நிலைபேறான தன்மை மற்றும் சமூக நலன் மீதான தமது உறுதிப்பாட்டை வலுப்படுத்தும் வகையில், டேவிட் பீரிஸ் குழுமம் (David Pieris Group) மாஹோ பிரதேச சபைக்கு 500 வீதி விளக்குகளை நன்கொடையாக வழங்கியுள்ளது. மிக நீண்ட காலமாக இந்தப் பிரதேசத்தில் வாழும் சமூகங்கள் மற்றும் வனவிலங்குகள் ஆகிய இரண்டையும் பாதித்து வரும் மனித-யானை மோதலைக் குறைப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
இலங்கையில் மிக நீளமான தந்தங்களைக் கொண்டதாக அறியப்படும் ‘காவன்திஸ்ஸ’ எனும் பிரபலமான யானை வசிக்கும் மாஹோ மற்றும் அம்பன்பொல பகுதிகளில், மக்களும் யானைகளும் பாதிக்கப்படும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றன. இரு தரப்பும் பாதுகாப்பான சகவாழ்வை மேம்படுத்துவதற்காக, அண்மைக் காலங்களில் இரவில் வீதிகளை ஒளியூட்ட 3,000 இற்கும் மேற்பட்ட வீதி விளக்குகள் அப்பகுதியில் நிறுவப்பட்டுள்ளன. இருப்பினும், அவற்றில் சுமார் 500 மின்விளக்குகள் செயலிழந்துள்ளதால், இரவு நேரத்தில் பயணிக்கும் மக்கள் மற்றும் வனவிலங்குகளுக்கு அபாயங்கள் அதிகரித்துள்ளன.
அதற்கமைய, இந்தத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், டேவிட் பீரிஸ் குழுமத்தின் சமூக நலக் குழுமம் புதிய வீதி மின்விளக்குகளை நன்கொடையாக வழங்க முழுமையாக நிதியளித்துள்ளது. இந்த முயற்சியானது வீதிப் பாதுகாப்பை மேம்படுத்துவதுடன், இரவில் மனிதர்களும் யானைகளும் திடீரென ஒருவருக்கொருவர் முகம்கொடுப்பதை தவிர்க்கச் செய்வதன் மூலம் மனித – யானை மோதல்களை தடுப்பதற்கும் பங்களிக்கிறது.
இது தொடர்பில் மாஹோ பிரதேச சபையில் மிக எளிமையாக இடம்பெற்ற நிகழ்வின் போது, டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனி (லங்கா) லிமிடெட் நிறுவனத்தின் செயற்பாட்டுப் பிரிவின் பிரதி பிரதம அதிகாரியும் டேவிட் பீரிஸ் குழுமத்தின் சமூக நலத் திட்ட குழும உறுப்பினருமான கோசல ரத்நாயக்க, வீதி விளக்குகளின் தொகுதியை மாஹோ பிரதேச சபைத் தலைவர் சுமேத குமார ஹேரத்திடம் உத்தியோகபூர்வமாக கையளித்தார்.
இந்நிகழ்வில் Assetline Finance Limited (எசட்லைன் ஃபினான்ஸ் லிமிடெட் – AFL) நிறுவனத்தின் வணிக மேம்பாட்டு பிரதம முகாமையாளர் சஜித் வீரசேகர, AFL இன் வணிக மேம்பாட்டு பிரதம முகாமையாளர் திலான் குலசூரிய, டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனி நிறுவனத்தின் வாகன விற்பனை பிரிவு நிறைவேற்று அதிகாரி நிர்மாண டயஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இந்த நன்கொடை குறித்து கருத்து வெளியிட்ட மாஹோ பிரதேச சபைத் தலைவர் சுமேத குமார ஹேரத், “இரவு நேரத்தில் யானைகள் அடிக்கடி வீதிகளைக் கடந்து செல்கின்றன. அவற்றை வாகன சாரதிகளும் கிராம மக்களும் தெளிவாகக் காண வீதி மின்விளக்குகள் மிக முக்கியமானவை. இந்த முயற்சி மனிதன் மற்றும் யானை ஆகிய இரு உயிர்களையும் பாதுகாக்க உதவுவதுடன், சமூகம் மற்றும் வனவிலங்குகளுக்கு இடையில் நல்லிணக்கத்தையும் மேம்படுத்துகிறது.” என குறிப்பிட்டார்.
இத்தகைய முயற்சிகள் மூலம், டேவிட் பீரிஸ் குழுமம் தொடர்ச்சியாக மனிதத் தேவைகளுக்கும் சூழல் பாதுகாப்புக்கும் இடையில் சமநிலையை ஏற்படுத்தும் திட்டங்களுக்கு முன்னின்று செயற்பட்டு வருகின்றது. அத்துடன், பாதுகாப்பான, அதிக நிலைபேறான தன்மை கொண்ட சமூகங்களை உருவாக்குவதில் கவனம் செலுத்தும் ஒரு பொறுப்பான பெருநிறுவன பிரஜையாக அதன் பங்கை தொடர்ந்தும் வலுப்படுத்தி வருகிறது.
