பிளாஸ்டிக் அகற்றல் மற்றும் சேகரித்தல் முயற்சிகளில் பாடசாலைகளுக்கு ஆதரவளிக்கும் Eco Spindles

Eco Spindles Pvt Ltd, நாட்டின் மிகப்பெரும் பிளாஸ்டிக் மீள்பயன்பாட்டு நிறுவனம் என்பதோடு, BPPL Holdings PLC நிறுவனத்திற்கு உரித்தான துணை நிறுவனமுமாகும். இந்நிறுவனம் நாட்டிலும் அதைச் சூழ்ந்துள்ள பகுதிகளிலும் காணப்படும் பிளாஸ்டிக்குகளை உரிய முறையில் அகற்றுதல் மற்றும் சேகரித்தல் தொடர்பான பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றது. இதற்காக Eco Spindles நிறுவனம், பல்வேறு பிளாஸ்டிக் சேகரிப்பு முறைகளைப் பயன்படுத்துகிறது. குறிப்பாக கழிவு பிளாஸ்டிக் சேகரிப்பு தொட்டிகள், கழிவு பிளாஸ்டிக் சேகரிப்பாளர்கள், பொருட்கள் மீட்பு வசதிகள் (MRFs) தொடர்பில் முதலீடு செய்யும் பெருநிறுவன கூட்டாளர்களுடன் இணைந்து அது பணியாற்றுகிறது. இந்த முறைகள் மூலம், பிளாஸ்டிக்குகளை முறையாக  அகற்றுவதற்கான முறைகள் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, நிறுவனம் பல்வேறு திட்டங்களுக்கு ஆதரவளிக்கிறது.

இந்நிறுவனம், நாடு முழுவதிலும் உள்ள பாடசாலைகளில், முறையாக பிளாஸ்டிக்கை அகற்றுவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது தொடர்பான திட்டங்களை ஏற்பாடு செய்வதற்கு பெரிதளவில் உதவுகிறது. அந்த வகையில் இதுவரை, நாடு முழுவதும் உள்ள 100 இற்கும் மேற்பட்ட பாடசாலைகள், Eco Spindles மூலம் தங்களது சொந்த முயற்சித் திட்டங்களை முன்னெடுத்து, இவ்விடயத்தை மேற்கொண்டு வருகின்றன. அதற்கமைய, பிளாஸ்டிக்கை முறையாக அப்புறப்படுத்துதல் மற்றும் சேகரித்தல் போன்ற நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக தெல்கலை ஆரம்பப் பாடசாலை மாணவர்கள் ஏற்பாடு செய்த தமது ஆக்கபூர்வமான சொந்த திட்டமான ‘போத்தல் பெஞ்சோ’ திட்டம் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டது. பிளாஸ்டிக்கை உரிய முறையில் சேகரித்தல், அப்புறப்படுத்துதல், மீள்சுழற்சி செய்தல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை சித்தரிக்கும் ஊர்வலத்தை மாணவர்கள் இதற்காக ஏற்பாடு செய்திருந்தனர்.

இது தொடர்பில், BPPL Holdings PLC நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான கலாநிதி அனுஷ் அமரசிங்க தனது கருத்துகளைப் பகிர்ந்துகொண்ட போது, “நாடு முழுவதும் உள்ள பாடசாலைகள் பிளாஸ்டிக்கை சேகரித்தல் மற்றும் அப்புறப்படுத்துதல் ஆகியவற்றின் முக்கியத்துவம் தொடர்பில் தெளிவூட்டுவதற்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் தமது சொந்த முயற்சிகளை செயற்படுத்துவதைப் பார்ப்பது பெருமகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. மாணவர்களான வருங்கால சந்ததியினருக்கு இது தொடர்பில் தெளிவூட்டுவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விடயம் என்பதால், இந்த முயற்சிகளுக்கு எமது முழு ஆதரவையும் வழங்க நாம் முழுமையாக தயாராக உள்ளோம்.” என்றார்.

நாடளாவிய ரீதியில் பாடசாலைகள் இவ்வாறான திட்டங்களை முன்னெடுப்பது மிகவும் ஊக்கமளிக்கின்ற விடயம் மட்டுமன்றி, மிக முக்கியமானதுமாகும். காரணம், எதிர்கால சந்ததியினரான மாணவர்களுக்கு கழிவுகளை உரிய முறையில் அகற்றுவதன் முக்கியத்துவம் மற்றும் பிளாஸ்டிக்குகளின் சேகரிப்பு, அவற்றை உரிய முறையில் அகற்றுதல் தொடர்பான முக்கியத்துவத்தை முறையாகக் கற்பிப்பது மிகவும் அவசியமாகும். பிளாஸ்டிக்கை அகற்றுதல் மற்றும் சேகரித்தல் தொடர்பில் அறிந்துகொள்வதிலும், Eco Spindles உடன் இணைந்து தமது சொந்த முயற்சிகளை நடைமுறைப்படுத்துதல் தொடர்பிலும் கொழும்பில் உள்ள பல பாடசாலைகள் அதிக முனைப்புடன் செயற்பட்டு வருகின்றன.

நிறுவனம் தமது மீள்சுழச்சி தொழிற்சாலைக்கு மாணவர்களை கல்விச் சுற்றுலாக்கள் மற்றும் நிகழ்ச்சிகள் மூலம் அழைத்து வந்து, அங்கு மீள்சுழற்சிக்குட்படுத்தும் பிளாஸ்டிக் மூலம் உயர்தர பிளாஸ்டிக் இழைகள் மற்றும் தூரிகைகள் தயாரிக்கப்படும் செயன்முறைகளை மாணவர்கள் அறிந்துகொள்ளச் செய்து, அது தொடர்பான அனுபவத்தை பெற உதவுகின்றது. இந்த நூலிழைகள், தூரிகைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள், பல்வேறு சர்வதேச வர்த்தகநாமங்களுக்கான மூலப் பொருட்களாக விற்கப்படுகின்றன. இதன் மூலம் நாட்டுக்கு மிகவும் அவசியமாகியுள்ள வெளிநாட்டுச் செலாவணியும் பெறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

கிராமப்புறங்கள் முதல் கொழும்பு உள்ளிட்ட நகர்ப்புறங்களில் உள்ள மாணவர்கள் மற்றும் பாடசாலைகளுக்கு இவ்வாறான தெளிவூட்டல் திட்டங்கள் ஊடாக Eco Spindles நிறுவனம் இந்த பிரசார நடவடிக்கைகள் மற்றும் திட்டங்களுக்கு தனது ஆதரவை முழுமையாக வழங்கி வருகிறது. இதன் மூலம் சூழலில் விடுவிக்கப்படும் பிளாஸ்டிக்கை சேகரித்து, அகற்றுவதற்கு கையாள வேண்டிய உரிய முறைகளின் முக்கியத்துவத்தை தெளிவுபடுத்தி, பிளாஸ்டிக் மீள்பயன்பாடு மற்றும் மீள்சுழற்சி மூலம் பிளாஸ்டிக்கிற்கு ஒரு புதிய வாழ்வை எவ்வாறு வழங்க முடியும் என்பதை நிறுவனம் காட்டித் தருகின்றது.

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *