ஜோன் கீல்ஸ் அறக்கட்டளை மற்றும் விக்டோரியா கொல்ஃப் ரிசோர்ட்ஸ் நித்துலேமட மாதிரி முன்பள்ளியின் உரிமையை மெததும்பற பிரதேச சபையிடம் ஒப்படைத்துள்ளன

ஜோன் கீல்ஸ் அறக்கட்டளை (JKF) மற்றும் ரஜவெல்ல ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் விக்டோரியா கொல்ஃப் ரிசோர்ட் (VGR) ஆகியன நித்துலேமட மாதிரி முன்பள்ளியின் உரிமையை மெததும்பற பிரதேச சபையிடம் ஒப்படைத்துள்ளன.  அதனூடாக, கண்டி மாவட்டத்தின் மெததும்பற பிரதேச சபையின் பொறுப்பிலுள்ள பகுதிகளில் வசிக்கும் 3 முதல் 5 வயது வரையான சிறுவர்களின் ஆரம்பக் கல்விச் செயற்பாடுகளை அணுகும் திறனை மேம்படுத்துவதற்கு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

இரண்டு தசாப்த காலத்திற்கு மேலாக, உடகம பகுதியின் பல சமூகங்களைச் சேர்ந்த சிறுவர்கள், போதியளவு முன்பள்ளி வசதியை கொண்டிருக்கவில்லை. மிஹிர முன்பள்ளியின் ஆசிரியர், போதியளவு நிரந்தர இடவசதி இன்மை காரணமாக, பல தடவைகள் தமது செயற்பாடுகளை வெவ்வேறு பகுதிகளுக்கு இடம்மாற்ற நேர்ந்தது. இந்த சவாலைக் கவனத்தில் கொண்டு, 2020 ஆம் ஆண்டில் இந்தக் கிராமத்திற்கு பொருத்தமான முன்பள்ளி வசதியை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான பேச்சு வார்த்தைகளை ஜோன் கீல்ஸ் அறக்கட்டளை ஆரம்பித்திருந்தது. மாகாண கல்வி அமைச்சு, ஆரம்ப சிறுவர் விருத்தி அலகு (ECDU) மற்றும் மெததும்பற பிரதேச சபை ஆகியவற்றுடன் பல வருட கால திட்டமிடல் மற்றும் இணைந்த செயற்பாடுகளினூடாக, கொவிட் தொற்றுப் பரவல், பொருளாதார நெருக்கடி மற்றும் மோசமான வானிலை ஆகியவற்றுக்கு மத்தியிலும், முறையாக கட்டமைக்கப்பட்ட மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் அமைந்த முன்பள்ளியை 2025 ஒக்டோபர் மாதம் வெற்றிகரமாக நிறுவியிருந்தது.

முன்பள்ளியின் உரிமையை கையளிக்கும் வைபவம் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சருமான கே.டி.லால்காந்த மற்றும் மாகாண ஆளுனர் சமிளா அத்தபத்து மற்றும் மெததும்பற பிரதேச சபை தவிசாளர் ரவிந்து உஸ்வெட்டகெய்யாவ ஆகியோருடன், ஜோன் கீல்ஸ் குழுமத்தின் சார்பாக போக்குவரத்து பிரிவின் தலைவர் சாஃபிர் ஹஷிம், சமூகப் பொறுப்புணர்வு செயற்பாடுகளுக்கான தலைமை அதிகாரி கார்மலின் ஜயசூரிய, சர்வதேச கைகோர்ப்புகள் மற்றும் பங்காண்மைகளுக்கான சிரேஷ்ட உப தலைவரும், மற்றும் கூட்டாண்மை விவகாரங்களுக்கான தலைமை அதிகாரியுமான திலீப் முததெனிய மற்றும் விக்டோரியா கொல்ஃப் ரிசோர்ட் பொது முகாமையாளர் காஞ்சன விக்ரமசிங்க ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.

இந்நிகழ்வில், சமூகப் பொறுப்புணர்வு செயற்பாடுகளுக்கான தலைமை அதிகாரி கார்மலின் ஜயசூரிய கருத்துத் தெரிவிக்கையில், “ஜோன் கீல்ஸ் அறக்கட்டளையின் வியாபார மையப்படுத்தப்பட்ட சமூக வலுவூட்டல் நடவடிக்கையான ஜோன் கீல்ஸ் பிரஜா சக்தி திட்டத்தின் கீழ், விக்டோரியா கொல்ஃப் ரிசோர்ட் மற்றும் மத்திய மாகாண அரசுடன் இணைந்து நித்துலேமட பிரதேசத்தில் மாதிரி முன்பள்ளியை நிறுவியுள்ளமை தொடர்பில் நாம் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். போதியளவு முன்பள்ளி வசதிகளுடன் ஆரம்ப பிள்ளைப்பருவ விருத்திக்கு ஆதரவளிப்பதற்கான தேவை காணப்பட்டதுடன், சமூகத்தார் மற்றும் அரச அதிகாரத்தரப்பினருடன் கலந்துரையாடல்களை மேற்கொண்ட போது இனங்காணப்பட்ட முக்கிய தேவையாகவும் அமைந்திருந்தது. கல்வியை தொடர்வதற்கான வாய்ப்புகள் மற்றும் வளங்கள் போன்றவற்றை பெற்றுக் கொள்ளும் வசதியை சமமாக பெற்றுக் கொடுப்பதில் நாம் அதிகம் அக்கறை காண்பிப்பதுடன், சமூகங்கள் மத்தியில் ஒருமைப்பாட்டை ஏற்படுத்துவதிலும் நாம் எம்மை அர்ப்பணித்துள்ளோம். எமது செயற்பாடுகளினூடாக, கல்விசார் அபிவிருத்திக்கு ஆதரவளிக்கும் செயற்பாடுகளுக்கு ஆதரவளிக்கும் சூழலை மட்டும் எமது பயிலல் சூழல் உருவாக்கங்கள் ஏற்படுத்துவது மட்டுமன்றி, புரிதல், மதிப்பளித்தல் மற்றும் ஒற்றுமை ஆகியவற்றை சிறுவர்கள் மத்தியிலும், சமூகத்தார் மத்தியிலும் ஊக்குவித்து, இலங்கையர் எனும் ஒற்றை அடையாளத்தை வலுவூட்டுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.” என்றார்.

அமைச்சர் கே.டி.லால்காந்த கருத்துத் தெரிவிக்கையில், “வயது வந்தவர்களின் பழக்கங்களை மாற்றுவது என்பது மிகவும் கடினமானது. எவ்வாறாயினும், இளம் சிறுவர்களை ஆரம்ப பராயத்திலிருந்தே வழிநடத்தி ஒழுக்கமானவர்களாகவும், பொறுப்பு வாய்ந்த குடிமக்களாகவும் தயார்ப்படுத்தலாம். அவர்களை சரியான வழிநடத்தினால், அதனை புரிந்து கொண்டு, தமிழ், முஸ்லிம் அல்லது சிங்களம் எனும் பேதமின்றி, அனைவரும் இலங்கையர் எனும் அடையாளத்துடன் அவர்கள் வளர்வார்கள். ஆரம்ப, இரண்டாம் மற்றும் பல்கலைக்கழக கல்வியுடன், ஆரம்ப பள்ளி விருத்தியிலும் அரசாங்கம் பெருமளவு கவனம் செலுத்த வேண்டும் என்பதில் நான் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளேன்.  உண்மையில் எமக்கு மாற்றமொன்றை ஏற்படுத்த வேண்டுமாயின், ஆரம்பத்திலிருந்து நாம் அதனை தொடங்க வேண்டும். மெததும்பற என்பது பெரிய பிரதேசமாகும். ஆனாலும், இந்தப் பிரதேசத்தில் நிறுவப்பட்டுள்ள முதலாவது அரசாங்க பொறுப்பில் இயங்கும் முன்பள்ளியாக இது அமைந்துள்ளது. இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த முன்பள்ளி உறுதியான நியமத்தை ஏற்படுத்தி, நாடு முழுவதிலும் பல அரசாங்க முன்பள்ளிகளை நிறுவுவதற்கு முன்மாதிரியானதாக அமைந்திருக்கும் என நான் எதிர்பார்க்கிறேன்.” என்றார்.

பெருமளவான பெற்றோர்கள், அரச அதிகாரிகள் மற்றும் சமூக பிரதிநிதிகளும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். நிகழ்வை வண்ணமயமானதாக அமைந்திருக்கச் செய்யும் வகையில், முன்பள்ளி சிறுவர்கள் விருந்தினர்களை மகிழ்விக்கும் வகையில் நடன நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர். நித்துலேமட பகுதியைச் சேர்ந்த ஜோன் கீல்ஸ் அறக்கட்டளையின் ஆங்கில மொழி புலமைப்பரிசில் திட்டத்தின் மாணவர்களும் தமது ஆங்கில உரையாடல் திறன்களை வெளிப்படுத்தி, விருந்தினர்களை பரவசத்தில் ஆழ்த்தியிருந்தனர். இதனூடாக, ஜோன் கீல்ஸ் அறக்கட்டளையின் கல்விசார் செயற்திட்டங்களின் தாக்கம் வெளிப்படுத்தப்பட்டிருந்தது.

“நாளைய தேசத்தை வலுப்படுத்துவோம்” எனும் தனது நோக்கத்திற்கமைய, சமத்துவமான மற்றும் தாக்கத்தை ஏற்படுத்தும் கல்விசார் வாய்ப்புகளை உருவாக்குவதில் ஜோன் கீல்ஸ் அறக்கட்டளை தன்னை தொடர்ந்தும் அர்ப்பணித்துள்ளது.

கல்வி, சமூகம் மற்றும் வாழ்வாதாரம், சமூக சுகாதாரம் மற்றும் ஒற்றுமை மற்றும் உயிரியல் பரம்பல் ஆகியவை ஜோன் கீல்ஸ் அறக்கட்டளையின் நான்கு கவனம் செலுத்தும் பகுதிகளாகும் – இது ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சி (ஜேகேஎச்) இன் சமூக பொறுப்புணர்வு அமைப்பாகும். இது 7 மாறுபட்ட தொழில் துறைகளில் 80 க்கும் மேற்பட்ட நிறுவனங்களை இயக்கும் சந்தை மூலதனத்தின் அடிப்படையில் கொழும்பு பங்குப்பரிவர்த்தனையில் (CSE) பட்டியலிடப்பட்டுள்ள மிகப்பெரிய நிறுவனமாகும். 150 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட ஜோன் கீல்ஸ் குழுமம், 18,000 க்கும் மேற்பட்ட நபர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குகிறது மற்றும் கடந்த 20 ஆண்டுகளாக LMD சஞ்சிகையால் இலங்கையின் ‘மிகவும் மதிக்கப்படும் நிறுவனமாக’ தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. டிரான்ஸ்பரன்சி இன்டர்நஷனல் ஸ்ரீ லங்காவின் ‘கூட்டாண்மை அறிக்கையிடல் மதிப்பீட்டில் வெளிப்படைத்தன்மை’யில் ஜேகேஎச் தொடர்ந்து நான்காவது ஆண்டாக முதலிடத்தைப் பிடித்துள்ளது. உலகப் பொருளாதார மன்றத்தின் முழு உறுப்பினராகவும், ஐ.நா. உலகளாவிய ஒப்பந்தத்தின் பங்கேற்பாளராகவும் இருக்கும் அதே வேளையில், ஜோன் கீல்ஸ் அறக்கட்டளை மூலமாகவும், இலங்கையில் பிளாஸ்டிக் மாசுபாட்டைக் கணிசமாகக் குறைப்பதில் ஒரு ஊக்கியாக இருக்கும் ‘ Plasticcycle’ என்ற சமூக தொழில்முனைவோர் முயற்சியின் மூலமாகவும், “எதிர்காலத்துக்காக தேசத்தை வலுப்படுத்துதல்” என்ற அதன் சமூகப் பொறுப்புணர்வு தொலைநோக்குப் பார்வைக்கமைய ஜே.கே.எச் இயக்குகிறது.

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *