விவசாயத் தொழில்நுட்பத்தில் (AgriTech) இலங்கையின் முன்னோடியாக விளங்கும் வணிக தொடக்க (startup) நிறுவனமான SpectrifyAI, தேயிலைத் தொழில்துறைக்கான தனது புரட்சிகரமான AI அடிப்படையிலான தளத்தை இந்த ஜனவரி மாதம் உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இலங்கைத் தேயிலை ஆராய்ச்சி நிறுவனத்தின் (TRI) மதிப்பிற்குரிய சான்றிதழைப் பெற்றுள்ள இந்தத் தொழில்நுட்பம், தேயிலையின் பாரம்பரியமான தர பரிசோதனை முறைகளை மாற்றி, இலங்கை தேயிலைக்கான (Ceylon Tea) தரவு சார்ந்த முடிவெடுக்கும் புதிய யுகத்தை உருவாக்க அடியெடுத்து வைத்துள்ளது.
இலங்கையின் மிக முக்கியமான ஏற்றுமதிப் பொருளான தேயிலையிலிருந்து விவசாயத் துறையை டிஜிட்டல் மயமாக்கி நவீனப்படுத்தும் நோக்கில் கடந்த மூன்று ஆண்டுகளாக SpectrifyAI இந்த செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறது. இலங்கையின் தேயிலைத் தொழில்துறையிலிருந்து சேகரிக்கப்பட்ட பிரத்தியேகமான தரவுகளைக் கொண்டு பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியின் அடிப்படையில், தேயிலையின் தரத்தின் முக்கிய அளவீடுகளை முன்னெப்போதும் இல்லாத வேகத்திலும் துல்லியத் தன்மையுடனும் அளவிடக்கூடிய தளம் உருவாக்கப்பட்டுள்ளது. தேயிலையின் தரத்தை அளவிடுவதற்காகவே சிறப்பாகப் பயிற்றுவிக்கப்பட்ட இத்தகைய AI மாதிரிகள் வெளியிடப்படுவது உலகில் இதுவே முதன்முறையாகும்.
வழக்கமாக தேயிலையில் ஈரப்பதனை பரிசோதிக்க ISO தரநிலை அடிப்படைக்கு அமைய 6 மணிநேரம் ‘ஒவன்’ (oven) மூலம் உலர்த்தும் கடினமான செயல்முறை அவசியமாகிறது. ஆனால், SpectrifyAI இன் தீர்வானது இந்த முறையை முறியடித்து, 15 செக்கன்களுக்குள் 95% இற்கும் அதிகமான துல்லியத்துடன் முடிவுகளை வழங்குகிறது. ஈரப்பதனை மட்டும் அளவிடாமல், தரத்தின் முக்கிய குறிகாட்டியான மொத்த பொலிபீனோல்கள் (Total Polyphenols – TPP) மற்றும் இலைகளின் ஒட்டுமொத்த தரம் ஆகியவற்றையும் இது அளவிடுகிறது. அது மாத்திரமன்றி, இது AI அடிப்படையிலான விநியோகச் சங்கிலித் தடமறியும் வசதியை (supply-chain traceability) வழங்குவதன் மூலம், தேயிலைத் தோட்டத்தில் ஆரம்பித்து நுகர்வோர் வரை தரத்தையும் வெளிப்படைத் தன்மையையும் உறுதி செய்கிறது.

இது குறித்து, SpectrifyAI இன் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜீவன் ஞானம் தெரிவிக்கையில், தேயிலை ஆராய்ச்சி நிறுவனத்துடன் பல ஆண்டுகளாக மேற்கொண்ட தீவிரமான ஒத்துழைப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து கிடைத்துள்ள இந்த அங்கீகாரமானது, எமது தொழில்நுட்பத்தின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துகிறது. விநியோகச் சங்கிலிகளை மதிப்புச் சங்கிலிகளாக மாற்றுவதே எமது நோக்கம் ஆகும். தேயிலை உற்பத்தியாளர்கள், தொழிற்சாலைகள் மற்றும் ஏற்றுமதியாளர்களுக்கு நம்பகமான தரவுகளை உடனடியாகப் பெற இந்தச் சான்றிதழ் உதவும்.” என அவர் குறிப்பிட்டார்.
இலங்கையின் தேயிலை தொழில்துறையில் இந்தத் தொழில்நுட்பத்தின் தாக்கம் மிகப் பெரியதாக அமையவுள்ளது. கென்யா 450,000 மெட்ரிக் தொன் அளவிலான தேயிலையை வருடாந்தம் உற்பத்தி செய்த போதிலும், இலங்கையின் பலம் எப்போதும் அது பேணி வரும் தேயிலையின் தரத்திலேயே அமைந்துள்ளதே அன்றி, அளவில் அல்ல. SpectrifyAI தளமானது, சர்வதேச ரீதியில் உயர்தரத் தேயிலையை உற்பத்தி செய்கின்ற இலங்கையின் நற்பெயரை மேலும் மேம்படுத்துவதோடு, உலகளாவிய சந்தையில் அதிக விலையைப் பெறவும் அதன் போட்டித் தன்மையை அதிகரிக்கவும் உதவும்.
இலங்கையில் தேயிலை விஞ்ஞானம், சரிபார்ப்பு மற்றும் தரநிலைகளுக்கான உத்தியோகபூர்வ நிர்வாக அமைப்பான தேயிலை ஆராய்ச்சி நிறுவனத்தின் (TRI) சான்றிதழானது, SpectrifyAI இன் தொழில்நுட்பத்தின் விஞ்ஞான துல்லியம் மற்றும் தொழில்துறையின் அங்கீகரிப்பிற்கு ஒரு சான்றாகும். தேயிலை தரம் தொடர்பான இலங்கையின் மிக உயர்ந்த நிறுவகத்திடமிருந்தான இந்த அங்கீகாரமானது, இந்த கண்டுபிடிப்பின் மாற்றத்தை ஏற்படுத்தும் திறனை எடுத்துக் காட்டுகிறது.
தேயிலை ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி எம்.ஏ.பி. ரணதுங்க இது குறித்து கருத்து வெளியிடுகையில், “கறுப்புத் தேயிலையில் ஈரப்பதனை விரைவாகக் கண்டறிய இந்த கையடக்கமான NIR சாதனங்களை வெற்றிகரமாக உறுதிப்படுத்திய விடயத்தை நாம் மகிழ்ச்சியுடன் தெரிவிக்க விரும்புகிறோம். ஈரப்பதனை மிகத் துல்லியமாக அளவிடும் திறனை இந்தச் சாதனங்கள் கொண்டுள்ளன என்பது ஆய்வுகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.” என்றார்.
ஆரம்பத்தில் தேயிலையில் மாத்திரம் கவனம் செலுத்தப்பட்ட போதிலும், கோபி உள்ளிட்ட ஏனைய விவசாயப் பொருட்களுக்கும் இந்தத் தொழில்நுட்பத்தை விரிவுபடுத்தும் நோக்கில் SpectrifyAI ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த விரிவாக்கமானது, விவசாய தொழில்நுட்ப புத்தாக்கத்தில் இலங்கையை ஒரு மையமாக மேலும் அதன் இடத்தை உயரத்திற்கு கொண்டு செல்லும்
SpectrifyAI பற்றி:
SpectrifyAI ஆனது, விவசாயத் துறைக்கான மேம்பட்ட இயந்திரக் கற்றல் (Machine Learning) கருவிகளை உருவாக்கும் இலங்கையிலுள்ள AI வணிக தொடக்க நிறுவனமாகும். பாரம்பரியத் தொழில்துறைகளை நவீனப்படுத்துவதில் கவனம் செலுத்தும் இந்நிறுவனம், தேயிலை விநியோகச் சங்கிலியில் ஆரம்பித்து பாரம்பரிய தொழில்துறைகளை டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் நவீனமயமாக்குவதில் கவனம் செலுத்துகிறது. அதன் புதிய AI இனால் இயக்கப்படும் தரம் தொடர்பான நுண்ணறிவு மற்றும் தேயிலையின் பாதையை கண்டறியக்கூடிய தளத்துடனான SpectrifyAI ஆனது, தேயிலை செய்கை, பதப்படுத்தல், வர்த்தகம் ஆகிய முறைகளில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.
இலங்கை தேயிலை ஆராய்ச்சி நிறுவனம் பற்றி:
இலங்கை தேயிலை ஆராய்ச்சி நிறுவனம் (TRI) ஆனது, தேயிலைத் தொழில்துறையின் வளர்ச்சிக்காக புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கி வழங்கும் ஒரு தேசிய நிறுவகமாகும். இலங்கையின் தேயிலை விஞ்ஞானம், சரிபார்ப்பு மற்றும் தரநிலைகள் குறித்த உத்தியோகபூர்வ அதிகார சபை எனும் வகையில், இலங்கை தேயிலைத் தொழில் துறை தொடர்பில் அறிமுகப்படுத்தப்படும் எந்தவொரு புதிய தொழில்நுட்பத்திற்கும் வழங்கப்படும் TRI இன் சான்றிதழானது அதன் உயர் தரத்தை எடுத்துக் கூறுகிறது.
ENDS