2030 ஆம் ஆண்டளவில் கடலுணவு ஏற்றுமதி வருமானமாக 680 மில்லியன் அமெரிக்க டொலர்களை அடைவதற்கான முக்கிய உந்துசக்திகளாக முதலீட்டு ஊக்குவிப்புகள், கடற்றொழில் அபிவிருத்தி மற்றும் வர்த்தகச் சீர்திருத்தங்களை SEASL சுட்டிக்காட்டுகிறது.
அரசாங்கத்தின் 2027 வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு இலங்கை கடலுணவு ஏற்றுமதியாளர்கள் சங்கம் (SEASL) தனது வலுவான ஆதரவைத் தெரிவித்துள்ளது. இந்த முன்மொழிவுகள் முதலீட்டை விரைவுபடுத்தவும், பெறுமதி சேர்க்கப்பட்ட கடலுணவுப் பதப்படுத்தலை விரிவுபடுத்தவும், நிலைபேறான கடற்றொழிலை வலுப்படுத்தவும், இலங்கையின் சர்வதேசப் போட்டித்தன்மையை மேம்படுத்தவும் உதவும் என சங்கம் கருதுகிறது.
கடற்றொழில் மற்றும் கடலுணவு ஏற்றுமதித் துறையின் மூலோபாய முக்கியத்துவத்தை அங்கீகரித்தமைக்காக, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரான ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களுக்கு சங்கம் தனது நன்றியைத் தெரிவிக்கிறது. துறையை அபிவிருத்தி செய்வதிலும் மீனவச் சமூகங்களுக்கு ஆதரவளிப்பதிலும் காட்டும் அர்ப்பணிப்புக்காக, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களுக்கும், பிரதி அமைச்சர் கௌரவ ரத்ன கமகே அவர்களுக்கும் SEASL நன்றி தெரிவிக்கிறது.
நிலையான முதலீடு, அதிக பெறுமதி சேர்ப்பு, நவீன உட்கட்டமைப்பு மற்றும் வினைத்திறனான வர்த்தகக் கொள்கைகள் மூலம் துறைக்கு ஆதரவு வழங்கப்பட்டால், 2030 ஆம் ஆண்டளவில் வருடாந்த கடலுணவு ஏற்றுமதி வருமானமாக 680 மில்லியன் அமெரிக்க டொலர்களை அடையும் ஆற்றல் இலங்கைக்கு உள்ளது என SEASL நம்புகிறது.
நிதியளிப்பு மற்றும் முதலீட்டு ஊக்குவிப்புகள்
தகுதிவாய்ந்த பாரிய அளவிலான கடற்றொழில் நிறுவனங்களுக்கு 5% வருடாந்த வட்டியில் ரூபா 500 மில்லியன் வரையிலான கடன்களை வழங்கும் முன்மொழியப்பட்ட சலுகைக் கடன் திட்டம், பதப்படுத்தல் கொள்ளளவு, நவீன தொழில்நுட்பம் மற்றும் குளிர்சங்கிலி உட்கட்டமைப்பில் முதலீட்டை விரைவுபடுத்துவதற்கான முக்கியமான வாய்ப்பாகும்.
குறைந்தபட்சம் 3 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான, BOI அங்கீகாரம் பெற்ற, தகுதிவாய்ந்த ஏற்றுமதி சார்ந்த உற்பத்தி முதலீடுகளுக்கான 200% மேம்படுத்தப்பட்ட மூலதனக் கொடுப்பனவு, விரிவாக்கம், புதிய பதப்படுத்தல் வசதிகள் மற்றும் உயர் பெறுமதி கொண்ட கடலுணவு உற்பத்திகளின் அபிவிருத்தியை மேலும் ஊக்குவிக்கக்கூடும்.
இந்த நடவடிக்கைகள் முதலீட்டை ஈர்க்கவும், இலங்கையின் பதப்படுத்தல் ஆற்றல்களை வலுப்படுத்தவும், துறை முழுவதும் மேலதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் உதவும்.
பெறுமதி சேர்ப்பு மற்றும் ஏற்றுமதி வளர்ச்சி
பெறுமதி சேர்க்கப்பட்ட பதப்படுத்தலின் கணிசமான ஆற்றலை இலங்கையின் கடலுணவுத் துறை நிரூபித்துள்ளது. குறிப்பாக, பதப்படுத்தி மீள் ஏற்றுமதி செய்வதற்காக மூலப்பொருட்களை இறக்குமதி செய்வதன் மூலம் இது சாத்தியமாகியுள்ளது.
2026 ஜனவரி முதல் செப்டம்பர் வரையான காலப்பகுதியில் கடலுணவு ஏற்றுமதிகள் 246.12 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஈட்டியுள்ளன. இதில் 64 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதி சேர்க்கப்பட்ட உற்பத்திகளிலிருந்து கிடைத்துள்ளது. இது மொத்த ஏற்றுமதி வருமானத்தின் 26% ஆகும்; 2022 இல் இது வெறும் 4% ஆக இருந்தது.
இந்த மாற்றம், இலங்கைப் பதப்படுத்துநர்கள் சர்வதேச அளவில் மூலப்பொருட்களைப் பெறவும், உள்நாட்டில் பெறுமதி சேர்க்கவும், உலகச் சந்தைகளுக்கு விநியோகிக்கவும் உதவும் கொள்கைகளைத் தொடர்ந்து பேணுவதன் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது.
தொழிற்சாலைப் பயன்பாட்டைத் தக்கவைக்கவும், வேலைவாய்ப்பை விரிவுபடுத்தவும், அந்நியச் செலாவணி வருமானத்தை அதிகரிக்கவும், பெறுமதி சேர்ப்புக்காக இறக்குமதி செய்யப்படும் மூலப்பொருட்களுக்கான தொடர்ச்சியான அணுகல் அத்தியாவசியமானது என SEASL வலியுறுத்துகிறது.
ஏற்றுமதிப் பதப்படுத்தலுக்கான தற்காலிக இறக்குமதித் (TIEP) திட்டத்தின் முன்மொழியப்பட்ட நவீனமயமாக்கல், சுங்க டிஜிட்டல்மயமாக்கல் மற்றும் வர்த்தகத்துக்கான தேசிய ஒற்றைச் சாளரம் ஆகியவை நடைமுறைகளை எளிமைப்படுத்தவும், செலவுகளைக் குறைக்கவும், ஏற்றுமதிப் போட்டித்தன்மையை மேம்படுத்தவும் உதவும்.
கடற்றொழில் உட்கட்டமைப்பு, நீர்வேளாண்மை மற்றும் நிலைபேறு
பேசாலை துறைமுகம் மற்றும் மீன்பிடி நங்கூரத்தளங்கள் உள்ளிட்ட வடக்கு கடற்றொழில் உட்கட்டமைப்பில் முன்மொழியப்பட்டுள்ள ரூபா 5 பில்லியன் முதலீட்டை சங்கம் ஆதரிக்கிறது. இது தரையிறக்கும் வசதிகள், உற்பத்திக் கையாள்கை மற்றும் கரையோரச் சமூகங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும்.
கடலுணவு ஏற்றுமதித் துறையின் அபிவிருத்தியில் மேலும் முக்கிய பங்கை வகிக்கும் ஆற்றல் கொண்ட இலங்கையின் நீர்வேளாண்மை விவசாயிகளுக்கான வாய்ப்புகள் குறித்து SEASL பெரிதும் ஊக்கமடைந்துள்ளது.
“எமது நீர்வேளாண்மை விவசாயிகளுக்கு, குறிப்பாக இறால் வளர்ப்பில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு, எதிர்வரும் வாய்ப்புகள் குறித்து நாம் உற்சாகமடைகிறோம். உற்பத்தியை விரிவுபடுத்துவதிலும், கிராமப்புற வேலைவாய்ப்பை உருவாக்குவதிலும், இலங்கையின் கடலுணவு ஏற்றுமதிகளை வலுப்படுத்துவதிலும் அவர்களுக்கு முக்கிய பங்களிப்பு உள்ளது. ஒரு துறையாக, அவர்களின் வளர்ச்சிக்கு ஆதரவளிக்கவும், முதலீட்டை ஊக்குவிக்கவும், விவசாயிகளைச் சர்வதேசச் சந்தைகளுடன் இணைக்கவும் நாம் உறுதிபூண்டுள்ளோம்,” என டிலான் பெர்னாண்டோ தெரிவித்தார்.
போட்டித்தன்மை வாய்ந்த மற்றும் நிலைபேறான நீர்வேளாண்மைத் துறையை அபிவிருத்தி செய்வதற்கு, நீர்வேளாண்மை விவசாயிகள், பதப்படுத்துநர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களுக்கு இடையிலான நெருக்கமான ஒத்துழைப்பு அத்தியாவசியமானது என சங்கம் நம்புகிறது.
விஞ்ஞான ரீதியான மீன்வள மதிப்பீடுகள், வாழிட வரைபடமாக்கல் மற்றும் கண்காணிப்பு உள்ளிட்ட நிலைபேறான கடற்றொழில் வள முகாமைத்துவத்துக்கான ரூபா 1 பில்லியன் ஒதுக்கீடும் சமமான முக்கியத்துவம் வாய்ந்தது.
இலங்கையின் வடமேற்கு நீலநீச்சல் நண்டு மீன்பிடிக்கு அண்மையில் கிடைத்த கடல் பொறுப்பாண்மைச் சபை (MSC) சான்றிதழ், உயர்தர ஏற்றுமதிச் சந்தைகளை அணுகுவதில் பொறுப்பான கடற்றொழில் முகாமைத்துவம் மற்றும் சர்வதேச அங்கீகாரம் பெற்ற நிலைபேறுத் தரங்களின் பெறுமதியை நிரூபிக்கிறது.
விஞ்ஞான முகாமைத்துவம், மூலத்தடம் அறிதல் (traceability) மற்றும் சர்வதேசச் சான்றிதழ்களை வலுப்படுத்துவதற்காக, அரச நிறுவனங்கள், ஆராய்ச்சி அமைப்புகள், மீனவச் சமூகங்கள், நீர்வேளாண்மை விவசாயிகள் மற்றும் ஏற்றுமதியாளர்களுக்கு இடையிலான தொடர்ச்சியான ஒத்துழைப்பை SEASL ஊக்குவிக்கிறது.
வர்த்தக வசதியளிப்பு மற்றும் சந்தை அபிவிருத்தி
முன்மொழியப்பட்ட சுங்கச் சீர்திருத்தங்கள், TIEP திட்டத்தின் மேம்பாடுகள் மற்றும் தெரிவுசெய்யப்பட்ட தீர்வை வரிசைகளில் CESS வரி வீதங்களைக் குறைத்தல் ஆகியவை இலங்கையின் கடலுணவு ஏற்றுமதிகளின் போட்டித்தன்மையை மேம்படுத்தக்கூடும்.
குறிப்பாக ஐரோப்பா, வட அமெரிக்கா, ஆசியா மற்றும் மத்திய கிழக்கில், சர்வதேச வர்த்தக உறவுகளை வலுப்படுத்தவும் சந்தை அணுகலை விரிவுபடுத்தவும் மேற்கொள்ளப்படும் முயற்சிகளையும் சங்கம் ஆதரிக்கிறது.
இந்த நடவடிக்கைகள், உணவுப் பாதுகாப்பு, நிலைபேறு மற்றும் உற்பத்திப் புத்தாக்கத்தில் தொடர்ச்சியான முதலீட்டுடன் இணைந்து, பெறுமதி சேர்க்கப்பட்ட கடலுணவுப் பதப்படுத்தலுக்கான முன்னணிப் பிராந்திய மையமாக இலங்கையை நிலைநிறுத்தும் என SEASL நம்புகிறது.
உரிய நேரத்தில் நடைமுறைப்படுத்துமாறு துறை அழைப்பு
வரவு செலவுத் திட்டம் ஊக்கமளிக்கும் கொள்கைத் திசையை வழங்கினாலும், நாட்டின் ஏற்றுமதி இலக்குகளை அடைவதற்கு உரிய நேரத்தில் நடைமுறைப்படுத்தலும் அரசாங்கத்துக்கும் துறைக்கும் இடையிலான நெருக்கமான ஒத்துழைப்பும் அத்தியாவசியமானவை என SEASL வலியுறுத்துகிறது.
“இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்குக் கணிசமாகப் பங்களிக்கும் கடலுணவுத் துறையின் ஆற்றலை அங்கீகரித்தமைக்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களுக்கும், கடற்றொழில் துறையை வலுப்படுத்துவதில் காட்டும் அர்ப்பணிப்புக்காக அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் பிரதி அமைச்சர் ரத்ன கமகே ஆகியோருக்கும் நாம் நன்றி தெரிவிக்கிறோம்,” என இலங்கை கடலுணவு ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் டிலான் பெர்னாண்டோ தெரிவித்தார்.
“முன்மொழியப்பட்ட நிதியளிப்பு, முதலீட்டு ஊக்குவிப்புகள் மற்றும் கடற்றொழில் அபிவிருத்தித் திட்டங்கள் வளர்ச்சிக்கான வலுவான அடித்தளத்தை வழங்குகின்றன. பெறுமதி சேர்ப்பு மூலம் எதை அடைய முடியும் என்பதை எமது துறை ஏற்கனவே நிரூபித்துள்ளது; கடலுணவு ஏற்றுமதிகளில் அதன் பங்களிப்பு 2022 இல் 4% இலிருந்து 2026 இன் முதல் ஒன்பது மாதங்களில் 26% ஆக அதிகரித்துள்ளது.”
“இப்போது முன்னுரிமை நடைமுறைப்படுத்தலே. ஏற்றுமதியாளர்கள் இந்த ஊக்குவிப்புகளை அணுகுவதையும், பெறுமதி சேர்க்கப்பட்ட பதப்படுத்தலுக்கான மூலப்பொருள் இறக்குமதிகள் தேவையற்ற கட்டுப்பாடுகளின்றித் தொடர்வதையும், நிலைபேறான கடற்றொழில் முகாமைத்துவம் தேசிய முன்னுரிமையாகத் தொடர்வதையும் நாம் உறுதிசெய்ய வேண்டும். சரியான கொள்கைகளுடன், 2030 ஆம் ஆண்டளவில் கடலுணவு ஏற்றுமதி வருமானமாக 680 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கையால் அடைய முடியும்,” என அவர் மேலும் தெரிவித்தார்.
கடலுணவு ஏற்றுமதிகளை விரிவுபடுத்தவும், முதலீட்டை ஈர்க்கவும், வேலைவாய்ப்பை உருவாக்கவும், உலகக் கடலுணவுச் சந்தைகளில் இலங்கையின் நிலையை வலுப்படுத்தவும், அரசாங்கம், மீனவச் சமூகங்கள், நீர்வேளாண்மை விவசாயிகள் மற்றும் சர்வதேசப் பங்காளர்களுடன் இணைந்து செயற்படுவதற்கான தனது அர்ப்பணிப்பை SEASL மீண்டும் உறுதிப்படுத்தியது.
முற்றும்
வெளியிட்டவர்:
டிலான் பெர்னாண்டோ
இலங்கை கடலுணவு ஏற்றுமதியாளர்கள் சங்கம் (SEASL)