பெருநிறுவன சமூக பொறுப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் ஓர் அங்கமாக O/L மாணவர்களுக்கு கருத்தரங்குகளை நடாத்தும் Pelwatte Dairy

சர்வதேச தரத்தில் அமைந்த உள்ளூர் பால் உற்பத்தி வர்த்தக நாமமும், வாடிக்கையாளர்களுக்கு தரமான புத்தம் புதிய பாலை வழங்குவதற்கான உறுதிமொழியை கொண்டுள்ள பெல்வத்தை (Pelwatte) நிறுவனம், க.பொ.த. சாதாரண தர மாணவர்களுக்கான கருத்தரங்கு தொடர்களை அண்மையில் ஏற்பாடு செய்திருந்தது. நிலைபேறான முறைகள் மூலம் வாழ்வாதாரத்தை உயர்த்தும், பெல்வத்தையின் பெருநிறுவன தத்துவத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் இந்நிகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இக்கருத்தரங்குகள் மார்ச் மாதம் கடைசி வாரத்தில் ஆரம்பமாகி 2022 ஏப்ரல் மாதத்தின் முதல் வாரத்தில் நிறைவடைந்திருந்தன.

இக்கருத்தரங்குகள் குறிப்பாக கணித பாடத்தை கவனம் செலுத்தப்பட்டதாக அமைந்திருந்தன. காரணம் பெரும்பாலான மாணவர்கள் கணிதப் பாடத்தில் சிரமத்தை எதிர்நோக்குகிறார்கள் அல்லது அப்பாடம் பற்றி அதிக சந்தேகம் கொண்டுள்ளனர். ஒரு பொறுப்பான வர்த்தக நாமமாகிய பெல்வத்தை, உதவி தேவைப்படும் இந்நேரத்தில் இம்மாணவர்களுக்கு உதவுவதற்கான முயற்சியை முன்னெடுத்திருந்தது. கல்வி என்பது ஒரு முக்கியமான விடயமாக இருப்பதாலும், க.பொ.த. சாதாரண தரம் என்பது, மாணவர்களின் வாழ்க்கையில் ஒரு முக்கியமான கட்டத்தில் உள்ள ஒரு நிலை என்பதைக் கருத்தில் கொண்டும் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. பெல்வத்தையின் முகாமைத்துவப் பணிப்பாளர் அக்மல் விக்ரமநாயக்க இது தொடர்பில் தெரிவிக்கையில், “பெல்வத்தை ஆனது, எமது சமூகங்கள் மிகச் சிறந்த முறையில் நடாத்தப்படுவதை உறுதி செய்வதனை அடைவதற்காக, அனைத்து எல்லைகளுக்கும் செல்லும் ஒரு வர்த்தக நாமமாகும். அடுத்த தலைமுறையினர் தங்கள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்பதை உறுதி செய்வதும் இதில் ஒன்றாக காணப்படுகின்றது” என்றார்.

தனது நிறுவனத்தைச் சேர்ந்த, பெல்வத்தை பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் குழுவில் பணிபுரியும் இயந்திரவியல் பொறியியலாளர் அசேல சம்பத் மற்றும் இரசாயன மற்றும் செயலாக்க பொறியியலாளர் காவிந்த உமேஷ் ஆகியோரை சுட்டிக்காட்டி அவர் இக்கருத்தை தெரிவித்தார். இவர்கள் இருவரும் கருத்தரங்கை வழிநடாத்தி, முழுப் பாடத்திட்டத்தையும் தொட்டுச் சென்றதோடு மட்டுமல்லாமல், பல மாதிரி வினாத்தாள்கள் மூலமாகவும் மாணவர்களுக்கு வழிகாட்டல்களை வழங்கினர். இதன் முடிவில் மாணவர்கள் தங்களுக்குள்ள எந்தவொரு சந்தேகங்களுக்குமான பதில்களை வழங்குவதற்கான சந்தர்ப்பத்தையும் அவர்கள் வழங்கினர்.

பெல்வத்தை மகாவித்தியாலயம், குக்குரன்பொல வித்தியாலயம், துட்டுகைமுனு மகாவித்தியாலயம், பெல்வத்தை ரஞ்சன் விஜேரத்ன வித்தியாலயம் போன்ற பாடசாலைகளை இணைத்து புத்தள பிரதேசத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த தொடர் கருத்தரங்குகள் நடாத்தப்பட்டன. ஒரு முழு நாளை அடிப்படையாகக் கொண்டு இடம்பெற்ற இக்கருத்தரங்குகளில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டிருந்தனர். இந்த இரண்டு தகுதி வாய்ந்த பொறியாளர்களிடமிருந்து இப்பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள் தங்களது அறிவை விருத்தி செய்து கொண்டனர். அவர்கள் கணித சிக்கல்களுக்கு எவ்வாறு தீர்வு காண்பது என்பதை விளக்கியதோடு மட்டுமல்லாமல், இலங்கையில் பொறியியல் துறையை மேம்படுத்தும் வகையில் எதிர்காலத்தில் மாணவர்கள் செல்லக்கூடிய தொழில்துறைகள் பற்றிய ஆலோசனைகளையும் வழங்கியிருந்தனர். இவ்வாறான வேலைத்திட்டங்களை முன்னெடுத்தமை தொடர்பில், இந்நிகழ்விற்கு வருகை தந்திருந்த மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள், பெல்வத்தை நிறுவனத்தை பாராட்டியதுடன் தங்களது நன்றிகளையும் தெரிவித்திருந்தனர். இதேவேளை, பல பெரு நிறுவனங்கள் தங்கள் சமூக நலத் திட்டங்களை முழுமையாக நிறுத்தி விட்டன அல்லது அதை மட்டுப்படுத்திவிட்டன என்பதே நாட்டின் தற்போதைய நிலையாக காணப்படுகின்றது. எவ்வாறாயினும் பெல்வத்தை நிறுவனம், சமூகங்களை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், அவர்களது மன உறுதியை உயர்த்துவதற்காகவும் இத்தகைய நடவடிக்கைகளை தொடர்ந்து செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. பெல்வத்தை நிறுவனம் கவனம் செலுத்தும் மிகவும் முக்கியமான பகுதிகளில் ஒன்றாக கல்வி காணப்படுகின்றது. அந்த வகையில் இவ்வாறான திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான அவசியம் காணப்படுகின்ற கிராமப்புறங்களில் கல்வியை மேம்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை பெல்வத்தை நிறுவனம் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறது.

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *