Hatch நிறுவனத்தால் இலங்கையின் முதலாவது புத்தாக்க மாவட்டம் அறிமுகம்

இலங்கையின் தேசிய விருது பெற்ற வணிக தொடக்கங்களின் மையமும், தொழில்முனைவோர் சூழல் தொகுதியின் உந்துசக்தியுமான Hatch நிறுவனம், கொழும்பு 01 இல் நாட்டின் முதலாவது புத்தாக்க மாவட்டத்தை (Innovation District) உருவாக்கும் தனது துணிச்சலான திட்டத்தை முன்னெடுத்து வருகிறது. இந்த தொலைநோக்குப் பார்வையானது, முதன்முதலில் 2025 மார்ச் மாதம் Startup Nation 2025 அறிமுக நிகழ்வின் போது பகிரங்கமாக அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, 2025 ஒக்டோபர் 01 ஆம் திகதி அத்திட்டத்தின் நிறைவின் போது இது மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது. இது நாட்டின் புத்தாக்கப் பயணத்தை வரையறுக்கும் தருணத்தை எடுத்துக் காட்டுகிறது.

2018 ஆம் ஆண்டு Hatch உருவாக்கப்பட்டதில் இருந்து, இணைந்து செயற்படுதல் புத்தாக்கத்திற்கு உந்துசக்தி அளிக்கிறது என்பதையும், பொருளாதார வளர்ச்சிக்கு தொழில்முனைவோர் ஒரு ஊக்கியாக செயற்படுகின்றனர் என்பதையும் அடிப்படையாகக் கொண்ட நம்பிக்கையின் அடிப்படையில் செயற்பட்டு வருகிறது. கடந்த ஏழு வருடங்களில், “வணிக தொடக்கங்கள் தொடர்பான அனைத்து விடயங்களுக்கும் ஈர்ப்பு விசையாக” இந்நிறுவனம் உருவெடுத்துள்ளது. வாய்ப்பு, உலகளாவிய இணைப்பு, நிறுவுனர்கள் புத்தாக்கத்தை முன்னெடுத்து வளரக்கூடிய ஒரு பாதுகாப்பான சூழலை இது வழங்கி வருகிறது. இன்று, இலங்கையின் செயற்பாட்டில் உள்ள பெரும்பாலான தொழில்முனைவோர், Hatch நிறுவனத்தின் திட்டங்கள் மற்றும் சேவைகள் மூலம் சாதகமான நிலையில் விளங்குகின்றனர்.

தற்போது அறிமுகமாகும் Hatch புத்தாக்க மாவட்டம் எண்ணக்கருவானது, இப்பயணத்தின் அடுத்த படியாகும். இது 2027 ஆம் ஆண்டளவில் 3,000 இற்கும் மேற்பட்ட தொழில்முனைவோர் மற்றும் சிறிய, நடுத்தர தொழில்முனைவாளர்கள் (SMEs), படைப்பாளர்கள்,  புத்தாக்கம் சார்ந்த வணிகங்களை வலுவூட்டும் ஒரு இலட்சியம் மிக்க அபிவிருத்தியாகும். கொழும்பு 01 இன் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்த மாவட்டமானது, இணைந்து பணியாற்றும் பணியிடங்கள் (co-working spaces), உருவாக்குனர் ஸ்டுடியோக்கள் (maker studios), நிறுவன புத்தாக்க ஆய்வகங்கள், ஓய்வறைகள், சந்திப்பு அறைகள், அரச – தனியார் துறை பங்காளிகளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட வசதிகள் ஆகியவற்றை கொண்டதாக அமைந்திருக்கும். நோக்கங்களை அடைவதை அடிப்படையாகக் கொண்டு நிர்மாணிக்கப்பட்ட இச்சூழலானது, நிறுவுனர்கள் மற்றும் வளர்ந்து வரும் வணிகங்களுக்கு அவர்களின் முயற்சிகளை விரைவுபடுத்துவதற்கு அவசியமான உட்கட்டமைப்புகள், கருவிகள் மற்றும் ஆதரவை அணுகுவதற்கான வழியை ஏற்படுத்தும்.

 இணைந்து செயற்படுதல் மற்றும் புத்தாக்கம் ஆகிய முக்கிய தூண்களால் வழிநடத்தப்படும் இந்த மாவட்டத்தின் சூழல் கட்டமைப்பு மாதிரியானது, பெருநிறுவனங்கள், முதலீட்டாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் உலகளாவிய அபிவிருத்தி நிறுவனங்களுடன் வணிக தொடக்கங்களை இணைக்கிறது. இந்த வலையமைப்பிற்கு, அர்த்தமுள்ள நிறுவுனர் – மூலதன உறவுகளை மேம்படுத்துவதற்காக கட்டமைக்கப்பட்ட, ஒரு அர்ப்பணிப்புள்ள நிறுவுனர் மற்றும் முதலீட்டாளர் மன்றம் (Founder & Investors Club) காணப்படும் என்பதோடு, புத்தாக்கத்திற்கான துடிப்பான, பன்முகச் சூழலை உருவாக்கி, தொழில்முனைவோரின் மனதில் கலாசார வெளிப்பாட்டை கொண்டுவரும் ஆக்கக்கலைகள் மற்றும் சமையல் கலைகளுக்கான பகுதிகள் ஆகியனவும் உள்ளடக்கப்பட்டிருக்கும்.

Hatch இனால் ஏற்கனவே நிரூபிக்கப்பட்டுள்ள தாக்கமானது, இதன் அடுத்த கட்டத்திற்கான ஒரு வலுவான அடித்தளத்தை அமைக்கிறது. குறிப்பாக நிறுவனத்தின் 23 இற்கும் அதிகமான திட்டங்கள், 400 இற்கும் அதிக வணிக தொடக்கங்களுக்கு ஆதரவளிக்கப்பட்டமை, 95% இற்கும் அதிக பயன்பாட்டு வீதம், பசுமை தொழில்நுட்பம், விவசாய தொழில்நுட்பம், தூய வலுசக்தி, நிதியியல் தொழில்நுட்பம், AI மூலமான தீர்வுகள் ஆகியவற்றிலான முன்னேற்றங்களை குறிப்பிடலாம். தெற்காசியா, ஐக்கிய அரபு இராச்சியம், சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் நிறுவனத்தின் பிராந்திய விரிவாக்கங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதால், உலகளாவிய புத்தாக்க வரைபடத்தில், இலங்கையின் தடத்தையும் Hatch உலகிற்கு வெளிப்படுத்துகிறது.

இது குறித்து, Hatch இன் இணை நிறுவுனரும் அதன் பணிப்பாளருமான ஜீவன் ஞானம் கருத்து வெளியிடுகையில், “புத்தாக்க மாவட்டம் என்பது ஒரு உட்கட்டமைப்பை ஏற்படுத்துவதற்கு அப்பாற்பட்ட திட்டமாகும். இது நிறுவனங்களை வலுவூட்டுவதற்கும், முதலீட்டை கவர்வதற்கும், தொழில்முனைவோர் மூலம் வடிவமைக்கப்பட்ட ஒரு புத்தாக்கப் பொருளாதாரத்தை உருவாக்குவதற்குமான தேசிய ரீதியிலான அர்ப்பணிப்பாகும்.” என்றார்.

இலங்கை ஒரு அறிவு சார்ந்த எதிர்காலத்தை நோக்கி விரைந்து செல்லும் நிலையில், Hatch Innovation District ஆனது Startup Nation 2025 மூலம் தூண்டுதலளிக்கப்பட்ட ஒரு பயணத்தின் அடுத்த அத்தியாயமாகவும், இப்பிராந்தியத்திற்கு வாய்ப்பை ஏற்படுத்தும் ஒரு கலங்கரை விளக்கமாகவும் திகழ்கிறது.

மேலதிக விபரங்களுக்கு நுழையுங்கள்:  www.hatch.lk

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *