இலங்கையின் புதுப்பிக்கத்தக்க மின்சக்திக்கான சாத்தியம் மற்றும் பொருளாதார முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டும் அதானி குழுமம்

அண்மையில் அதானி குழுமத்தின் உலகளாவிய நிறுவனத் தலைமையகத்தில் இலங்கை ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போது, ​​Adani Green Energy இன் ஸ்ரீ லங்கா திட்டத்திற்கு தலைமை தாங்கும் Adani Power Ltd மற்றும் Adani Energy Solutions Ltd முகாமைத்துவப் பணிப்பாளர் அனில் சர்தானா, இலங்கையின் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி தொடர்பான முக்கியத்துவத்தை எடுத்துக் கூறினார். வருடம் முழுவதும் சூரிய ஒளி, காற்று, நீர் வலு ஆகியவற்றைப் பயன்படுத்தி தொடர்ச்சியாக பசுமை வலுசக்தியை பெற முடிவதற்காக இலங்கை கொண்டுள்ள திறனை சர்தானா இங்கு சுட்டிக்காட்டினார்.

சூரிய சக்தி, காற்று வலுசக்தி, நீர் சக்தி ஆகியவற்றின் மூலம் போட்டித் தன்மை மிக்க பசுமை வலுசக்தியை உற்பத்தி செய்வதற்கான வளங்களை இலங்கை பரந்த அளவில் கொண்டுள்ளது. அத்துடன் பசுமை ஐதரஜன் மற்றும் பசுமை அமோனியா போன்ற துணை உற்பத்தி மூலங்களை உருவாக்கி ஏற்றுமதி செய்வதிலும் நாடு கவனம் செலுத்த வேண்டும் என, சர்தானா இங்கு தெரிவித்தார். இது மேலதிக வருமானத்தை உருவாக்குவதன் மூலமும் பகிரப்படும் வருமானத்தின் மூலமும் மக்களுக்கு பயனை வழங்க முடியும்.

இலங்கையில் மன்னார் மற்றும் பூநகரி பகுதியில் இரண்டு காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களை அமைக்க அதானி நிறுவனம் முன்வந்துள்ளது. இதன் மூலம், ஒரு பில்லியன் டொலர்களுக்கும் அதிக முதலீட்டைக் கொண்ட மொத்தமாக 484 MW திறன் கொண்ட மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். அத்துடன் இது நாட்டுக் கிடைக்கும் மிகப்பெரிய நேரடி வெளிநாட்டு முதலீடாகவும் இருக்கும். இத்திட்டத்திற்கு, ஒரு அலகிற்கு 8.25 சத டொலர் கட்டணத்தில் அமைச்சரவை அனுமதியை நிறுவனம் பெற்றுள்ளது.

அதானி இலங்கைக்கு வழங்கிய கட்டணமானது அதன் முழு ஒப்பந்தக் காலமான 20 வருடங்களுக்குமானது என, சர்தானா விளக்கினார். கட்டணங்களில் வெளிப்படைத்தன்மையின் அவசியத்தை வலியுறுத்திய சர்தானா, மின்சார நிறுவனங்கள் ஆரம்பத்தில் குறைந்த விலையை நிர்ணயித்த போதிலும், பின்னர் கட்டணங்களை அதிகரிக்கின்றன. இதனால் நுகர்வோர் மீது அதிக சுமை ஏற்படுகிறது. “வெளிப்படைத்தன்மை முக்கிய விடயமாகும். அவர்கள் குறிப்பிட்ட தொகையை வசூலித்தால், அதுவே கட்டணப்பட்டியலாக இருக்க வேண்டும். இதில் மறைக்கப்பட்ட கட்டணங்கள் இருக்கக்கூடாது. எதிர்வரும் 20 வருடங்களில் எந்த மாற்றமும் இல்லாமல் நிலையான கட்டணத்தை வழங்க வேண்டுமா அல்லது எதிர்காலத்தில் அதிக கட்டணங்கள் மூலம் இரட்டிப்பாகும் சாத்தியமுள்ள குறைந்த கட்டணம் வழங்கப்பட வேண்டுமா? இந்த இக்கட்டான நிலையை இலங்கை புரிந்து கொள்ள வேண்டும். யாரால், எந்தளவிலான காலக்கெடுவிற்குள் இதனை வழங்க முடியும் என்பதை நன்கு அறிந்த நபர்கள் ஏற்கனவே அறிவார்கள்.” என சர்தானா குறிப்பிட்டார்.

தமது நிறுவனம் இலங்கையின் மின்சாரத் துறைக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாகவும், திறமையாளர்கள் மற்றும் சூழல் மேம்பாட்டுக்கு பங்களிக்கும் வகையில் கட்டுமானம், செயற்பாடுகள் மற்றும் பராமரிப்பு ஆகிய இரண்டிற்கும் குறைந்தபட்சம் 95% உள்நாட்டு பணியாளர்களை பணிக்கு அமர்த்தவுள்ளதாக சர்தானா குறிப்பிட்டார். எதிர்காலத்தில் வரவுள்ள திட்டங்களுக்காக, வெளிநாடுகளில் இருந்து கொண்டு வருவதற்குப் பதிலாக இந்தத் திறமையாளர்களை உள்நாட்டிலேயே பெறக்கூடிய வகையிலும், திட்ட நடைமுறைப்படுத்தல் தொடர்பில் ஏனைய தொழில்துறைகளுக்கு உதவவும் இத்திட்டம் உதவுகின்றது.

அதானி திட்டம் தொடர்பில் எழுப்பப்படுகின்ற சூழல் பிரச்சினைகள் தொடர்பில் விளக்கிய சர்தானா, அதானியின் காற்றாலை தொகுதிகள் உள்வரும் பறவைக் கூட்டங்களைக் கண்டறிந்து விசிறிகளை இடைநிறுத்துவதற்கு AI அடிப்படையிலான ரேடார் கட்டமைப்புகளும், பறவைகள் அவற்றின் மீது மோதுவதை தடுக்க வண்ணத்தால் அடையாளப்படுத்தப்பட்ட விசிறிகளும் பொருத்தப்படும் என அவர் விளக்கினார்.

அதிக விலை கொண்ட எரிபொருள் அடிப்படையிலான மின் உற்பத்தியை நம்பியிருப்பதை இலங்கை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும், மலிவான மின்சாரத்தை பெறுவதற்காக, இந்தியாவுடன் மின் பரிமாற்ற வழித்தடத்தை நிறுவுதல் போன்ற செலவு குறைந்த மாற்று வழிகளை இலங்கை ஆராய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். பங்காளதேஷிற்கான அதானி திட்டத்தின் வெற்றியை சுட்டிக் காட்டிய சர்தானா, நிறுவனம் அதிக கட்டணம் வசூலிக்கக்கூடும் எனும் அச்சம் ஆரம்பத்தில் இருந்ததால், தற்போது இங்கு நிலவுகின்றமை போன்ற எதிர்மறையான எண்ணங்களை நிறுவனம் ஆரம்பத்தில் எதிர்கொண்டது. ஆனால் அந்நாட்டில் தற்போது வெளிநாட்டு மின் உற்பத்தி நிலையங்களுடன் ஒப்பிடுகையில் மலிவான மின்சாரத்தை நிறுவனம் உருவாக்குகிறது.

ENDS

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *