முதலீட்டுத் துறையில் முன்னோடி நிறுவனமாகத் திகழும் First Capital Holdings PLC, அண்மையில் நடைபெற்ற பெருமைக்குரிய SLIM வர்த்தக நாம சிறப்பு விருதுகள் 2024 நிகழ்வில், “ஆண்டின் சிறந்த வர்த்தக நாமம்” எனும் உயரிய கௌரவத்தைப் பெற்றுக் கொண்டது. தொழிற்துறையில் இந்நிறுவனம் கொண்டுள்ள ஒப்பற்ற அர்ப்பணிப்பு மற்றும் புத்தாக்கம் போன்றவற்றை கௌரவிக்கும் முகமாக இவ்விருது அமைந்திருந்தது. இந்த உயர் விருதுக்கு மேலதிகமாக, First Capital மேலும் மூன்று விருதுகளையும் பெற்றுக் கொண்டது. ஆண்டின் சிறந்த சேவை வர்த்தக நாமம் – தங்க விருது, ஆண்டின் சிறந்த உள்நாட்டு வர்த்தக நாமம் – வெள்ளி விருது மற்றும் ஆண்டின் சிறந்த B2B வர்த்தக நாமம் – வெண்கல விருது போன்றன அவையாகும். இவற்றினூடாக போட்டிகரமான முதலீட்டு சூழலில் வெற்றிகரமான செயற்பாடு மற்றும் தலைமைத்துவம் போன்றவற்றுக்கான எடுத்துக்காட்டாக நிறுவனம் திகழ்கின்றமை மேலும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இலங்கையில் வர்த்தக நாமச்சிறப்பின் உயர்ந்த கௌரவ விருதான SLIM ஆண்டின் சிறந்த வர்த்தக நாம விருது, நாட்டின் புகழ்பெற்ற வர்த்தக நாமங்களினால் பெற்றுக் கொள்ளப்படும் அதியுயர் பெருமைக்குரிய கௌரவமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. கடந்த கால வரலாற்றில், அதியுயர் கீர்த்திநாமம் பெற்ற வர்த்தக நாமங்கள் மட்டுமே இந்த பெருமைக்குரிய விருதை சுவீகரித்துள்ளதுடன், தற்போது, இந்த பெருமைக்குரிய வரிசையில் First Capital நாமமும் இணைந்துள்ளது. இந்த மைல்கல் சாதனையானது, First Capital நிறுவனத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக மட்டும் இல்லாமல், இலங்கையின் மூலதன சந்தைகளுக்கும் முதலீட்டு துறைக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் அமைந்துள்ளது. மேலும், இந்தத் தொழிற்துறைகளின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் First Capital கொண்டிருக்கும் பங்களிப்பு மேலும் வலிமைப்படுத்தியுள்ளது. SLIM வர்த்தக நாம சிறப்பு விருதுகள் என்பது, வர்த்தகநாமமிடலில் சிறந்த சாதனைகளை கௌரவிக்கும் இலங்கையின் முன்னணி விருதுகள் வழங்கலாக அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும், இந்த உயர் நிகழ்வினூடாக, சிறந்த மூலோபாயங்கள், புத்தாக்கமான சிந்தனைகள் மற்றும் தேசத்தின் பொருளாதாரத்தில் நேர்த்தியான தாக்கத்தை ஏற்படுத்தும் பங்களிப்புகள் போன்றவற்றை மேற்கொண்டிருந்த வர்த்தக நாமங்களின் சிறப்பை கொண்டாடும் வகையிலும் அமைந்துள்ளது.
First Capital Holdings PLC இன் முகாமைத்துவ பணிப்பாளர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி தில்ஷான் வீரசேகர கருத்துத் தெரிவிக்கையில், “ஆண்டின் சிறந்த வர்த்தக நாம விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளதனூடாக, இலங்கையர்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் வகையிலான புத்தாக்கமான நிதித் தீர்வுகளை இலகுவாக அணுகல், அவர்களுக்கு பொருத்தமான வகையில் மற்றும் அவர்களில் நேர்த்தியான தாக்கத்தை ஏற்படுத்துவதில் நாம் காண்பிக்கும் அர்ப்பணிப்பு மேலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த நான்கு தசாப்த காலமாக, இலங்கையின் நிதித்துறையில் பிரதான செயற்பாட்டாளராக First Capital Holdings PLC வளர்ச்சி கண்டுள்ளது. அணுகக்கூடிய மற்றும் நேர்த்தியான தாக்கம் செலுத்தக்கூடிய நிதித் தீர்வுகளை பெற்றுக் கொடுக்கும் நோக்குடன் எமது பயணம் ஆரம்பமாகியதுடன், தேசத்தின் வளர்ச்சியடைந்து வரும் தேவைகளை நிவர்த்தி செய்யக்கூடிய நிறுவனமாக எம்மை உறுதியாக நிலைமாற்றிக் கொள்ள முடிந்துள்ளது. மாற்றமடைந்துவரும் நிதிக் கட்டமைப்பை கவனத்தில் கொண்டு, புதிய சந்தைப்போக்குகளை பின்பற்றி மற்றும் நவீன தீர்வுகளை அறிமுகம் செய்து, நாடு முழுவதிலும் எமது சென்றடைவை நாம் விரிவாக்கியுள்ளோம்.” என்றார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், “இதுவரை காலத்திலும், டிஜிட்டல் மேம்படுத்தலை First Capital பின்பற்றி வாடிக்கையாளர்களின் பரந்தளவு தேவைகளை நிவர்த்தி செய்யக்கூடிய நட்பான கட்டமைப்புகளையும், புத்தாக்கமான முதலீட்டு தீர்வுகளையும் வழங்கிய வண்ணமுள்ளது. இந்த இசைவாக்கத்துடன், வாடிக்கையாளர் தன்னிறைவில் நாம் காண்பிக்கும் உறுதியான அக்கறையினூடாக, இலங்கையின் நிதித்துறையில் முக்கியத்துவம் வாய்ந்த செயற்பாட்டாளராக First Capital நிலைநிறுத்த முடிந்துள்ளது. எதிர்காலத்தில், நாம் புத்தாக்கம் மற்றும் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்வதற்கு எம்மை அர்ப்பணித்துள்ளதுடன், தனிநபர் மற்றும் தேசிய முன்னேற்றத்துக்கு பெருமளவு ஊக்கமளித்து, ஆதரவளிக்கவும் எதிர்பார்த்துள்ளோம். இலங்கையில் முதலீட்டு துறையின் மீதான நாட்டம் அதிகரித்துவரும் நிலையில், மூலதன சந்தைகளுக்கு இந்த மைல்கல் சாதனை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. First Capital ஐச் சேர்ந்த எமது அர்ப்பணிப்பான அணியினருக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றேன். அவர்களின் ஒப்பற்ற அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பு போன்றன இந்த பெருமைக்குரிய விருதுகளை எய்துவதற்கு உதவியாக அமைந்திருந்தன. இந்த கௌரவிப்பு அவர்களின் ஈடுபாடு, அர்ப்பணிப்பு மற்றும் சிறப்பை நோக்கிய விடாமுயற்சி போன்றவற்றின் நேரடி பிரதிபலிப்பாக இந்த கௌரவிப்பு அமைந்துள்ளது. இந்த சாதனைகள் வெறும் வியாபார மைல்கற்களாக மாத்திரம் அமைந்திராமல், இலங்கையின் நலனுக்கு புத்தாக்கம், வலுவூட்டல் மற்றும் பங்களிப்பு செய்தல் போன்ற, எம்மை வழிநடத்தும் பெறுமதிகள் மற்றும் நோக்கங்கள் போன்றவற்றுக்கான அத்தாட்சியாகவும் அமைந்துள்ளன.” என்றார்.
ஜனசக்தி குழுமத்தின் (JXG) குழும சந்தைப்படுத்தல் அதிகாரி காமிக டி சில்வா கருத்துத் தெரிவிக்கையில், “SLIM வர்த்தக நாம சிறப்பு விருதுகள் 2024 இல், ஆண்டின் சிறந்த வர்த்தக நாமத்துக்கான விருதுடன், மேலும் மூன்று பெருமைக்குரிய விருதுகளையும் First Capital சுவீகரித்தமை தொடர்பில் நான் மிகவும் பெருமை கொள்கின்றேன். First Capital Holdings PLC இல் அணியினரின் அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பு போன்றவற்றுக்கான எடுத்துக்காட்டாக இந்த சிறந்த சாதனை அமைந்துள்ளது. இந்த சாதனை எம் அனைவருக்கும் பெருமையை ஏற்படுத்தியுள்ளதுடன், எமது ஒன்றிணைந்த முயற்சிகளின் உச்சமாகவும் அமைந்துள்ளது. நான்கு தசாப்த கால பயணத்தில், First Capital தொடர்ச்சியாக சிறப்பை நோக்கிய தனது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியுள்ளதுடன், நிலைபேறான மற்றும் நிலைத்திருக்கும் வர்த்தக நாமத்தை கட்டியெழுப்புவதற்கான ஒப்பற்ற அர்ப்பணிப்பு மற்றும் ஈடுபாட்டின் அடிப்படையில் இயங்குகின்றது. இன்றைய காலகட்டத்தில் தொழிற்துறையின் முன்னோடியாக திகழச் செய்யும் வகையில் வர்த்தக நாமத்தை கட்டியெழுப்புவதில் அவர்களின் அயராத முயற்சி மற்றும் திரண்ட நோக்கு போன்றன முக்கிய பங்காற்றியிருந்ததுடன், பெருமைக்குரிய “ஆண்டின் சிறந்த வர்த்தகநாமம்” எனும் கௌரவிப்பை ஏற்படுத்தியுள்ளது. அணியின் சிறந்த செயற்பாடுகள் மற்றும் வெற்றியை நோக்கிய விடாமுயற்சியுடனான நகர்வு போன்றவற்றுக்கான எடுத்துக்காட்டாக இந்த உயர் சாதனை அமைந்துள்ளதுடன், First Capital ஐ மேலும் உயர்ந்த ஸ்தானத்துக்கு கொண்டு சென்றுள்ளது. இந்த கௌரவிப்பு, கொண்டாட்டத்தின் தருணமாக மாத்திரமாக அமைந்திராமல், மேலும் சிறப்பாக இயங்க ஊக்குவிக்கும் சக்தி வாய்ந்த உந்துசக்தியாகவும் அமைந்துள்ளது. JXG, எமது பிரதான விழுமியங்களினூடாக நாம் தினசரி வழிநடத்தப்படுவதுடன், நாம் மேற்கொள்ளும் சகல செயற்பாடுகளிலும் புத்தாக்கம் மற்றும் ஆக்கத்திறன் ஆகியவற்றுக்கு முக்கியத்துவமளித்து செயலாற்றுகின்றோம். விறுவிறுப்பான வாய்ப்புகளை கையகப்படுத்துவதற்கு நாம் எம்மை அர்ப்பணித்துள்ளதுடன், எமது வியாபாரத்தின் சகல பிரிவுகளிலும் விரிவாக்கத்தை வழிநடத்தல் மற்றும் சிறந்த வளர்ச்சியை ஊக்குவித்தல் போன்றவற்றிலும் கவனம் செலுத்துகின்றோம். பல மைல்கல் சாதனைகளை எதிர்கொள்ளும் பயணத்தின் ஆரம்பமாக இது அமைந்துள்ளது.” என்றார்.
First Capital இன் சந்தைப்படுத்தல் தலைமை அதிகாரி ரந்தினித் மதநாயக்க கருத்துத் தெரிவிக்கையில், “SLIM வர்த்தக நாம சிறப்பு விருதுகள் 2024 இல், ஆண்டின் சிறந்த வர்த்தக நாம விருது மற்றும் இதர மூன்று விருதுகளை பெற்றுக் கொண்டதையிட்டு உண்மையில் நான் பெருமை கொள்கின்றேன். எமது வர்த்தக நாமத்தின் தொடர்ச்சியான மேம்பாடு மற்றும் வாடிக்கையாளர்களுக்கு எமது உறுதிமொழியை நிறைவேற்றுவதற்கான உறுதியான அர்ப்பணிப்பு போன்றவற்றை பிரதிபலிப்பதாக இந்த கௌரவிப்பு அமைந்துள்ளது. First Capital இல், ‘Performance First,’ எனும் எமது பண்பின் அடிப்படையில் நாம் இயங்கி, சிறந்த பெறுமதி மற்றும் பெறுபேறுகளை பதிவு செய்வதை உறுதி செய்கின்றோம். புத்தாக்கமான நிதிசார் தீர்வுகளினூடாக அனைத்து இலங்கையர்களின் வாழ்வை மேம்படுத்துவது என்பது எமது புகழ்பெற்ற நோக்காக அமைந்துள்ளதுடன், எமது வர்த்தக நாமத்தின் பயணம், எதிர்வரும் ஆண்டுகளில் மேலும் உயர்ந்த ஸ்தானங்களை எய்தும் என்பதில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம். எமது வர்த்தக நாம உறுதி மொழியின் பிரகாரம் செயலாற்றுவது என்பது, உறுதித்தன்மை, போட்டிகரத்தன்மை பெறுமதிகளை பேணுவது மற்றும் உயர்ந்த வாடிக்கையாளர் அனுபவங்களை எப்போதும் ஏற்படுத்துவது ஆகும். இலங்கையர்கள் மத்தியில் மூலதன சந்தை மற்றும் முதலீட்டுத் துறை என்பது அதிகளவு நம்பிக்கையையும், பிரபல்யத்தன்மையையும் எய்திய வண்ணமுள்ளன. அந்த முன்னேற்றத்தின் உண்மையான பிரதிபலிப்பாக இந்த கௌரவிப்பு அமைந்துள்ளது. முழு First Capital அணியினரின் அயராத அர்ப்பணிப்பு மற்றும் ஆதரவுக்கு நான் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். First Capital வர்த்தக நாமத்தின் காப்பாளர் எனும் வகையில், தாம் மேற்கொள்ளும் சகல செயற்பாடுகளிலும் எதிர்பார்ப்புகளை தொடர்ச்சியாக விஞ்சும் வகையிலமைந்த அணிக்கு தலைமைத்துவமளிப்பதையிட்டு மிகவும் பெருமை கொள்கின்றேன்.” என்றார்.
SLIM வர்த்தக நாம சிறப்பு விருதுகள் என்பது, நாட்டின் முன்னணி வர்த்தக நாமங்களின் களங்கரை விளக்கமாக அமைந்துள்ளது. வர்த்தக நாம கட்டியெழுப்பல், சந்தைப்படுத்தல் புத்தாக்கம் மற்றும் இலங்கையின் அபிவிருத்திக்கு அர்த்தமுள்ள பங்களிப்புகள் போன்றவற்றில் சிறந்த செயற்பாடுகளை கௌரவிக்கும் வகையில் இந்த விருது அமைந்துள்ளது. இந்த சிறந்த பாரம்பரியத்தில் அங்கம் பெறுவதையிட்டு First Capital Holdings பெருமை கொள்வதுடன், நேர்மை, புத்தாக்கம் மற்றும் ஆழமான தேசிய உணர்வு போன்றவற்றுடன் தொடர்ந்தும் பங்களிப்பு வழங்க எதிர்பார்க்கின்றது.
###
First Capital பற்றி
உறுதித் தன்மையை பேணுவது, போட்டிகரமான முன்வாய்ப்புகளை கட்டியெழுப்புவது மற்றும் அதிசிறந்த வாடிக்கையாளர் அனுபவத்தைப் பெற்றுக் கொடுப்பது போன்றவற்றில் உறுதியான கவனம் செலுத்தும் First Capital, “செயலாற்றுகை முதலில்” எனும் தனது கோட்பாட்டுக்கமைய திகழ்வதில் கவனம் செலுத்துகின்றது. சவால்கள் நிறைந்த சந்தைச் சூழலிலும் உறுதியான கொள்கைகள், அர்ப்பணிப்பான அணியினர் மற்றும் ஜனசக்தி குழுமத்தின் ஆதரவு போன்றவற்றினூடாக First Capital உறுதியாக செயலாற்றுகின்றது. நிறுவனம் தனது சென்றடைவை துரிதமாக விரிவாக்கம் செய்வதுடன், டிஜிட்டல் ஆற்றல்களை மேம்படுத்துவதிலும், தனது செயற்பாடுகளை ஒன்றிணைப்பதிலும் அதிகளவு கவனம் செலுத்துகின்றது. வாடிக்கையாளர் அனுபவங்களை மாற்றியமைப்பது, செயற்பாட்டு வினைத்திறனை ஊக்குவிப்பது மற்றும் ஒட்டுமொத்த வளர்ச்சி மற்றும் நிலைபேறாண்மையை வழிநடத்துவது போன்றவற்றை இலக்காகக் கொண்டு இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
பிரதான வணிகர், கூட்டாண்மை நிதியியல் ஆலோசகர், வெல்த் முகாமையாளர் மற்றும் பங்குமுகவராக First Capital குழுமம் இயங்குகின்றது. தொடர்ச்சியாக இரண்டு வருட காலமாக முதலீட்டு வங்கியியல் துறையில் மிகவும் பெறுமதி வாய்ந்த நுகர்வோர் வர்த்தக நாமமாக First Capital கௌரவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மூலதன சந்தை தீர்வுகளை வழங்குவதில் நான்கு தசாப்த காலப்பகுதிக்கு மேலான அனுபவத்தைக் கொண்டுள்ள First Capital Holdings PLC, இலங்கையிலுள்ள பட்டியலிடப்பட்ட முழு-சேவை முதலீட்டு நிறுவனமாக திகழ்கின்றது. First Capital Holdings PLC க்கு LRA இடமிருந்து [SL] A உடன் Positive outlook தரப்படுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
First Capital Holdings PLC இன் பணிப்பாளர் சபையில் ராஜேந்திர தியாகராஜா (தவிசாளர்), மஞ்சுளா மெத்திவ்ஸ் (பிரதி தலைமை அதிகாரி), தில்ஷான் வீரசேகர (முகாமைத்துவ பணிப்பாளர் / பிரதம நிறைவேற்று அதிகாரி), ரமேஷ் ஷாப்டர், குடா ஹேரத், இனோஷினி பெரேரா, ரச்சினி ராஜபக்ச மற்றும் திலேந்திர விமலசேகர ஆகியோர் அடங்கியுள்ளனர்.