Hemas Consumer Brands நிறுவனத்தின் முதன்மையான சலவை வர்த்தகநாமமான தீவாவினால் (Diva) முன்னெடுக்கப்படும் ‘தீவா கரத்திற்கு வலிமை’ தொழில்முனைவோர் திறன் மேம்பாட்டுத் திட்டமானது, Women in Management (WIM) உடன் இணைந்து முன்னெடுக்கும், பெண் தொழில் முனைவோருக்கு அவசியமான அறிவு மற்றும் திறன்களை வழங்குவதன் மூலம், இன்றைய பொருளாதார நிலையில், தன்னம்பிக்கையுடன் தங்கள் தொழில்களை மேற்கொள்ள அதிகாரமளிப்பதை இலக்காகக் கொண்டுள்ளது. இந்த சாதகமான தாக்கம் நிறைந்த திட்டமானது, பெண்களை உற்பத்தியாளர்கள் எனும் நிலையிலிருந்து தொழில்முனைவோராக மாறும் மனநிலைக்கு மாற்றுவதை நோக்கமாகக் கொண்டது. பெண் தொழில்முனைவோர் சவாலை எதிர்கொள்ளும் வகையில், சிறந்த நிதி முகாமைத்துவம், விலை நிர்ணயம், சந்தைப்படுத்தல், வாடிக்கையாளர் பராமரிப்பு, டிஜிட்டல் சந்தைகள், வர்த்தகநாம பிரபலப்படுத்தல், பொதியிடல் போன்ற அம்சங்களின் மூலம் அவர்களுக்கு வணிக முறையின் அடிப்படை அம்சங்களை காண்பித்து, அவர்களை வலுவூட்டுவதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. தங்கொட்டுவ, யாழ்ப்பாணம், காலி ஆகிய இடங்களில் இந்த வேலைத்திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளதோடு, அண்மையில் வெலிமடையிலும் இது விரிவுபடுத்தப்பட்டது. ஒவ்வொரு செயலமர்வின் போதும், இத்திட்டமானது அதன் எல்லையையும் அது ஏற்படுத்தும் சாதகமான தாக்கத்தையும் விரிவுபடுத்தியவாறு, நாடு முழுவதும் உள்ள தொழில்முனைவோரை மேம்படுத்துகிறது.
இலங்கை முழுவதிலும் உள்ள பெண் தொழில்முனைவோரை மேம்படுத்தும் இப்பயணத்தில் மற்றுமொரு மைல்கல்லான, தீவா கரத்திற்கு வலிமை தொழில்முனைவோர் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் வெலிமடை நிகழ்வு, கடந்த 2024 பெப்ரவரி 01ஆம் திகதி நிறைவடைந்தது. இந்தத் திட்டத்தில் ஆர்வமுள்ள தொழில்முனைவோர் தங்கள் திறமைகளை மேம்படுத்தவும், அவர்களின் தொழில் முனைவு கனவுகளை நனவாக்கவும் தீவிரமான செயற்பாட்டுடன் பங்கேற்றதைக் காணக் கூடியதாக இருந்தது. மொத்தமாக 38 ஆர்வமுள்ள பெண் தொழில்முனைவோர் பட்டறைகள், பங்குபற்றி செயற்படும் அமர்வுகள் மற்றும் நடைமுறை பயிற்சிகளில் ஈடுபட்டு, தங்கள் திறன்களை மேம்படுத்தும் வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டிருந்தது. இத்திட்டத்தின் வளர்ந்து வரும் சமூகமான, தீவாவினால் வலுவூட்டப்பட்ட தொழில்முனைவோரை வெலிமடை நிகழ்வு வலுவூட்டியது. இதன் மூலம் நாடு முழுவதும் மொத்தமாக 175 தொழில்முனைவோர் உருவாக்கப்பட்டுள்ளதை இந்நிகழ்வு பறைசாற்றியது.
வெலிமடை நிகழ்வின் வெற்றி தொடர்பில் கருத்து வெளியிட்ட, Hemas Consumer Brands சந்தைப்படுத்தல் பொது முகாமையாளர் டெரிக் அன்டனி, “‘தீவா கரத்திற்கு வலிமை’ தொழில் முனைவோர் திறன் மேம்பாட்டுத் திட்டமானது, இலங்கை முழுவதும் உள்ள ஆர்வமுள்ள பெண் தொழில்முனைவோருக்கு நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக விளங்கி வருகிறது. இந்தத் திட்டமானது, பங்கேற்பாளர்களின் வாழ்க்கையில் உறுதியான மாற்றத்தை ஏற்படுத்துவதைக் கண்டு நாம் பெருமிதம் கொள்கிறோம். மேலும் அவர்களது தொழில்முனைவுக்கான அபிலாஷைகளை நம்பிக்கையுடனும், மீளெழுச்சியுடனும் தொடர்வதற்கு அவர்களுக்கு இது வலுவூட்டுகிறது.” என்றார்.
“தொட்டிலை ஆட்டும் கைகளே உலகையும் ஆளுகின்றன” எனும் புகழ்பெற்ற பழமொழி கூறுவது போல், சமூகத்தையும் பொருளாதாரத்தையும் உரிய வகையில் வளர்த்தெடுப்பதில் பெண்களின் முக்கிய பங்கை அங்கீகரிக்கும் வகையில் உருவான இந்த திட்டத்தின் மூலம், பெருமளவான பெண்கள் பொருளாதார கஷ்டங்களை எதிர்கொள்ளும்போதும், நிதிப் பிரச்சினைகளிலிருந்து சுதந்திரமடைவதற்காக அவர்கள் எதிர்கொள்ளும் போராட்டங்களை தீவா புரிந்துகொண்டுள்ளது. வெற்றிகரமான தொழில்முனைவோராக மாறுவதற்குத் தேவையான விடயங்கள் மற்றும் வளங்களைக் கொண்டு பெண்களை வலுவூட்டுவதன் மூலம், தீவா ஒரு உறுதியான ஆதரவை வழங்கும் தூணாக விளங்குவதோடு, சுதந்திரமாகவம் செழிப்புடனும் அவர்களது பயணத்தை வெற்றியடையச் செய்கிறது. இதன் மூலம் வீட்டுப் பொருளாதாரமும் மேம்பட உதவுகின்றது.
இங்கு, உள்ளூராட்சி சபைகளின் ஈடுபாடானது, குறிப்பாக வெலிமடை பிரதேச செயலக அலுவலகம், அடிமட்ட தொழில்முயற்சி மற்றும் பொருளாதார அபிவிருத்தியை மேம்படுத்துவதில் அரச மற்றும் தனியார் துறைகளுக்கு இடையிலான ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியது. இத்தகைய கூட்டாண்மைகள் ஆர்வமுள்ள தொழில்முனைவோர் செழிப்படையச் செய்வதோடு, அவர்கள் வாழும் சமூகங்களுக்கு அர்த்தமுள்ள பங்களிப்பிற்கான சூழலை உருவாக்குவதில் ஒரு கருவியாக செயற்படுகின்றன.
அத்துடன், Women In Management அமைப்பு உடனான தீவாவின் கூட்டாண்மையானது, இத்திட்டத்தின் சாதகமான தாக்கத்தை மேலும் மேம்படுத்துகிறது. பரந்துபட்ட வழிகாட்டுனர்கள், வளங்கள், வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான வாய்ப்புகளை பங்கேற்பாளர்கள் அணுகுவதை அது உறுதி செய்தது. தீவா ஒரு தூர நோக்குடன், தனது எல்லையையும் சாதகமான தாக்கத்தையும் விரிவுபடுத்துவதற்கும், அதிக பெண் தொழில்முனைவோரை வலுப்படுத்துவதற்கும், இலங்கையில் தொழில் முனைவோரையும் புத்தாக்க கலாச்சாரத்தையும் மேம்படுத்துவதற்கும் உறுதியுடன் உள்ளது.
Hemas Consumer Brands பற்றி
60 வருடங்களாக வீடு மற்றும் தனிநபர் பராமரிப்புத் தயாரிப்புகளின் இலங்கையின் முன்னணி உற்பத்தியாளரான Hemas Consumer Brands, குடும்பங்கள் சிறந்த நாளைய தினத்தை அனுபவிப்பதற்கு வலுவூட்டுவதில் கவனம் செலுத்துகிறது. வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட முன்மொழிவுகளில் புத்தாக்கத்தை ஏற்படுத்தவும், மேம்படுத்தவும் உள்ளூர் தகவல் தரவுகளைப் பயன்படுத்துவதில் பெருமை கொள்கிறது. இது இலங்கையில் நம்பகமான வீட்டுப் பெயர் வர்த்தக நாமமாக தன்னை நிறுவுதல் எனும் அவர்களது நோக்கத்தை அடைய உதவியுள்ளது. இலங்கையின் நுகர்வோர் பற்றிய ஆழமான புரிதல் மற்றும் அதன் தயாரிப்புகளில் உயர் தரம் மற்றும் பெறுமதியை வழங்குவதற்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பினால் உந்தப்பட்டுள்ள Hemas Consumer Brands, நாடு முழுவதும் உள்ள சமூகங்களின் வாழ்க்கையை தொடர்ச்சியாக வளப்படுத்துகிறது.