இலங்கையின் முன்னணி அலுமினிய உற்பத்தியாளரான Alumex PLC, வாடிக்கையாளர் விநியோகச் சங்கிலி முகாமைத்துவத்தில் (Supply Chain Management) விசேடத்துவத்துடனும் நிலைபேறான தன்மையுடனும் முன்னேறுவது தொடர்பான அதன் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளது. அண்மையில் Alumex நிறுவனம், Institute of Supply and Materials Management (ISMM) நிறுவனத்துடன் கூட்டுச் சேர்ந்துள்ளதன் மூலம் இது வெளிப்படுகின்றது. இந்த மூலோபாய கூட்டாண்மையின் உத்தியோகபூர்வ ஆரம்பம் சமீபத்தில் இடம்பெற்ற ஓர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் (MoU) மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. Alumex PLC நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் பிரமுக் தெடிவாலா, ISMM தலைவர் ஜயந்த கல்லேஹேவா மற்றும் இந்த நிகழ்வில் ISMM நிறுவனத்தின் தலைமைத்துவ குழுவினர் மற்றும் கூட்டாளர் நிறுவனங்களின் முக்கிய அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இது இலங்கையின் வாடிக்கையாளர் விநியோகச் சங்கிலித் துறையை வலுப்படுத்துவதில் ஒரு முக்கிய படியை எடுத்துக் காட்டுகிறது.
இலங்கையின் உற்பத்தித் துறையில் முன்னணியில் உள்ள ஒரு நிறுவனமான Alumex, நிலைபேறான தொழில்துறை வளர்ச்சி மற்றும் திறன் மேம்பாட்டுக்கு, வலுவான வாடிக்கையாளர் சங்கிலி முகாமைத்துவம் மிகவும் முக்கியமானதாக இருப்பதைக் கண்டறிந்துள்ளதன் காரணமாக இந்த கூட்டாண்மையை ஏற்படுத்தியுள்ளது. தொழில்துறையையும் கல்வித் துறையையும் ஒன்றிணைக்கும் Alumex நிறுவனத்தின் முயற்சியின் ஒரு அங்கமான இந்நடவடிக்கை, கல்வி மற்றும் நடைமுறை அனுபவத்துக்கிடையிலான இடைவெளியை நிரப்புவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த முயற்சியின் மூலம், அதிகரித்து வரும் தேவைகளுக்கேற்ப தொழில்துறை மற்றும் கல்வித் துறை ஆகிய இரண்டினதும் இணைந்து செயற்படுவதற்கான நிலைபேறான அடித்தளத்தை உருவாக்க Alumex நிறுவனம் பங்களிக்கும்.
இந்த உடன்படிக்கையின் படி, ISMM நிறுவனம், Alumex நிறுவனத்திற்கு நிறுவன உறுப்பினர் அங்கீகாரம் வழங்கும். அதனடிப்படையில் Alumex, ISMM மாணவர்களுக்கு பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புகளை முன்னுரிமையின் அடிப்படையில் வழங்கும். மேலும் Alumex இன் நவீன உற்பத்தி வளாகங்களில் விநியோகச் சங்கிலி முகாமைத்துவம் உள்ளிட்ட தொழில் அனுபவத்தை பெறும் வாய்ப்பு அளிக்கப்படும் என்பதோடு தொழில்முறை அறிமுக பயிற்சிகளை விசேட விகிதங்களில் வழங்கும். விநியோக சங்கிலி நிபுணர்கள் மூலமான அதிநவீன தொழில்துறை தகவல்களையும் அவர்கள் பெறுவார்கள். ISMM மாணவர்கள் Alumex இன் உற்பத்தி மற்றும் வாடிக்கையாளர் சங்கிலி மையங்களுக்கு சுற்றுப்பயணங்களுக்குச் செல்லும் வாய்ப்பையும் பெறுவர். இதன் மூலம் செயற்பாட்டு ரீதியான விசேடத்துவம் வாய்ந்த நடைமுறைகளை அவர்களால் நேரடியாக கற்றுக்கொள்ள முடியும்.
இந்த நிகழ்வின் போது Alumex PLC இன் முகாமைத்துவ பணிப்பாளர் பிரமுக் தெடிவாலா கருத்து வெளியிடுகையில், “உற்பத்தித் துறையின் வெற்றிக்கு வலிமையான மற்றும் ஈடுகொடுக்கக் கூடிய விநியோக சங்கிலி என்பது அத்தியாவசியமாகும். ISMM உடன் கூட்டுச் சேர்வதன் மூலம், இலங்கையின் வாடிக்கையாளர் விநியோகச் சங்கிலி துறையின் எதிர்காலத்தில் முதலீடு செய்வதோடு, தொழில்துறை திறனை மேம்படுத்தும் அடுத்த தலைமுறையை உருவாக்குவதிலும் நாம் பங்கு வகிக்கின்றோம். அறிவுப் பகிர்வு மற்றும் தொழில்துறை வெளிப்பாட்டை எமது செயற்பாட்டு கட்டமைப்பில் தொடர்ச்சியாக ஒருங்கிணைத்து வருவதால், இந்த ஒத்துழைப்பானது, Alumex நிறுவனத்திற்கு முக்கியமான ஒரு மைல்கல்லாகும்.” என்றார்.
ISMM தலைவர் ஜயந்த கல்லேஹேவா தெரிவிக்கையில், “உலகத் தரம் வாய்ந்த வாடிக்கையாளர் விநியோகச் சங்கிலி நிபுணர்களை உருவாக்கும் எமது பணிக்கான முக்கியமான முன்னேற்றமாக இந்த ஒத்துழைப்பு அமைந்துள்ளது. முன்னணி உற்பத்தி நிறுவனங்களுடன் இணைந்து செயற்படுவதன் மூலம் எமது மாணவர்களும் நிபுணர்களும் உலகளாவிய போட்டிக்குத் தயாராக இருப்பதை நாம் உறுதி செய்கிறோம்.” என்றார்.
தொழில்துறை மற்றும் கல்வித் துறைகளின் ஒருங்கிணைந்த ஒத்துழைப்பின் ஊடாக, இலங்கையின் உற்பத்தித் துறையில் முன்னணித் தலைவர் எனும் தனது நிலையை Alumex PLC வலுப்படுத்தி வருகிறது. இதன் மூலமாக நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் தொழில்துறை முன்னேற்றத்திற்கும் முக்கிய பங்களிப்பை நிறுவனம் வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.