சிறுவர்களுக்கு பாதுகாப்பான இடமாக இந்த உலகை மாற்றும் தனது நோக்கத்தில் பயணிக்கும் பேபி செரமி, இலங்கையில் சிறுவர்களுக்கு ஏற்படும் காயங்களுக்கு முக்கிய காரணமான, வீட்டில் ஏற்படும் விபத்துகளைத் தடுப்பது தொடர்பில் பெற்றோருக்குக் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, இலங்கை சிறுவர் நல மருத்துவக் கல்லூரியுடன் கைகோர்த்துள்ளது. சிறுவர்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில் இந்த ஒத்துழைப்பை உறுதிப்படுத்தும் வகையில், 2023 நவம்பர் 07ஆம் திகதி புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று (MoU) கைச்சாத்திடப்பட்டது. இந்நிகழ்வில், சிறுவர்களை பாதுகாப்பாக வைத்திருக்கும் வகையில் வீட்டில் ஏற்படும் விபத்துகளை எவ்வாறு தடுப்பது என்பது குறித்து, சிறுவர் நல மருத்துவப் பேராசிரியர் மனோரி கமகே மற்றும் சிறுவர் நல ஆலோசகர் வைத்தியர் கல்யாணி குருகே ஆகியோரால் எழுதப்பட்ட பெற்றோர் வழிகாட்டல் கையேடும் வெளியிடப்பட்டது. அதிக விபரங்களைக் கொண்ட, இலகுவாக புரிந்துகொள்ளும் வகையில் எழுதப்பட்டு, இனிய கவிதைகள் மற்றும் கண் கவரும் சித்திரங்களுடன், சிறுவர்களுக்கு ஏற்ற வகையிலான மொழியில் எழுதப்பட்டுள்ள இந்த சிறிய புத்தகமானது, பெண்கள் மற்றும் சிறுவர் விவகாரம் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் கீழுள்ள தேசிய சிறுவர்கள் செயலகத்தின் அனுமதியைப் பெற்றுள்ளது.
முதன்மையான தொழில்முறை மற்றும் கல்வியியல் கல்லூரியான இலங்கை சிறுவர் நல மருத்துவக் கல்லூரியுடன் இணைந்து இலங்கையில் சிறுவர் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான விழிப்பூட்டல் முயற்சிகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்ற, சிறுவர் சுகாதாரம் தொடர்பில் முன்னணியில் நின்று குரல் வழங்குகின்ற, நாட்டில் மிகவும் விரும்பப்படும், சிறுவர் பராமரிப்பு வர்த்தக நாமமான பேபி செரமி, நாடு முழுவதும் உள்ள பெற்றோர் மற்றும் சிறுவர்களின் நலனுக்கான மற்றுமொரு செயற்பாடாக இந்நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது. “எமது சிறுவர்களுக்கு பாதுகாப்பான உலகத்தை உருவாக்குதல்” எனும் பேபி செரமியின் வர்த்தகநாம நோக்கத்தை செயற்படுத்தி, பெற்றோர்கள் மற்றும் ஏனைய முக்கிய பங்குதாரர்களிடையே சிறுவர்கள் பாதுகாப்பு தொடர்பான கல்வியை உறுதி செய்து, விபத்துகளில் இருந்து சிறுவர்களைப் பாதுகாக்கத் தேவையான அத்தியாவசிய அறிவை அவர்களுக்கு வழங்குகிறது.
இம்முயற்சி குறித்து Hemas Consumer Brands சந்தைப்படுத்தல் பணிப்பாளர் ஷியான் ஜயவீர கருத்து தெரிவிக்கையில், “எமது நாட்டின் எதிர்காலத்தில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய நாளைய தலைவர்களான சிறுவர்களுக்கு ஏற்படும் விபத்துகள் தொடர்பான முக்கிய பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக, இலங்கை சிறுவர் நல மருத்துவர்கள் கல்லூரியுடன் கைகோர்ப்பதில், முன்னணி சிறுவர் பராமரிப்பு வர்த்தக நாமமான பேபி செரமி மகிழ்ச்சியடைகிறது. எமது விழிப்புணர்வு செய்தியை அதிகமான மக்களுக்கு எடுத்துச் செல்லவும், பேபி செரமியின் மைய தத்துவமான, சிறுவர்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கவும், சிறுவர் சுகாதார நல பாதுகாப்பு நிபுணர்களுடனான இந்த ஒத்துழைப்பு உதவும்.” என்றார்.
தடுக்கக்கூடிய வகையிலான சிறுவர் விபத்துகள், சிறுவர்களிடையே காயங்களையும் மரணத்தையும் தொடர்ச்சியாக ஏற்படுத்தி வருகின்றன. இலங்கையில் வருடாந்தம் 269,000 சிறுவர்கள் விபத்துக்களினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகின்றனர். இந்த விபத்துகளில் பெரும்பாலானவை வீட்டுச் சூழலில் நிகழ்கின்றன. ஆனால் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் இவற்றை தடுக்க முடியும்.
இந்த சிறிய கையேடு தொடர்பில் கருத்து தெரிவித்த வைத்தியர் கல்யாணி குருகே, “‘வீடு என்பது விபத்து மற்றும் வன்முறைக்கு எதிரான கோட்டை மற்றும் அரண்’ என்பது ஒரு பிரபலமான வசனமாகும். காயங்கள் தொடர்பில் வெளியிடப்பட்ட புள்ளிவிபரங்களின் அடிப்படையில், சிறுவர்கள் காயமடையும் பொதுவான இடம் வீடாக காணப்படுகின்றது. சிறுவர்கள் ஆராய்ந்தறியும் எண்ணம் கொண்டவர்கள், சாகசங்களைச் செய்பவர்கள், வேடிக்கை மற்றும் விளையாட்டில் ஈடுபடுபவர்கள் என்பதோடு, இவ்வாறான செயற்பாடுகளின் போது அவர்கள் காயமடையும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. வீட்டில் ஏற்படும் காயங்கள் பற்றிய சிறிய கையேடு ஒன்றை எழுத, Hemas குழுமத்தின் ஒரு அங்கமான பேபி செரமி வர்த்தக நாமம், என்னை அழைத்தபோது, நான் மகிழ்ச்சியுடன் அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டேன். பேராசிரியை மனோரி கமகேவை ஒரு கவிஞராக நான் அறிந்திருப்பதால் என்னுடன் இணையுமாறு அவருக்கு அழைப்பு விடுத்தேன். விபத்துகளில் சிக்கி மருத்துவமனைகளுக்கு வரும் சிறுவர்களுக்கு சிகிச்சையளிக்கும் எமது அனுபவத்தின் பிரதிபலிப்பே இந்தப் புத்தகமாகும். விபத்துகள் கணிக்கப்படக்கூடியவையாகும். ஒரு சில நொடிகளின் போதான கவனக்குறைவு, பேரழிவிற்கு வழிவகுக்கும். வீட்டில் காயங்கள் எப்படி நடக்கும் என்பதை அறிந்திருப்பதே அவற்றைத் தடுப்பதற்கான சிறந்த வழியாகும். சிறுவர்கள் காயங்கள் இன்றி மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ, பெற்றோர்கள், ஆசிரியர்களுக்கு இந்த சிறிய கையேடு உதவியாக இருக்கும் என நாம் இருவரும் நம்புகிறோம்.” என்றார்.
மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சின் ஆரம்பக் குழந்தைப் பருவ மேம்பாட்டுக்கான தேசிய செயலகத்தின் பிரதிப் பணிப்பாளர் சந்தன விஜேவர்தன இங்கு தெரிவிக்கையில், “விபத்துகளைத் தடுப்பதை முதன்மையான நோக்கமாகக் கொண்டு இந்தப் புத்தகம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இலங்கை குழந்தைகள் நல மருத்துவக் கல்லூரி வழங்கிய தாராளமான ஆதரவிற்காக, எனது மனமார்ந்த நன்றிகளை அவர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இந்த முயற்சியை முன்னெடுத்துச் செல்வதில் வழங்கிய முனைப்பான பங்களிப்பிற்காக Hemas Consumer Brands இற்கும் எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த முயற்சிக்கு, ஆரம்பக் குழந்தைப் பருவ மேம்பாட்டுக்கான தேசிய செயலகம் மகிழ்ச்சியுடன் ஒத்துழைப்பு வழங்கியுள்ளது.” என்றார்.
இதன் முதற் கட்டமாக, எதிர்வரும் 12 மாதங்களுக்குள் 100,000 கையேடுகளை வீடுகளுக்கு கொண்டு சேர்க்க பேபி செரமி திட்டமிட்டுள்ளது. இது பேபி செரமி இணையத்தளம் மற்றும் பேஸ்புக் பக்கம் உள்ளிட்ட பல்வேறு தளங்களின் மூலம் பகிரப்படக் கூடிய இலத்திரனியல் பிரதிகளாகவும், பேபி செரமி பொதிகளில் QR குறியீடு அச்சடிக்கப்பட்டு அவற்றை பெற்றோர்கள் ஸ்கேன் செய்து தரவிறக்கம் செய்யக்கூடிய வகையிலும் கிடைக்கவுள்ளது. ஆரம்பக் குழந்தைப் பருவ மேம்பாட்டுக்கான தேசிய செயலகம் மற்றும் பெண்கள் மற்றும் சிறுவர்கள் விவகார அமைச்சின் உதவியுடன் இந்த கையேடு வெளியிடப்படும்.
குழந்தைகளுக்கான பாதுகாப்பான உலகத்தை உருவாக்குவதற்கான பேபி செரமியின் அர்ப்பணிப்பை, அதன் கடந்தகால திட்டங்களில் காணலாம். தாயாகவுள்ளவர்கள் மற்றும் தந்தைகளுக்காக வடிவமைக்கப்பட்ட விழிப்பூட்டல் முயற்சிகள், முழுமையான பெற்றோர் திட்டம், குழந்தைகளின் முழுமையான வளர்ச்சி, பெற்றோருக்கான தகவல் வழிகாட்டல் கையேடுகளை வெளியிடுதல் மற்றும் விநியோகித்தல், டிஜிட்டல் ஊடக தளங்கள் மூலமாக துறைசார் நிபுணர்கள் தலைமையிலான அறிவூட்டும் கேள்வி பதில் அமர்வுகள் ஆகியவற்றில் தொடர்ச்சியாக ஈடுபடுதல் ஆகியன இதில் அடங்குகின்றன.
இலங்கையில் முன்னணியில் உள்ள, மிகவும் விரும்பப்படும் குழந்தைப் பராமரிப்பு வர்த்தக நாமம் எனும் வகையில், குழந்தைகளுக்கான பாதுகாப்பான உலகத்தை உருவாக்க, 60 வருடங்களுக்கும் மேலாக பேபி செரமி ஒரு மரபினை நிலைநிறுத்தி வருகின்றது.