இலங்கையில் நிலைபேறான வலுசக்தி திட்டங்களை முன்னெடுத்துச் செல்லும் வகையில், இலங்கை நிலைபேறான வலுசக்தி அதிகாரசபை (SLSEA) மற்றும் சூரியசக்தி கைத்தொழில்கள் சங்கம் (SIA) ஆகியவற்றுடன் இணைந்து ‘நிலைபேறான வலுசக்திக்கான எதிர்காலத்தின் சாத்தியத்திற்கான பாதையை திறத்தல்’ எனும் தலைப்பில் சமீபத்தில் ஒரு முக்கிய மாநாட்டை Huawei ஏற்பாடு செய்திருந்தது.
300 இற்கும் மேற்பட்ட முக்கிய புதுப்பிக்கத்தக்க வலுசக்தி துறை அழைப்பாளர்களுடன், இத்துறையின் பரிணாமத்தை உயர்த்தும் வகையிலான முக்கியமான தலைப்புகளில் கலந்துரையாடல்களை ஏற்படுத்துவதற்கும், ஆழ்ந்த நுண்ணறிவுகளைப் பகிர்ந்து கொள்வதற்குமாக அமைந்த இந்த நிகழ்வானது, தொழில் வல்லுநர்களுக்கு ஒரு பல்வகைத் தளமாக அமைந்திருந்தது.
இந்த தளத்தை ஒழுங்கமைப்பதன் நோக்கமானது, வணிக நிறுவனங்கள், கைத்தொழில்துறைகள் மற்றும் அரசாங்க தொழில்துறைகள் ஆகியவற்றுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கும் யோசனைகளைப் பகிர்ந்து கொள்வதற்குமான ஒரு தளத்தை உருவாக்குவது மட்டுமல்லாது, இலங்கை கொண்டுள்ள 2030 ஆம் ஆண்டில் பசுமை வலுசக்தி தொடர்பான தூரநோக்கை அடைவதற்கு உதவுவதும் ஆகும்.
2024 இல் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி துறையில் உள்ள சவால்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்த ஆரம்ப உரையை SLSEA இன் தலைவர், பொறியியலாளர் ரஞ்சித் சேபால நிகழ்த்தினார். 2030 ஆம் ஆண்டளவில் 70% புதுப்பிக்கத்தக்க வலுசக்தி எனும் அரசாங்கத்தின் இலக்கை அடைவதிலான தடைகளை கடக்க SLSEA கொண்டுள்ள உறுதிப்பாட்டை அவர் இங்கு வலியுறுத்தினார்.
2030 ஆம் ஆண்டுக்குள் 70 சதவீத புதுப்பிக்கத்தக்க வலுசக்தி இலக்கை எட்டப்பட்டால், புதுப்பிக்கத்தக்க வலுசக்திக்கான கேள்வியானது, அதன் உற்பத்திக்கான 8 பில்லியன் டொலர் முதலீடு மற்றும் பரிமாற்றத்திற்கான 3 பில்லியன் டொலர் முதலீடு ஆகியவற்றை தேவைப்பாடகாக கொண்டிருக்கும் என்றும் அவர் கூறினார்.
இங்கு மேலும் தெரிவித்த அவர், “இலங்கையின் நிலைபேறான வலுசக்தித் துறையில் Huawei ஒரு முக்கிய பங்காளியாக உள்ளது. அத்துடன் இந்த அற்புதமான நிகழ்வை ஒழுங்கு செய்திருந்த Huawei மற்றும் அதனுடன் இணைந்துள்ள ஏனைய நிறுவனங்களுக்கு நான் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். எதிர்காலத்தில், நிலக்கரியானது மின்சக்திக்கான அடிப்படை சக்தியாகவும், இன்னும் பத்து வருடங்களில் புதுப்பிக்கத்தக்க வலுசக்தியானது அடிப்படை சக்தியாகவும் சக்தியை வழங்கும் என்றும் நம்புகிறேன். இந்த கட்டமைப்பில் பங்கேற்பதற்கான ஏராளமான வாய்ப்புகள் காணப்படுவதால், முதலீட்டாளர்கள் மற்றும் டெவலப்பர்கள் தயாராக வேண்டிய நேரம் இதுவாகும்.” என அவர் விளக்கினார்.
புதுப்பிக்கத்தக்க வலுசக்தியின் எதிர்காலப் பாதையின் நன்மைகளை மொரட்டுவைப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அசங்க ரொட்ரிகோ எடுத்துக் கூறினார். ஸ்மார்ட் கிரிட் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படுதப்படுவதன் தவிர்க்க முடியாத நிலை மற்றும் நுகர்வோரின் பங்கு ஆகியன ஒரு சாதகமான அம்சமாக பரிணமிக்க வேண்டும் என்பதை அவர் இங்கு வலியுறுத்தினார்.
இலங்கை தரநிலை நிறுவனத்தின் பொறியியல் பிரதிப் பணிப்பாளர் ஹசித கருணாரத்ன, SLSEA இன் பணிப்பாளர் நாயகம் J.M. அத்துல, SIA இன் தலைவர் பொறியியலாளர் அசங்க தென்னகோன், SLSEA இன் திட்ட ஒருங்கிணைப்பு அதிகாரி பத்மதேவ சமரநாயக்க, மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் பொறியியல் துறையின் பேராசிரியர் லிதுல விதானகம ஆராச்சிகே போன்ற புகழ்பெற்ற பேச்சாளர்கள் இங்கு தங்களது கருத்துகளை வெளியிட்டு பேசியதோடு, ஒழுங்குபடுத்தல் தரநிலைகள் முதல் மைக்ரோகிரிட் தழுவல் மற்றும் சூரியமின்சக்தி துறையில் சிறந்த நடைமுறைகள் வரை தொழில்துறையின் பல்வேறு முக்கிய அம்சங்களை எடுத்துரைத்தனர்.
இறுதியில் இலங்கையை பசுமையான, நிலைபேறான எதிர்காலத்தை நோக்கிக் கொண்டு செல்வதில் தொழில்நுட்பம், ஒழுங்குபடுத்தல் மற்றும் கூட்டு முயற்சிகள் ஆகியவற்றின் இன்றியமையாத செயற்பாடுகளை வலியுறுத்தியவாறு, அதற்கான கூட்டுச் செயலுக்கான உறுதியான அழைப்புடன் இம்மாநாடு நிறைவு பெற்றது.