இலங்கை கணக்கியல் தொழில்நுட்பவியலாளர் சங்கம் (AAT Sri Lanka) ஆனது, ‘தொழில்நுட்பத் திறன் மூலம் நிலையான வேலைவாய்ப்பு’ எனும் தொனிப்பொருளின் கீழ் அதன் 2025-2030 ஆம் ஆண்டுக்கான புதிய பாடத்திட்டத்தை உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளது. இது 2026 ஜூலை பரீட்சை முதல் நடைமுறைக்கு வரவுள்ளதுடன், கல்விக்கான விசேடத்துவம் மற்றும் புத்தாக்கம் ஆகியன தொடர்பில் இந்நிறுவகம் கொண்டுள்ள அர்ப்பணிப்பின் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைகிறது.
தற்போதுள்ள 2020-2025 பாடத்திட்டத்திற்குப் பதிலாக அறிமுகப்படுத்தப்படும் இந்தப் புதிய கட்டமைப்பானது, தொழில்முறை கணக்கியல் கல்வியில் ஒரு மூலோபாய மாற்றத்தை பிரதிபலிக்கிறது. இது வேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்பம், நிலைபேறான தன்மை வெளிப்படுத்தல் தரநிலைகள் (Sustainability disclosure standards) மற்றும் உலகளாவிய ரீதியில் மாற்றமடைந்து வரும் கணக்கியல் கல்வித் தரங்களுக்கு ஏற்ப மிகவும் கவனமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது வழக்கமான பாடத்திட்ட மாற்றத்திற்கு அப்பால், டிஜிட்டல் மயமாக்கப்படும் உலகளாவிய பொருளாதாரத்தில் இடைநிலை கணக்கியல் நிபுணர்களின் பங்கை வலுப்படுத்துவதற்கும், கணக்கியல் துறை சார்ந்த வாழ்க்கையை எதிர்காலத்திற்கு ஏற்றதாக மாற்றுவதற்கும் AAT ஸ்ரீ லங்கா நிறுவகம் கொண்டுள்ள அர்ப்பணிப்பை உறுதிப்படுத்துகிறது.
இலங்கையின் கூட்டாண்மை மற்றும் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான (SME) வணிகத் துறைகளுக்கு அவசியமான திறமையான கணக்கியல் தொழில்நுட்பவியலாளர்களை உருவாக்கும் நோக்கில் 1987 ஆம் ஆண்டு AAT ஸ்ரீ லங்கா நிறுவப்பட்டது. அன்றிலிருந்து, இது உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் கணக்கியல் மற்றும் வணிக நிபுணர்கள் மத்தியிலும் செல்வாக்குச் செலுத்தும் முன்னணி தொழில்முறை நிறுவகமாக வளர்ந்துள்ளது.
செயற்கை நுண்ணறிவு (AI), தன்னியக்க முறைமை (Automation), விநியோகச் சங்கிலி (Blockchain) தொழில்நுட்பம், நிறுவன வளத் திட்டமிடல் (ERP) தொகுதிகள், சைபர் பாதுகாப்பு கட்டமைப்புகள், வணிகப் பகுப்பாய்வு, டிஜிட்டல் அறிக்கையிடல் போன்றவை கணக்கியல் துறையை எவ்வாறு மாற்றியமைக்கின்றன என்பதை, 2025-2030 AAT பாடத்திட்டம் தெளிவாகக் கையாள்கிறது. டிஜிட்டல் அறிவு, நிலைபேறான கணக்கியல், நெறிமுறை ரீதியான தலைமைத்துவம் மற்றும் பகுப்பாய்வுத் திறன் ஆகியவற்றை அடித்தளமாகக் கொண்டுள்ள இந்த மாற்றியமைக்கப்பட்ட கட்டமைப்பானது, தொழில்நுட்பம் சார்ந்த வணிகச் சூழலில் வெற்றிபெறத் தேவையான அறிவு, திறன், மனப்பாங்கை மாணவர்களுக்கு வழங்குகிறது. புதிய 2025-2030 AAT பாடத் திட்டமானது தொழில்நுட்பத் திறன் மூலம் நிலையான வேலைவாய்ப்பை உறுதி செய்யும் எனும் வலுவான வாக்குறுதியை வழங்குகிறது.
இந்த பாடத்திட்டமானது நான்கு ஒருங்கிணைந்த தூண்களின் கீழ் கட்டமைக்கப்பட்டுள்ளது. கணக்கியல் மற்றும் நிதி (Accounting and Finance), செயல்திறன் பகுப்பாய்வு மற்றும் முகாமைத்துவம் (Performance Analysis and Management), சட்டம், வரிவிதிப்பு மற்றும் கணக்காய்வு (Legal, Taxation and Auditing), டிஜிட்டல் மாற்றம் மற்றும் தொடர்பாடல் (Digital Transformation and Communication) ஆகியவையே அவையாகும். இது 13 பாடநெறிகளைக் கொண்ட, 3 நிலைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு விநியோக சங்கிலியின் அடிப்படைகள், ERP தொகுதிகள், IoT எண்ணக்கருக்கள், சைபர் பாதுகாப்பு கட்டமைப்புகள், செயற்கை நுண்ணறிவு பயன்பாடுகள், டிஜிட்டல் சூழலில் நெறிமுறை ரீதியான சிந்தனைகள் போன்ற அதிகரித்து வரும் தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. உலகளாவிய எதிர்பார்ப்புகளுக்கு இணங்க, நிலைபேறான தன்மை மற்றும் ஒருங்கிணைந்த அறிக்கையிடல் கொள்கைகளும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன. மேலும், இது உயர்தர (A/L) வர்த்தகப் பாடத்திட்டத்துடன் ஒத்துப்போவதால், பாடசாலை கல்வியை முடித்தவர்கள் குறுகிய காலத்தில் தொழில்முறை ரீதியான தகுதியை பெறுவதற்கான தடையற்ற பாதையை வழங்குகிறது.
கல்விசார் கற்கையுடன் சேர்த்து, டிஜிட்டல் பணிச் சூழல் மேற்பார்வையின் கீழ் பூர்த்தி செய்யப்படும் ஒரு வருட கால கட்டாய தொழில்முறை பயிற்சித் திட்டமும் இதில் உள்ளடங்கியுள்ளது. AAT இறுதி பரீட்சியில் சித்தியடைந்த மாணவர்கள் இலங்கை கணக்கியல் தொழில்நுட்பவியலாளர் சங்கத்தில் உறுப்பினராக இணைய தகுதி பெறுகிறார்கள். இந்தத் தொழில் சார்ந்த அணுகுமுறையானது, பட்டதாரிகள் பகுப்பாய்வுத் திறன் கொண்டவர்களாகவும், நெறிமுறை சார்ந்தவர்களாகவும், டிஜிட்டல் அறிவு பெற்றவர்களாகவும், நவீன பணியிடத்திற்கு முழுமையாக தயாரானவர்களாகவும் இருப்பதை உறுதி செய்கிறது. இது முறையான தலைமைத்துவ திறன் பாடத்திட்டத்தின் மூலம் மேலும் பலப்படுத்தப்படுகிறது.
புதிய பாடத்திட்டத்தின் மூலம் தொழில்முறை ரீதியான இடம்பெயர்வு மற்றும் வாழ்க்கை முன்னேற்றம் போன்றன கணிசமான வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளன. இலங்கையின் பட்டயக் கணக்காளர் நிறுவனம் (CA Sri Lanka), CIMA, ACCA, CMA Sri Lanka, IPA Australia, IFA UK மற்றும் உள்நாட்டு, வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் போன்ற முன்னணி நிறுவனங்கள் AAT உறுப்பினர்களுக்கும் அதில் சித்தியடைந்தவர்களுக்கும் (கணக்கியல் மற்றும் வணிக டிப்ளோமாதாரிகள்) தொடர்ச்சியான விலக்களிப்புகளை வழங்குகின்றன. குறிப்பாக, புதிய கட்டமைப்பின் கீழ் AAT சித்தியடைந்தவர்களுக்கு CA Sri Lanka நிறுவகத்தின் வணிக மட்ட (Business Level) பாடங்களில் 4 தொழில்நுட்பப் பாடங்கள் விலக்களிக்கப்படுவதுடன், Business Capstone பாடத்தை மாத்திரம் முடித்து அவர்கள் நேரடியாக அடுத்த நிலைக்குச் செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்கள் சர்வதேச அங்கீகாரம் பெற்ற உயர்தர தொழில்முறை தகுதிகளை பெறுவதற்கான தெளிவான மற்றும் வினைத்திறன் மிக்க பாதையை பெறுகின்றனர்.
அது மாத்திரமன்றி, 2025-2030 பாடத்திட்டம் ஈடு இணையற்ற அணுகல் வசதியையும் எளிமையையும் வழங்குகிறது. மாணவர்கள் தமது தொழில்முறைப் பயணத்தை உடனே ஆரம்பிக்கும் வகையில், 2026 ஜனவரியில் உயர்தர (A/L) பரீட்சை எழுதியவர்களும், பெப்ரவரி 2026 இல் சாதாரண தர (O/L) பரீட்சை எழுதியவர்களும் தங்களது பெறுபேறுகள் வெளிவரும் வரை காத்திருக்காமல் AAT ஸ்ரீலங்காவில் பதிவு செய்ய முடியும். மாணவர்கள் 12 முதல் 18 மாதங்களுக்குள் முழுமையான கல்விப் பாடத்திட்டத்தை முடித்துவிட்டு, அதன் பின்னர் முறையான தொழில்முறைப் பயிற்சியை பெறலாம். சாதாரண கட்டண முறையில் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் கற்பிக்கப்படும் AAT பாடநெறியானது, இலங்கை முழுவதும் உள்ள மாணவர்களுக்கு தொழில்முறை கல்வியை எட்டக்கூடியதாக மாற்றுகிறது. இது வெறுமனே கல்வித் தகுதி மட்டுமல்லாமல், எதிர்காலத்திற்கான ஒரு முதலீடுமாகும்.
இது குறித்து, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியரும், 2025-2030 AAT பாடத்திட்ட மேம்பாட்டுத் திட்டத்தின் ஆலோசகருமான பேராசிரியர் ஹிலாரி ஈ. சில்வா கருத்துத் தெரிவிக்கையில், “இந்தப் பாடத்திட்டமானது தொழில்முறை கற்றலுக்கும் தொழில்துறை எதிர்பார்ப்புகளுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைப்பதன் மூலம், அதிகரித்து வரும் உலகளாவிய சவால்களை மேம்படுத்தப்பட்ட டிஜிட்டல் திறன்கள் மூலம் எதிர்கொள்ளும் வகையில், எதிர்கால இடைநிலை கணக்கியல் நிபுணர்களை தயார்படுத்துகிறது. இந்த முயற்சியானது AAT மாணவர்களின் தொழில்முறை வளர்ச்சிக்கு கணிசமான வகையில் பங்களிக்கும் என்பதில் எனக்கு எவ்வித சந்தேகமும் இல்லை.” என்றார்.
மேலதிக தகவல்களுக்கு: www.aatsl.lk


END