நாட்டின் முன்னணி பால் உற்பத்தியாளருமான பெல்வத்தை (Pelwatte), இலங்கையில் விவசாய அமைச்சுடன் செயற்படுத்தப்படும் சிறிய அளவிலான விவசாய வர்த்தக கூட்டாண்மை திட்டமான, சிறு அளவிலான விவசாய வணிக கூட்டுத் திட்டத்தின் (Smallholder Agribusiness Partnership Program – SAPP) ஒரு செயற்பாட்டு உறுப்பினராக அங்கம் வகித்து வருகின்றது. ஒவ்வொரு பெல்வத்தை உற்பத்திக்குமான, புதிய பாலை உற்பத்தி செய்வதில் அயராது உழைக்கும் விவசாய சமூகத்தின் வாழ்க்கையை மேம்படுத்த உதவுவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். இந்நிகழ்ச்சித் திட்டத்திற்கு இணங்க, SAPP மானிய அங்குரார்ப்பண நிகழ்வை, 2022 ஜூலை 08 ஆம் திகதி கெக்கிராவை பால் சேகரிப்பு நிலைய கேட்போர் கூடத்தில், சிறிய அளவிலான விவசாய வர்த்தக கூட்டாண்மைத் திட்டம் (SAPP) மற்றும் சந்தை சார்ந்த பால் பண்ணை (MOD) திட்ட அதிகாரிகளின் பங்கேற்புடன் பெல்வத்தை மேற்கொண்டிருந்தது.
மானிய நிதி உதவிக்கு மேலதிகமாக, அமெரிக்க விவசாயத் திணைக்களம் (USDA) மற்றும் சர்வதேச நிர்வாகக் கூட்டுத்தாபனம் (IESC) ஆகியவற்றின் ஆதரவுடன், உலகளாவிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட, நெறிமுறை ரீதியாகவும் சிறந்த தரத்திலும் உற்பத்திகளை அதிகரிக்கவும் மேம்படுத்தவுமாக, விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப்பட்ட விவசாய முறைகளை அறிமுகப்படுத்துவதன் மூலம், சந்தை சார்ந்த பால் உற்பத்தித் திட்டத்தின் ஆதரவுடன் விவசாய சமூகத்தை ஊக்கப்படுத்தவும் இந்த திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
இந்நிகழ்வில் பெல்வத்தை நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் அக்மல் விக்ரமநாயக்க கருத்துத் வெளியிடுகையில், “நாட்டின் தற்போதைய பொருளாதாரச் சூழ்நிலையில் எந்தவொரு நபருக்கும், குறிப்பாக விவசாய சமூகத்திற்கு இது ஒரு கடினமான காலமாக உள்ளது. ஆயினும், பால் உற்பத்தியானது, சிறந்த தரத்தில் இருப்பதை உறுதி செய்வதற்காக அவர்கள் கொண்டுள்ள அர்ப்பணிப்பை இது பாதிக்கச் செய்யவில்லை. அந்த வகையில், SAPP மானியத் திட்டதின் மூலம் இந்த அர்ப்பணிப்புக்காக, எமது ஆதரவைக் காண்பிப்பதன் மூலம், தொழில்துறையில் முன்மாதிரியாக நடந்து கொள்வது எமது கடமையென பெல்வத்தை ஆகிய நாம் கருதுகிறோம்.” என்றார்.
SAPP திட்டமானது, பால் உற்பத்தியை அடிப்படையாகக் கொண்டு, ஒரு நாள் அதில் தன்னிறைவு அடைய வேண்டும் எனும், உள்ளூர் பால் தொழில்துறையின் நோக்கத்திற்கு அளப்பரிய ஊக்கத்தை ஏற்படுத்துகிறது. இது நாட்டின் 8 வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்த 1,000 பால் விவசாயிகளுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இவ்விவசாயிகள் அநுராதபுரம், நுவரெலியா, குருணாகல், மொணராகலை, பொலன்னறுவை, பதுளை, அம்பாறை, புத்தளம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாவர்.
பெல்வத்தை ஆனது, இலங்கையில் ஒரு நாள் உள்ளூர் பால் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கத்தின் அடிப்படையில் பால் உற்பத்தி முயற்சிகளை மேற்கொண்டு வரும் ஒரு பால் வர்த்தக நாமமாகும். அதன் நோக்கத்தில், உலகளாவிய தரநிலைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்வதற்கும், தரம் மற்றும் நம்பிக்கையின் உலகளாவிய அடையாளமாக இலங்கையின் பால் தரங்களை நிறுவுவதற்கும் அது முயற்சி செய்து வருகிறது. அயராது உழைக்கும் அதன் பால் பண்ணையாளர்கள் மற்றும் எப்போதும் பெல்வத்தையைத் தேர்ந்தெடுக்கும் விசுவாசமான அதன் வாடிக்கையாளர்களின் ஆதரவின்றி பெல்வத்தையினால் தனியாக இதை மேற்கொள்ள முடியாது.