நவீனப்படுத்தப்பட்ட NICU பிரிவை அறிமுகப்படுத்தும் ஜோசப் பிரேசர்

ஒரு குழந்தையின் பிறப்பு என்பது மகிழ்ச்சியான தருணமாக அமைய வேண்டும். இருப்பினும், பிறந்த குழந்தைக்கான தீவிர சிகிச்சைப் பிரிவின் (Neonatal Intensive Care Unit – NICU) தேவை ஏற்படுவது என்பது, பல பெற்றோருக்கு கவலையையும் நிச்சயமற்ற தன்மையையும் ஏற்படுத்தக்கூடும். இத்தகைய இக்கட்டான காலப்பகுதியில் குடும்பங்களின் மருத்துவ மற்றும் உணர்ச்சிபூர்வமான தேவைகளை கருத்தில் கொண்டு, பிறந்த குழந்தைகளுக்கான அதன் தீவிர சிகிச்சை பிரிவை (NICU) மேம்படுத்தியுள்ளதாக, ஜோசப் பிரேசர் மருத்துவமனை (Joseph Fraser Hospital) அறிவித்துள்ளது. இது அதிநவீன தொழில்நுட்பத்துடன், குடும்பத்தை மையமாகக் கொண்ட தனிப்பயனாக்கப்பட்ட பராமரிப்பு முறையையும் உள்ளடக்கியுள்ளது.

இந்த முயற்சி குறித்து மருத்துவச் சேவைகள் பிரிவின் தலைவர் வைத்தியர் தில்ருக்ஷி சய்யக்கார கருத்துத் தெரிவிக்கையில், “மருத்துவ விசேடத்துவத்துடன் பெற்றோரின் அர்த்தமுள்ள பங்களிப்பையும் இணைப்பதே இந்த மேம்படுத்தப்பட்ட NICU பிரிவின் பின்னணியிலுள்ள நோக்கமாகும். இந்த அலகு ஆரம்பிக்கப்பட்டதிலிருந்தே பெற்றோரின் தீவிர பங்களிப்பை ஊக்குவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஏனெனில் குணமடையும் பயணத்தில் பெற்றோர்கள் இன்றியமையாதவர்கள் என்பதை நாம் உணர்ந்துள்ளோம். மேம்பட்ட உபகரணங்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளில் மேற்கொள்ளப்பட்ட முக்கிய முதலீடுகள், எமது சிறிய நோயாளிகளுக்கு பாதுகாப்பான மற்றும் விரைவாக பதிலளிக்கக்கூடிய சூழலை உருவாக்கியுள்ளன. எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த NICU பிரிவானது தாய்மார்களுக்கு உண்மையான தனிப்பயனாக்கப்பட்ட பராமரிப்பை வழங்குவதற்கான எமது வாக்குறுதியைப் பிரதிபலிக்கிறது. இத்தகைய ஆதரவான சூழலில் NICU பராமரிப்பை பெற்ற குழந்தைகளின் தாய்மார்கள், குணமடையும் காலத்தில் பதற்றம் குறைவாகவும் அதிக நம்பிக்கையுடனும் இருப்பதாக தெரிவித்துள்ளனர். அத்துடன், பிறந்த குழந்தைகளிடமிருந்து ஆரம்பத்திலேயே பிரிந்திருப்பதால் பொதுவாக ஏற்படும் தாய்ப்பால் புகட்டுவதில் உள்ள சவால்களும் இங்கு குறைவாகவே காணப்படுகின்றன.” என்றார்.

நவீனமயமாக்கப்பட்ட NICU பிரிவானது, விசேட மருத்துவ பராமரிப்பு தேவைப்படும் குறைமாதத்தில் பிரசவித்த மற்றும் அதிக ஆபத்துள்ள குழந்தைகளுக்கு ஆதரவளிக்க, நவீன தொழில்நுட்ப வசதிகளை கொண்டுள்ளது. இதில் சுவாச உதவி தேவைப்படும் குழந்தைகளுக்கான மேம்பட்ட வென்டிலேட்டர் மற்றும் சுவாச ஆதரவு தொகுதிகள், முக்கிய உடல் அடையாளங்களை (vital signs) துல்லியமாகக் கண்காணிக்க உதவும் தொடர்ச்சியான சிசு கண்காணிப்புத் தீர்வுகள் மற்றும் உரிய வெப்ப ஒழுங்குமுறைப்படுத்தல் அமைப்பு மற்றும் பாதுகாப்பை வழங்க வடிவமைக்கப்பட்ட அதிநவீன இன்குபேட்டர்கள் (Incubators) ஆகியனவும் உள்ளடங்குகின்றன.

அனுபவம் வாய்ந்த சிசு நல மருத்துவ நிபுணர்களால் வழிநடத்தப்படும் இப்பிரிவானது, பிரத்தியேகமான ஒருவருக்கு ஒருவர் எனும் தாதியர் பராமரிப்புடன் இயங்குகிறது. இது சிகிச்சையின் மிக முக்கியமான நிலைகளில், ஒவ்வொரு குழந்தையும் நெருக்கமான கண்காணிப்பையும் விரைவான மருத்துவ ஆதரவையும் பெறுவதை உறுதி செய்கிறது.

இந்த மேம்படுத்தப்பட்ட வசதியின் ஒரு முக்கிய அம்சம் அதன் தனிப்பயனாக்கப்பட்ட, குடும்பத்தை மையமாகக் கொண்ட பராமரிப்பு கட்டமைப்பாகும். பெற்றோருக்கான அணுகல் மட்டுப்படுத்தப்பட்டதாக கொண்ட வழக்கமான NICU அமைப்பிலிருந்து மாறுபட்டு, தனது குழந்தையின் ஆரம்ப நாட்களிலான பராமரிப்புப் பயணத்தில் பெற்றோர் மிக நெருக்கமாக இருப்பதற்கு அனுமதிக்கின்ற, அவர்களை இணைத்த அணுகுமுறையை மருத்துவமனை அறிமுகப்படுத்தியுள்ளது. இங்கு மருத்துவ ரீதியாக பொருத்தமான சந்தர்ப்பங்களில், குழந்தையின் இன்குபேட்டரை தாய்க்கு அருகில் வைக்க முடியும். இதன் மூலம் குழந்தை தீவிர மருத்துவ சிகிச்சையை பெற்றுக் கொண்டிருக்கும் போதே, குழந்தையின் ஆரம்ப நாட்களின் பிணைப்பையும் உணர்ச்சி பூர்வமான தொடர்பையும் குடும்பங்கள் பேண வழிவகை செய்யப்பட்டுள்ளது.

NICU பிரிவின் இந்த மேம்படுத்தலானது, மருத்துவமனையின் தாய் மற்றும் சேய் பராமரிப்பு சேவைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பரந்த அளவிலான நவீனமயமாக்கலின் ஒரு பகுதியாகும். இதில் நெருக்கமான கண்காணிப்பு தேவைப்படும் தாய்மார்களுக்கான முழுமையாக வசதிகள் கொண்ட உயர் கண்காணிப்புப் பிரிவு (HDU), மேம்பட்ட பாதுகாப்பு நெறிமுறைகளுடன் கூடிய நவீனமயமாக்கப்பட்ட இரத்த வங்கி, சாதாரண பிரசவத்திற்கான மேம்படுத்தப்பட்ட பிரசவ அறைகள் மற்றும் சிசேரியன் மற்றும் ஏனைய மகப்பேற்று அறுவை சிகிச்சைகளுக்கான அதிநவீன அறுவை சிகிச்சை கூடம் ஆகியனவும் உள்ளடங்குகின்றன.

கருணையுடன் கூடிய, மேம்பட்ட மருத்துவ நிபுணத்துவத்தை குடும்பத்தை மையமாக கொண்ட பராமரிப்புடன் இணைப்பதன் மூலம், தாய் மற்றும் சேய் ஆரோக்கியத்திற்கான ஒரு முழுமையான மையமாக தனது நிலையை ஜோசப் பிரேசர் மருத்துவமனையானது தொடர்ச்சியாக வலுப்படுத்தி வருகிறது.

END

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *