‘இது எமது காலம்’ பயணிக்கும் வரலாற்று அருங்காட்சியகம் ஆகஸ்ட் 19-23 வரை கொழும்பில்

–  ‘இது எமது காலம்’ பயணிக்கும் வரலாற்று அருங்காட்சியகம் பொது மக்கள் பார்வைக்காக, கொழும்பு பொது நூலகத்தில் இன்று ஆரம்பமாகியது.

இவ் அருங்காட்சியகம் 2019ல் ஆரம்பித்தது தொடக்கம் 7 மாகாணங்களில், 10 மாவட்டங்களில், யாழ்ப்பாணம், கண்டி, குருநாகல், பதுளை, மட்டக்களப்பு, மன்னார் மற்றும் காலி உள்ளடங்களாக 11 நகரங்களுக்குப் பயணித்துள்ளது. 52,000க்கும் மேற்பட்ட பார்வையாளர்களின் பின்னூட்டலுடன் அருங்காட்சியகமானது மீள் புதுப்பிக்கப்பட்டுள்ளதுடன், புத்தம் புதிய ஒரு அனுபவத்தை பார்வையாளர்களுக்கு வழங்குவதற்காக மீள் வடிவமைக்கப்பட்ட அருங்காட்சியகமானது முதன்முறையாக கொழும்பில் ஆகஸ்ட் 19 முதல் 23 வரை காலை 8:30 தொடக்கம் மாலை 5:30 மணிவரை பொது மக்கள் பார்வைக்காக திறக்கப்படும்.

இவ் அருங்காட்சியகமானது, இலங்கையர்கள் தமது சிக்கல் மிகுந்த கடந்தகாலத்தை எவ்வாறு நினைவுகூறுகிறார்கள் என்பது பற்றிய பிரதிபலிப்பையும், கருத்தாடலையும் உருவாக்குவதன் மூலம் மக்கள் மத்தியில், இலங்கையின் சுதந்திரத்திற்குப் பின்னரான வரலாறு தொடர்பான புரிதலை ஆழப்படுத்த எத்தனிக்கின்றது. மேலும் பல்வேறு ஊடாடக்கூடிய மற்றும் பல்லூடக கண்காட்சிப் பொருட்கள் மூலம் வரலாற்றுப் புத்தகத்துக்கு அப்பாற்பட்ட பொதுமக்களின் நாளாந்த கதைகளுடன் சங்கமிக்க பார்வையாளர்கள் வரவேற்கப்படுகின்றன. இவ் அருங்காட்சியகமானது வரலாற்றின் பல கோணங்களை ஆராயவும், கூட்டு உரிமைகளுடன் மீள இணையவும், இலங்கையின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் பிரஜைகளின் வகிபாகத்தைப் பற்றி சிந்திக்கவும் ஒரு பொதுத் தளத்தை உருவாக்குகின்றது.

அருங்காட்சியகத்தின் உத்தியோகபூர்வ திறப்பு விழாவில் அரச, சிவில் சமூக, ஊடக மற்றும் இராஜதந்திர பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர். விசேட பிரமுகர்களாக கெளரவ. முனீர் முலஃபர், பிரதி அமைச்சர்- தேசிய ஒருமைப்பாடு, மேன்மைமிகு கார்மன் மொரேனோ- இலங்கை மற்றும் மாலைதீவிற்கான ஐரோப்பிய ஒன்றிய தூதுவர், சேரா ஹெசல்பாட்- துணைத் தலைவர், இலங்கை மற்றும் மாலைதீவிற்கான ஜேர்மன் தூதரகம், வ்ராய் கெலி பல்தஸார்- மேயர், கொழும்பு மாநகர சபை ஆகியோர்  கலந்து கொண்டனர்.

“இந்த பயணிக்கும் அருங்காட்சியகமானது இலங்கையர்களின் உண்மைக் கதைகளுடனும், வாழ்க்கை அனுபவங்களுடனும் எம்மை இணைப்பதுடன் பலதரப்பட்ட கோணங்களை புரிந்து கொள்ளவும் ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்துகின்றது. நாம் எவ்வாறு ஒன்றிணைந்து ஒரு எதிர்காலத்தை கட்டியெழுப்பலாம் என்பது பற்றி சிந்திக்கவும், பிரதிபலிக்கவும் ஒரு கருத்துமிக்க அவகாசத்தை இவ் அருங்காட்சியகம் வழங்குகின்றது” என இலங்கை மற்றும் மாலைதீவிற்கான ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் மேன்மைமிகு கார்மன் மொரேனோ அவர்கள் தெரிவித்தார்.

இலங்கையில் சமூக ஒருங்கிணைவுக்காக ஆக்கபூர்வமான அணுகுமுறைகளை மேம்படுத்துவதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் கூட்டுப் பொறுப்பை வலியுறுத்தும் வகையில் சேரா ஹெசல்பாட் அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில் “இவ் அருங்காட்சியகமானது, ஊடாடும் காட்சிப்பொருட்கள் மூலம், கேள்விகளை கேட்பதன் மூலம் மற்றும் பலதரப்பட்ட கோணங்களில் பிரதிபலிப்பதன் மூலம் பார்வையாளர்களை ஈடுபாட்டுடன் கலந்துகொள்ள வரவேற்கிறது. மேலும் அருங்காட்சியமானது பார்வையாளர்களுக்கு தத்தமது ஊகங்களை சவாலுக்கு உட்படுத்தவும், ஏனைய மக்களின் அனுபவங்களைப் பற்றி அறிந்து கொள்ளவும் ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்துகின்றது. அவ்வாறு செய்வதன் மூலம் ‘வரலாறு’ எனும் அலகை எமக்கு மிகத் தொலைவான, ஒரு நிலையான விடயம் எனும் எண்ணத்தை தகர்த்து, வரலாற்றை உயிர்ப்பு மிக்க, பொருத்தமான, பகிரக்கூடிய ஒரு விடயமாக பரிணாமப்படுத்துகின்றது” எனத் தெரிவித்தார்.

இந்த புதுப்பிக்கப்பட்ட ‘இது எமது காலம்’ பயணிக்கும் வரலாற்று அருங்காட்சியகமானது வரலாற்று உரையாடல் மற்றும் நினைவுகூரலுக்கான குழுமம் (Collective for Historical Dialogue and Memory) நிறுவனத்தினால் முன்னெடுக்கப்படுவதுடன் இதற்கு முன்னைய அருங்காட்சியகங்கள் “Search for Common Ground” (SFCG) நிறுவனத்துடன் ஒன்றிணைந்து முன்னெடுக்கப்பட்டன. இவ் அருங்காட்சியகத்திற்கு சமூக ஒத்திசைவையும் சமாதானத்தையும் வலுப்படுத்தும் (SCOPE) செயற்திட்டமானது ஆதரவளிக்கின்றது. இச் செயற்திட்டமானது ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஜேர்மன் பெடரல் வெளிநாட்டு அலுவலகத்தின் கூட்டு நிதியளிப்பில் முன்னெடுக்கப்படுவதுடன் GIZ நிறுவனத்தினால் நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சுடன் இணைந்து முன்னெடுக்கப்படுகின்றது.

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *