுதியானது, மின்சக்தி உற்பத்திக்காகன நிலக்கரி மற்றும் பெற்றோலியத்தை கொள்வனவு செய்வதற்கே செலவிடப்படுகிறது. இலங்கையில் புதுப்பிக்கத்தக்க வலு சக்தியை பெறுவதற்கு வருடம் முழுவதும் வாய்ப்பு உள்ளது. அதை நாம் சூரிய சக்தியிலிருந்தும் காற்று வலு சக்தியிலிருந்தும் பெறுவதன் மூலமும் அதன் பயன்பாட்டை பயன்படுத்திக் கொள்ள முடியும். மன்னார் பிராந்தியத்தில் திட்டமிடப்பட்ட புதுப்பிக்கத்தக்க மின்சக்தித் திட்டங்கள் பற்றி பல்வேறு ஆதாரமற்ற கட்டுக்கதைகள் பரப்பப்பட்டு வருகின்றன. இது SLSEA உடனான எமது கலந்துரையாடலுக்கு வழி வகுத்தது. அது தொடர்பில் எமது கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் நாம் ஒரு அறிக்கையை வழங்கியுள்ளோம்.” என்றார்.

குறித்த அறிக்கையைப் பெற்றுக்கொண்ட ரஞ்சித் சேபால கருத்துத் தெரிவிக்கையில், “இலங்கையின் எதிர்கால வலுசக்தி தேவைகளை புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மூலங்கள் மூலம் பூர்த்தி செய்ய வேண்டும். இதுவே எமது மக்களின் மின்சக்திச் செலவைக் குறைக்கும் ஒரேயொரு வழியாகும். தற்போது திட்டமிடப்பட்டுள்ள புதுப்பிக்கத்தக்க மின்சக்தித் திட்டங்கள் குறித்தும் நாம் இங்கு கலந்துரையாடினோம். அத்துடன், மன்னார் பிராந்தியத்தில் திட்டமிடப்பட்ட திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதற்கு தேவையான நடவடிக்கைகள் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடினோம். இந்த வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு தம்மால் இயன்ற வகையில் எமக்கு உதவ பாஹியங்கல தேரர் இதன்போது உறுதியளித்திருந்தார்.” என்றார்.

தேசிய சுற்றாடல் ஒன்றியம் தொகுத்த விஞ்ஞான ரீதியான கண்டுபிடிப்புகளை உள்ளடக்கிய SLSEA இற்கு வழங்கப்பட்ட அறிக்கையானது, SLSEA இற்கு முக்கிய பங்கு வகிக்கும். இங்கு கண்டறிந்த விடயங்கள் பெறுமதியான தகவல்களை வழங்கும் என்பதுடன், இது இலங்கையின் புதுப்பிக்கத்தக்க வலு சக்தியை நோக்கியை மாற்றத்திற்கான நிலைபேறான மூலோபாயத்தை உருவாக்க, அனைத்து பங்குதாரர்களுக்கும் உதவும். இந்த விரிவான தரவுகளைப் பயன்படுத்துவதன் மூலம், SLSEA இனால் கொள்கை உருவாக்கம் திட்டச் செயலாக்க நடவடிக்கைகளை திறம்பட வழிநடத்தி, புதுப்பிக்கத்தக்க வலுசக்தி ஆதாரங்களை நோக்கிய இலங்கை எதிர்பார்க்கும் வெற்றிகரமான மற்றும் திறமையான மாற்றத்தை உறுதிப்படுத்த முடியும்.

ENDS

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *