தொழில்துறையை இலக்காகக் கொண்ட உலகளாவிய கல்வியை வழங்குவதில் நிறுவனத்தின் அர்ப்பணிப்பை பிரதிபலிக்கும் 2025ஆம் ஆண்டு மாணவர்கள்
Belmont Institute of Higher Education உயர் கல்வி நிறுவனம், தனது 2025ஆம் ஆண்டுக்கான பட்டமளிப்பு விழாவை கொழும்பு வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் வெகு விமர்சையாகக் கொண்டாடியது. இது மாணவர்களின் கல்வி மற்றும் தொழில்முறைப் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாகும். இந்த விழாவில், தங்களது கல்வி மற்றும் தொழில்முறை பாடநெறிகளை வெற்றிகரமாக நிறைவு செய்த மாணவர்களின் விடாமுயற்சி, அர்ப்பணிப்பு மற்றும் திறமைக்கு கௌரவம் அளிக்கப்பட்டது.
இன்றைய போட்டித்தன்மை வாய்ந்த தொழில் உலகில், அவசியமான நடைமுறைத் திறன்கள் மற்றும் நெறி சார்ந்த பண்புகளுடன் மாணவர்களை தயார்படுத்தும் அதேவேளை, சர்வதேச தரத்திற்கு இணையான தரமான மற்றும் தொழில் சார்ந்த கல்வியை வழங்குவதில் Belmont கல்வி நிறுவனம் கொண்டுள்ள உறுதிப்பாட்டை இந்நிகழ்வு மீள உறுதிப்படுத்திகிறது.
கொழும்பில் இடம்பெற்ற இந்தப் பட்டமளிப்பு விழாவில் விசேட அதிதிகள், சிரேஷ்ட முகாமைத்துவ குழுவினர், விரிவுரையாளர்கள், பெற்றோர், பட்டதாரிகள் என பலரும் கலந்துகொண்டனர். மாணவர்களின் பல ஆண்டுகால கல்வி முயற்சி மற்றும் தனிப்பட்ட வளர்ச்சியின் உச்சகட்டமாக அமைந்த இந்த நிகழ்வானது, குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நலன்விரும்பிகளின் வருகை மூலம் மிகவும் உணர்வுபூர்வமான ஒரு கொண்டாட்டமாக அமைந்தது.
2025 ஆம் ஆண்டின் பட்டதாரிகளுக்கு வணிகம் மற்றும் முகாமைத்துவம் (Business and Management), மனிதவள முகாமைத்துவம் (HRM), தகவல் தொழில்நுட்பம் (IT), தொழில்முறை மேம்பாடு மற்றும் கல்வி போன்ற பல்வேறு துறைகளின் கீழ் சான்றிதழ்கள் மற்றும் டிப்ளோமாக்கள் வழங்கப்பட்டன. இது கல்வி நிறுவனத்தின் பல்வகைப்பட்ட கல்வித் தன்மைகளையும், தொழில்துறைக்கு அவசியமான தகுதிகளை வழங்குவதில் கல்வியகம் கொண்டுள்ள அக்கறையையும் வெளிப்படுத்துகிறது.
மிக கோலாகலமாக ஆரம்பித்த இந்நிகழ்வின் ஆரம்ப உரையில், மாணவர்கள் தங்களது கல்விப் பயணத்தில் காட்டிய கடின உழைப்பு, தயார்நிலை, பாடநெறி முழுவதுமான அவர்களது அர்ப்பணிப்பு வெகுவாகப் பாராட்டப்பட்டது. அத்துடன், எதிர்காலச் சவால்களை நம்பிக்கையுடனும் நேர்மையுடனும் எதிர்கொள்ள பட்டதாரிகளை ஊக்கமளிக்கும் வகையிலான உரைகள் நிகழ்த்தப்பட்டன. தரமான உயர்கல்வியை வழங்குவதன் மூலம் மாணவர்களை சமூக ரீதியான சவால்களுக்கு தயார்படுத்துவதில் நிறுவனத்தின் அர்ப்பணிப்பை அவர்கள் சுட்டிக்காட்டினர்.
இந்நிகழ்வில் உரையாற்றிய நிறுவகத்தின் தலைவர் பாயிஸ் ஷெரிப்தீன், பட்டதாரிகளுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்ததோடு, தொழில்முறை வெற்றியுடன் பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். பட்டமளிப்பு என்பது ஒரு பாடநெறியின் முடிவு மட்டுமல்ல, அது வாழ்நாள் முழுவதும் தொடருகின்ற கற்றல், தழுவிக் கொள்ளல், நெறி சார்ந்த தலைமைத்துவத்தின் ஆரம்பம் என அவர் சுட்டிக் காட்டினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “பட்டமளிப்பு என்பது ஒரு புதிய பொறுப்பின் ஆரம்பமாகும். இங்கு நீங்கள் பெற்ற அறிவானது ஒருமைப்பாடுடனும், நோக்கம் சார்ந்தாகவும் பயன்படுத்தப்பட வேண்டும். தொடர்ச்சியாக மாறிவரும் தொழில் உலகில், புதிய விடயங்களை கற்றுக்கொள்ளும் ஆர்வமும், சூழ்நிலைக்கு ஏற்ப மாறும் தன்மையும் கொண்டவர்களுக்கே வெற்றி சொந்தமாகும்.” என்றார்.
சமூகத்திற்கும் பொருளாதாரத்திற்கும் அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்கக்கூடிய பொறுப்புள்ள நிபுணர்களை உருவாக்குவதில் கல்வியின் முக்கியத்துவத்தை ஷெரிப்தீன் மேலும் விளக்கினார். Belmont Institute of Higher Education நிறுவனம் வெறுமனே தொழில்நுட்பத் திறன் கொண்டவர்களை மட்டுமல்லாமல், சமூகப் பொறுப்புணர்வு மற்றும் உலகளாவிய சிந்தனை கொண்ட பட்டதாரிகளை உருவாக்குவதில் உறுதியாக இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
கல்வி மற்றும் தொழில்துறைக்கு இடையிலான இடைவெளியை குறைக்கும் வகையில், பாடத்திட்ட அறிவை நடைமுறைப் பயன்பாட்டுடன் இணைக்கும் பாடத்திட்டங்களை வழங்குவதில் Belmont Institute கொண்டுள்ள உறுதிப்பாட்டை கல்விப் பிரதிநிதிகள் மீண்டும் வலியுறுத்தினர். எதிர்கால வேலைவாய்ப்பு தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், நிபுணர்களின் ஆலோசனையுடன் பாடத்திட்டங்கள் தொடர்ச்சியாக புதுப்பிக்கப்படுவதாக அவர்கள் தெரிவித்தனர்.
இந்நிகழ்வின் போது மாணவர் பிரதிநிதிகளும் உணர்வுபூர்வமான உரைகளை நிகழ்த்தினர். தங்களுக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் வழிகாட்டிகளுக்கு அவர்கள் நன்றி தெரிவித்தனர். மேலும், Belmont Institute மாணவர் பேரவை உறுப்பினர்களின் சிறந்த செயற்பாட்டை கௌரவிக்கும் வகையில் அவர்களுக்கு மதிப்புமிக்க ‘Belmont Medal’ வழங்கி கௌரவிக்கப்பட்டது.
அண்மைய வருடங்களில் கல்விச் சூழலில் ஏற்பட்ட மாற்றங்கள் மற்றும் சவால்களை வெற்றிகரமாக எதிர்கொண்டதற்காக பட்டதாரிகளை விரிவுரையாளர்கள் பாராட்டினர். 2025 ஆம் ஆண்டின் பட்டதாரிகள் ஒப்பிட முடியாத ஒழுக்கம் மற்றும் தனிப்பட்ட மேம்பாட்டில் காட்டிய அர்ப்பணிப்பு அனைவரையும் கவர்ந்ததாக அவர்கள் இங்கு குறிப்பிட்டனர்.
பட்டதாரிகள் தங்களது கல்விப் பயணத்தின் போது கிடைத்த வழிகாட்டல்களுக்கு நன்றி தெரிவித்தனர். குறிப்பாக, வேலைவாய்ப்பிற்கு தேவையான தன்னம்பிக்கை, விமர்சன ரீதியான சிந்தனை மற்றும் நிஜ உலகத் திறன்களை வளர்ப்பதில் நிறுவனம் காட்டிய அக்கறை, தங்களை எதிர்காலத்திற்கு சிறந்த முறையில் தயார்படுத்தியுள்ளதாக அவர்கள் கூறினர்.
பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்கள் தமது பிள்ளைகளின் இந்த வெற்றியை கண்டு பெருமிதம் அடைந்ததோடு, Belmont நிறுவனத்தின் ஆதரவான கற்றல் சூழலை வெகுவாகப் பாராட்டினர். இந்நிகழ்வு வெறுமனே கல்வி வெற்றியின் கொண்டாட்டமாக மட்டுமல்லாமல், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு இடையிலான கூட்டு முயற்சியின் வெற்றியாகவும் அமைந்தது.
இவ்விழாவின் இறுதியில், 2025 ஆம் ஆண்டின் பட்டதாரிகள் தங்களது வாழ்வின் அடுத்த கட்டத்திற்குள் நுழையும் வேளைக்கான அடையாளமாக வெற்றிக் கொண்டாட்டங்கள் இடம்பெற்றன. பல்வேறு துறைகளில் பணிகளை பொறுப்பேற்கவுள்ள இந்த பட்டதாரிகள், Belmont Institute of Higher Education நிறுவகத்தில் தாங்கள் கற்றுக் கொண்ட விழுமியங்கள், அறிவு மற்றும் திறன்களை தங்களோடு சுமந்து செல்கின்றனர்.
தரமான கல்வி மற்றும் தொழில்துறைக்கு ஏற்ற கற்றல் முறைகள் மூலம் Belmont Institute of Higher Education தனது நிலையைத் தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது. தேசிய வளர்ச்சி மற்றும் உலகளாவிய பொருளாதாரத்திற்கு ஆக்கபூர்வமான பங்களிப்பை வழங்கக்கூடிய திறமையான, நம்பிக்கையான, நேர்மையான நிபுணர்களை உருவாக்குவதே நிறுவனத்தின் நிலையான தொலைநோக்காகும்.