இலங்கை அரசாங்கம் மற்றும் சர்வதேச தொழிலாளர் அமைப்புடன் (ILO) இணைந்து பாதுகாப்பான தொழிலாளர் புலம்பெயர்வு திட்டத்தை (SLMP) கையளிக்கும் விழாவை கொழும்பில் உள்ள Cinnamon Life இல் சுவிட்சர்லாந்து தூதரகம் முன்னெடுத்திருந்தது. இலங்கையில் பாதுகாப்பான மற்றும் வழக்கமான தொழிலாளர் புலம்பெயர்தல் தொடர்பில் கணிசமான அளவில் முன்னேற்றத்தை ஏற்படுத்திய 14 வருட கூட்டாண்மையின் முறையான நிறைவை இந்த நிகழ்வு சுட்டிக் காட்டுகின்றது.
2010 இல் ஆரம்பிக்கப்பட்ட SLMP திட்டமானது முழுமையாக சுவிஸ் வளர்ச்சி மற்றும் ஒத்துழைப்புக்கான நிறுவனத்தின் (Swiss Agency for Development and Cooperation – SDC) 16.65 மில்லியன் சுவிஸ் பிராங்க் (CHF) முதலீட்டுடனும் பல்வேறு பங்குதாரர்களின் ஒத்துழைப்பு மூலமாகவும் செயற்படுத்தப்பட்டது. இந்த திட்டமானது, சர்வதேச தொழிலாளர் அமைப்பினால் (ILO) முன்னெடுக்கப்பட்டதோடு, உரிய நோக்கங்களை அடைவதற்கான பரந்த மற்றும் உள்ளீர்க்கப்பட்ட அணுகுமுறையை ஏற்படுத்துவதற்காக HELVETAS Swiss Intercooperation, International Executive Service Corps (IESC) மற்றும் பல்வேறு சிவில் சமூக அமைப்புகள் (CSOs) இணைந்து இதனை செயற்படுத்தியிருந்தன.
SLMP இன் சில முக்கிய சாதனைகள் வருமாறு:
கொள்கை முன்னேற்றங்கள்: 2023-2027 இற்கான திருத்தப்பட்ட தேசிய தொழிலாளர் புலம்பெயர்வுக் கொள்கை மற்றும் செயலாக்கத் திட்டம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இது புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு மற்றும் அவர்களது நலனை உறுதி செய்கிறது.
திறன் மேம்பாடு: வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக 600 இற்கும் மேற்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் (DOFEs) பயிற்சி பெற்றனர். அத்துடன் 250,000 இற்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்த சமூகத்திலுள்ள உறுப்பினர்கள் பாதுகாப்பான புலம்பெயர்வு தொடர்பான தகவல்களை நேரடியாக அணுகும் வாய்ப்பை பெற்றனர்.
திறன் மேம்பாடு: 6,400 இற்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான வழிகாட்டல் மற்றும் திறன் அங்கீகார சேவைகள் முன்னெடுக்கப்பட்டன. இவை புதிய பாடத்திட்டங்கள் மற்றும் சான்றுப்படுத்தல் கட்டமைப்புகளால் ஆதரிக்கப்பட்டன.
அடிமட்டத்திலிருந்தான தாக்கம்: மாவட்ட ரீதியில் அமைந்த 13 புலம்பெயர் தகவல் மையங்கள் முக்கிய சேவைகளை வழங்கி, மும்முரமாக செயற்பட்டு வருகின்றன.
இலங்கை அரசாங்கம், தொழிற்சங்கங்கள், சிவில் சமூக அமைப்புகள், முதலாளிமார் சங்கங்கள் மற்றும் அனைத்து செயற்படுத்தல் பங்காளிகளுக்கும், அவர்களது உறுதியான ஒத்துழைப்பு மற்றும் அர்ப்பணிப்பிற்காக, சுவிட்சர்லாந்து தூதரகம் மற்றும் ILO ஆகியன தமது மனமார்ந்த பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவிக்கின்றன. SLMP திட்டத்தின் வெற்றிகரமான அமுலாக்கத்தை உறுதி செய்வதற்கும் அதன் தொலைநோக்கு மிக்க பலன்களை அடைவதற்கும் அவர்களது கூட்டு முயற்சிகள் மிக உறுதுணையாக அமைந்தன.
வேலைவாய்ப்புக்கான புலம்பெயர்வு தொடர்பான தேசிய கொள்கை மற்றும் செயலாக்கத் திட்டம் 2023-2027 இனை தொடர்ச்சியாக செயற்படுத்துவதை உறுதி செய்யும் வகையில், SLMP திட்டத்தின் முடிவுகள் உத்தியோகபூர்வமாக இலங்கை அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டன.
இந்நிகழ்வானது, சுவிட்சர்லாந்து தூதரகம், இலங்கை அரசாங்கம் மற்றும் ILO ஆகியவற்றின் கூட்டு வெற்றியை எடுத்துக் காட்டுவதோடு, புலம்பெயர் சமூகங்களுக்கு சாதகமான மற்றும் நிலைபேறான மாற்றங்களை ஏற்படுத்துவதில் பல தரப்பு பங்குதாரர்களின் கூட்டாண்மைகளின் அவசியத்தையும் எடுத்துக் காட்டுகின்றன.
மேலதிக தகவலுக்கு, தொடர்பு கொள்க: நிஷாந்த வர்ணசூரிய ([email protected] )