Project Blue Next Generation, இலங்கையின் கடல் சூழலைப் பாதுகாக்கும் முன்நோக்கிய பயணம்

Project Blue Next Generation (அடுத்த தலைமுறை நீலத் திட்டம்) என்பது, தொண்டு நிறுவனங்கள், சூழலியல் குழுக்கள், ஆராய்ச்சியாளர்கள், ஆர்வலர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு சமூகங்களை ஒன்றிணைத்து, உலகத்தில் சமுத்திரங்கள் வகிக்கின்ற முக்கிய பங்கு தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட, இளைஞர்கள் தலைமையிலான ஒரு முயற்சித் திட்டமாகும்.

இத்திட்டம் பிரிட்டிஷ் கவுன்சிலின் COP26 Challenge Fund  மற்றும் ‘The Climate Connection’ பிரசாரத்தின் ஒரு பகுதியாகும். காலநிலை மாற்றத்தின் சவால்களை எதிர்கொள்ள உலகெங்கிலும் உள்ள மக்களை ‘Climate Connection’ ஒன்றிணைக்கிறது. இது கலை மற்றும் கலாசாரம், கல்வி மற்றும் ஆங்கில மொழி, யோசனைகள், புத்தாக்கம் மற்றும் உண்மையான மாற்றம் பற்றியதாகும்.

தற்போது மனித இனம் எதிர்கொள்ளும் மிக அழுத்தமான பிரச்சினையாக காலநிலை மாற்றம் எனும் விடயம் அமைந்துள்ளதை, பல்வேறு அறிஞர்கள் மற்றும் தலைவர்களால் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதகமான விளைவுகளைத் தவிர்க்க, சூழலைப் பாதுகாப்பது அவசியமாகும். பல சூழல் தொகுதிகளும் வனவிலங்குகளும் சார்ந்திருக்கும் ஒரு விடயம் என்பதால், கடல் அல்லது கடற்கரைச் சூழலானது ஒரு முக்கிய அங்கமாக காணப்படுகின்றது.

Project Blue Next Generations திட்டமானது, கடல் சூழலின் பாதுகாப்பு, கடற்கரை பாதுகாப்பு மற்றும் காலநிலை மாற்றம் போன்ற விடயங்களில் அங்கம் வகிப்பதற்காக, இளம் தலைமுறையினரை விழிப்புணர்வூட்டுவது மற்றும் ஊக்குவிப்பது ஆகிய இரண்டையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இத்திட்டமானது, இரண்டு முக்கிய நிகழ்வுகளைக் கொண்டிருந்ததுடன், அவை ஒன்லைன் வழியாக நடாத்தப்பட்டன. ‘சமுத்திரப் பாதுகாப்பை வீட்டிலிருந்து ஆரம்பிப்போம்’ எனும் முதலாவது பயிற்சிப்பட்டறைத் தொடரில், நாடு முழுவதிலுமிருந்து பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வை, கொழும்பு பல்கலைக்கழகத்தின் விலங்கியல் மற்றும் சூழல் விஞ்ஞான துறையுடன் இணைந்து Project Blue Next Generation ஏற்பாடு செய்திருந்தது.

இது 3 நாட்களைக் கொண்ட முற்று முழுதான விழிப்புணர்வு அமர்வுகளாக இடம்பெற்றதுடன், பங்கேற்பாளர்கள் வீட்டில் பின்பற்றுதற்கான 14 நாட்களுக்கான செயற்பாட்டுத் திட்டமொன்றையும் இது கொண்டிருந்தது. இச்செயற்பாட்டுத் திட்டமானது, பங்கேற்பாளர்கள் அவர்களது வீடுகளில் மக்காத பொருட்களிலிருந்து மீள்சுழற்சி செய்வதை அல்லது மக்கும் பொருட்களுக்கு மாறுவது தொடர்பில் கவனம் செலுத்துகிறது. இதன் மூலம் அவர்கள் தங்களது அன்றாட வாழ்வில் மக்கும் பொருட்களைப் பயன்படுத்தும் பழக்கத்தை ஏற்படுத்த இது வழி வகுக்கிறது. இந்த நடைமுறை சூழலுக்கு ஏற்படும் சேதத்தை மாத்திரமல்லாது, குறிப்பாக சமுத்திரங்களுக்கு ஏற்படும் சேதத்தையும் குறைக்கும்.

இரண்டாவதாக, ‘Ocean Sustainability’ (சமுத்திர நிலைபேறுத்தன்மை) என்ற தலைப்பிலான இணையவழி பயிற்சிப்பட்டறைத் தொடர், இது கடல் வாழ்வியல் மற்றும் அவற்றின் தாக்கங்கள் தொடர்பான பல முக்கிய தலைப்புகளில் விழிப்புணர்வை ஏற்படுத்த வடிவமைக்கப்பட்டிருந்தது. இந்த அமர்வுகளில் கலந்துகொண்ட பங்கேற்பாளர்கள் பல்வேறு பின்னணியில் இருந்து வந்தவர்களாக இருந்ததுடன், சமூகம் சார்ந்த திட்டங்களுக்கு தன்னார்வலர்களாக செயற்பட்டதோடு, கடல் பாதுகாப்பு தொடர்பில் மிகுந்த ஆர்வத்துடனும் இருந்தனர். ருஹுணு பல்கலைக்கழகத்தின் சமுத்திரவியல் மற்றும் கடல் புவியியல் துறையைச் சேர்ந்த விரிவுரையாளர்கள் குழுவினால் இந்த இணையவழி பயிற்சிப்பட்டறைகள் நடாத்தப்பட்டன.

3 நாட்களைக் கொண்ட இந்த பயிற்சிப்பட்டறைத் தொடரில், நிலைபேறான சமுத்திரங்கள் மற்றும் புத்தாக்கம், கடற்கரை சமூகங்கள் மற்றும் சமுத்திர பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன், இது நிலைபேறான கடற்கரை சூழல்களை உருவாக்குவதில் நகரங்கள் மற்றும் சமூகங்களின் பங்களிப்பை மையமாகக் கொண்டிருந்தது. ‘Marine Education and Ocean Sustainability‘ (‘கடல் கல்வி மற்றும் சமுத்திர நிலைபேறுத்தன்மை’) எனும் பயிற்சிப்பட்டறை ஆனது, ஆராய்ச்சி அடிப்படையிலான கடல்சார் கல்வியின் முக்கியத்துவம் மற்றும் நிலைபேறான கடல் சூழல்களின் தாக்கங்கள் ஆகியவற்றின் மீது கவனம் செலுத்துவதாக அமைந்திருந்தது.

இதில் பங்கேற்ற பங்கேற்பாளர்களில் ஒருவர் தெரிவிக்கையில், “இது போன்ற ஒரு அற்புதமான நிகழ்வை ஏற்பாடு செய்ததற்காக Project Blue Next Generation அமைப்பிற்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். ஒரு தன்னார்வத் தொண்டனாக இருந்து சமுத்திரத்தைக் காப்பாற்றுவதற்கான பணியில் பங்கெடுப்பதில் நான் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளேன். கழிவு முகாமைத்துவத்தை மேம்படுத்துவதும் இதற்கான ஒரு சிறந்த யோசனையாகும். நான் இதில் ஒரு அங்கமாக இருந்ததில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.” என்றார்.

Project Blue Next Generation இணைப்பாளர் சஷ்ரீகா சேனாநாயக்க தெரிவிக்கையில், “ஒட்டுமொத்தத்தில், சூழல் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவதில் இளைஞர்கள் எவ்வளவு ஆர்வமாக இருக்கிறார்கள் என்பதையும் இத்திட்டம் காட்டுகிறது. அத்துடன் உரிய தருணத்திலான இத்திட்டத்தின் மூலம், சிறிய பழக்கங்களை மாற்றுவதன் மூலம் சமுத்திரங்கள் மற்றும் கடல் சூழலைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தையும், அதன் மூலமாக ஒரு புதிய தலைமுறை சமூக பொறுப்புள்ள தலைவர்களாக உருவாவதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.” என்றார்.

Project Blue Next Generation மூலம் உச்ச வகையில் அடையக் கூடிய அனைத்தையும் அடைந்தமை தொடர்பில் மிகவும் திருப்தியளிக்கிறது. பிரிட்டிஷ் கவுன்சில் போன்ற அமைப்புகளின் சரியான ஆதரவுடன், உலகில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடியும் எனவும், எதிர்கால தலைமுறையினருக்காக சமுத்திரத்தைப் பாதுகாப்பதில் பங்களிக்க முடியும் என்றும் அவர்கள் நம்புகின்றனர்.

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *