SLIM “Heroes of Excellence” தேசிய சந்தைப்படுத்தல் விருதுகளை நடத்த திட்டம்

இலங்கையின் சந்தைப்படுத்தல் துறையில் முன்னணி நிறுவனமான இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவனத்தினால் (Sri Lanka Institute of Marketing) SLIM தேசிய சந்தைப்படுத்தல் விருதுகள் 2024 (SLIM National Sales Awards 2024) நிகழ்வை தொடர்ச்சியாக 24ஆவது முறையாக நடாத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விருது வழங்கும் விழாவில், 20 இற்கும் மேற்பட்ட தொழில்துறைகளில் ஈடுபட்டுள்ள சந்தைப்படுத்தல் நிபுணர்களின் செயற்றிறனைப் பாராட்டி விருதுகள் வழங்கப்படுவதுடன், இவ்விருது வழங்கும் நிகழ்வில் பங்குபற்ற இலங்கையின் சந்தைப்படுத்தல் நிபுணர்கள் மிகவும் ஆர்வமாக உள்ளனர். இவ்வருடம் அதன் எண்ணக்கரு ‘சிறந்த நாயகர்கள்’ (Heroes of Excellence) என்பதாகும். தெற்காசிய பிராந்தியத்தில் சிறந்த விருது வழங்கும் விழாவாக அறியப்படும் இந்நிகழ்வு, சர்வதேச தரத்திற்கு ஏற்ப சந்தைப்படுத்தல் நிபுணர்களை அடையாளப்படுத்தி, மதிப்பீடு செய்து, அதன் மூலம் SLIM வெற்றியாளர்களை அங்கீகரித்து உலக அரங்கில் உயர்நிலைக்கு கொண்டு செல்கிறது.

இதற்காக விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களுக்கு அவர்களது நிறுவனங்கள் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான ஒழுங்குகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. தற்காலத்தில் எந்தவொரு வணிகத்தின் வளர்ச்சியிலும் சந்தைப்படுத்தல் ஒரு முக்கிய காரணியாக மாறியுள்ளது. எனவே, சந்தைப்படுத்தல் வளங்கள், தொழில்நுட்பம், உட்கட்டமைப்பு ஆகியவற்றில் நிறுவனங்கள் அதிகளவில் முதலீடு செய்து வருகின்றன. அதற்கமைய, சந்தைப்படுத்தல் குழுக்கள் மிகவும் போட்டித்தன்மையுடன் தமது சேவைகளை மேற்கொள்கின்ற நிலையில், அவர்களுக்கு தேசிய ரீதியிலான அங்கீகாரத்தை வழங்குவதே SLIM தேசிய சந்தைப்படுத்தல் விருது நிகழ்வின் முதன்மையான நோக்கமாகும்.

முன் வரிசையிலுள்ளோர் (Front liners), விற்பனை மேற்பார்வையாளர்கள் (Sales Supervisors), விற்பனை நிறைவேற்றதிகாரிகள் (Sales Executives), பிராந்திய  முகாமையாளர்கள் (Territory Managers), பிராந்திய விற்பனை முகாமையாளர்கள் (Regional Sales Managers), தேசிய விற்பனை முகாமையாளர்கள் (National Sales Managers) உள்ளிட்ட ஏனைய விற்பனை உதவி ஊழியர்கள் (Sales Support Staff) ஆகிய பிரிவுகளில் இந்த வருடம் SLIM தேசிய சந்தைப்படுத்தல் விருதுகள் வழங்கப்படவுள்ளன. ஒவ்வொரு பிரிவிற்குமான விண்ணப்ப மதிப்பாய்வுக் காலம் 2023 முதல் மார்ச் 31 இலிருந்து 2024 மார்ச் 31 வரை ஆகும். கடந்த வருடத்தைப் போலவே, சந்தைப்படுத்தல் துறையில் பெண் வல்லுநர்களின் பங்களிப்பை ஊக்குவிக்கும் ஒரு மதிப்பீட்டை இம்முறையும் நடாத்த எதிர்பார்க்கப்படுகிறது.  நாட்டின் அனைத்து துறைகளிலும் பணிபுரியும் பெண் வல்லுனர்களுக்கான ஒரு விசேட அங்கீகாரமாகவும், நாட்டின் அனைத்து துறைகளிலும் தொழில்துறைகளில் உள்ள பெண்களை வலுவூட்டுவதற்காக SLIM கொண்டுள்ள தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பிரதிபலனே இதுவாகும்.

மேலே குறிப்பிட்டுள்ள ஒவ்வொரு பிரிவிற்கும் தங்கம், வெள்ளி, வெண்கலம் ஆகிய தலா மூன்று விருதுகள் வழங்கப்படவுள்ளன. அத்துடன், தேசிய மற்றும் பிராந்திய சந்தைப்படுத்தல் முகாமையாளர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட உள்ளன. பல்வேறு தொழில்துறைகளில் இருந்து நிபுணத்துவம் வாய்ந்த ஆய்வாளர்களைக் கொண்ட நடுவர்கள் குழு மதிப்பீட்டை நடத்துவதோடு, வெற்றியாளர் தொடர்பான குழுவின் முடிவே இறுதியானதாகும்.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவனத்தின் தலைவர் கயான் பெரேரா, “சந்தைப்படுத்தலில் விசேடத்துவம் என்பது, வாடிக்கையாளர்களுக்கு ஒப்பிட முடியாத மதிப்பை வழங்குவதாகும். இது இலக்குகளை அடைவதற்கு அல்லது கொடுக்கல் வாங்கலை நிறைவு செய்வதற்கு அப்பாற்பட்ட ஒரு நீண்ட செயன்முறை ஆகும். அத்துடன், வாடிக்கையாளர் தேவைகளைப் பற்றிய ஆழமான புரிதல், நெறிமுறை ரீதியான நடைமுறைகளுக்கான அர்ப்பணிப்பு, நீண்ட கால உறவுகளை ஏற்படுத்தும் திறன் ஆகியவற்றை இது உள்ளடக்கியுள்ளது. அந்த வகையில், SLIM தேசிய சந்தைப்படுத்தல் விருது நிகழ்வானது, சந்தைப்படுத்தல் தொடர்புகளுக்கு  ஒரு சிறந்த தளத்தை வழங்குகிறது. இதன் மூலம் தொழில்துறை வல்லுநர்களின் சந்தைப்படுத்தல் திறன் மற்றும் நுட்பங்களை மேம்படுத்தி, எதிர்கால வணிகத் தலைவர்களாக இது அவர்களை வடிவமைக்கிறது. இந்த அரிய வாய்ப்பை எமது தொழில்துறை சகாக்கள் உச்ச அளவில் பயன்படுத்துவார்கள் என நம்புகிறேன்.” என்றார்.

தேசிய சந்தைப்படுத்தல் விருதுகள் 2024 திட்டத்திற்கான தலைவர் நுவன் திலகவர்தன தெரிவிக்கையில், “எந்தவொரு வணிகத்தின் முன்னணியிலும் சந்தைப்படுத்தல் படையணியினர் உள்ளனர். குறிப்பாக கடந்த சில சவாலான வருடங்களில் அவர்கள் பல்வேறு தடைகளை எதிர்கொண்டனர். சந்தைப்படுத்தல் குழு மீதான முதலீடு, பயிற்சி, ஊக்குவிப்பு ஆகியவற்றில் ஒரு நிறுவனம் கொண்டுள்ள தேவையை, முன்னெப்போதையும் விட தற்போது தெளிவாகக் காண முடியும். தேசிய மட்டத்தில் அந்த நிபுணர்களுக்கு விருதுகளை வழங்குவதற்கு SLIM தேசிய சந்தைப்படுத்தல் நிகழ்வானது ஒரு சிறந்த தளமாகும்” என்றார்.

இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவனத்தின் வேலைத்திட்டங்கள் மற்றும் நிலைபேறான செயற்றிட்டங்களின் பிரதித் தலைவர் கலாநிதி தில்ஹான் சம்பத் ஜயதிலக தெரிவிக்கையில், “NSA ஆனது, பலரது அபிமானத்தை வென்ற, சந்தைப்படுத்தல் சமூகத்தை இலக்காகக் கொண்ட ஒன்று என்பதோடு, அவர்களது தனித்துவமான திறமைகள் இங்கு உயர்ந்த அளவில் அங்கீகரிக்கப்படுகின்றன. SLIM பல வருடங்களாக, சந்தைப்படுத்தல் வீரர்களை வளர்த்து, சிறந்த தலைவர்களை உருவாக்க உதவியுள்ளது. மிகச் சிறந்த சந்தைப்படுத்தல் நிபுணர்களை அடையாளம் கண்டு அவர்கள் சிறந்து விளங்க வழிவகுப்பது தொடர்பில் நாம் பெருமிதம் கொள்கிறோம்.” என்றார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “வணிக நிறுவனங்கள் சந்தைப்படுத்தல் செயற்பாடுகளின் மூலம் செல்வத்தை அடைவதில் கவனம் செலுத்துகின்றன. சமகால வணிக மாதிரிகளின் அடிப்படையில், நிறுவனங்களில் உள்ள விற்பனை நாயகர்களை பாராட்டுவதன் மூலம் அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்ப்பட்ட போதிலும், அது அத்துடன் முடிவடைந்து விடுகிறது. இன்று இலங்கையிலுள்ள அனைத்து சந்தைப்படுத்தல் நிபுணர்களையும் ஊக்குவித்து, NSA ஊடாக அவர்களது வெற்றியை தேசிய மட்டத்தில் SLIM கொண்டாடுவது மகிழ்ச்சியளிக்கிறது.” என்றார்.

SLIM தேசிய சந்தைப்படுத்தல் விருதுகள் 2024 இற்கான நுழைவுப் படிவத் தொகுதிகளை https://slim.lk/nationalsalesawards ஊடாக பதிவிறக்கம் செய்யலாம் என்பதோடு, அனைத்து விண்ணப்பங்களும் 2024 ஜூலை 25 ஆம் திகதிக்கு முன் சமர்ப்பிக்கப்பட வேண்டும். பதிவு செய்யப்பட்ட வரையறுக்கப்பட்ட பொறுப்பு நிறுவனங்கள், கூட்டாண்மை நிறுவனங்கள் (Partnerships), பொது மற்றும் தனிப்பட்ட உரிமை கொண்ட நிறுவனங்களும் (Public and sole proprietorships that are registered and carrying out business) போட்டியில் நுழைய தகுதியுடையவர்களாவர். இது தொடர்பான மேலதிக தகவல்களை, 0703266988 (கங்கானி) அல்லது 0718417591 (அவிஸ்க) ஆகியோரை தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ள முடியும்.

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *