
டொயோட்டா லங்கா நிறுவனத்துடனான புதிய, மூலோபாயக் கூட்டாண்மை குறித்து, மேர்கன்டைல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனம் பெருமையுடன் அறிவித்துள்ளது. அனைவரும் அணுகக்கூடிய, தங்குதடையற்ற, மற்றும் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட நிதித் தீர்வுகளை வழங்குவதில் மேர்கன்டைல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனம் காண்பித்து வருகின்ற அர்ப்பணிப்பில் முக்கியமானதொரு சாதனை மைல்கல்லாக இந்த ஒத்துழைப்பு மாறியுள்ளது. Toyota Raize, Toyota Lite Ace Single Cab மற்றும் Toyota Lite Ace Panel Van போன்ற வாகனங்களுக்கு பிரத்தியேகமான குத்தகைத் தீர்வுகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்க இக்கூட்டாண்மையானது மேர்க்கன்டைல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனத்திற்கு இடமளிக்கின்றது. எவ்விதமான தாமதங்களுமின்றி வாடிக்கையாளர்கள் தாம் விரும்புகின்ற வாகன தயாரிப்பு வடிவங்களைப் பெற்றுக்கொள்வதை உறுதிப்படுத்துவதற்காக, மேற்குறிப்பிட்ட வாகனங்களின் பிரத்தியேகமான கையிருப்பை மேர்கன்டைல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனம் பேணும்.
மேர்கன்டைல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனத்தின் பிரதம தொழிற்பாட்டு அதிகாரி திரு. லக்சந்த குணவர்த்தன மற்றும் டொயோட்டா லங்கா நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர்/ பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. மனோகர அத்துகோரள ஆகியோருக்கிடையில் கைச்சாத்திடப்பட்டுள்ள இந்தப் பிரத்தியேக புரிந்துணர்வு உடன்படிக்கை, வாகனத்தைச் சொந்தமாக்கிக் கொள்வதை மிகவும் இலகுபடுத்தி மற்றும் வெகுமதியளிக்கும் ஒன்றாக மாற்றியமைப்பதற்காக, ஒப்பீட்டளவில் சிறந்த குத்தகை வட்டி வீதங்கள், எளிமைப்படுத்தப்பட்ட விண்ணப்ப நடைமுறைகள், மற்றும் பிரத்தியேக சலுகைகள் உள்ளிட்ட பரந்த நன்மைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றது.
நாட்டில் டொயோட்டா வாகனங்களுக்கான பிரத்தியேக முகவராக டொயோட்டா லங்கா செயற்பட்டு வருகின்றமை, டொயோட்டாவின் தரம் மற்றும் நம்பகத்தன்மையின் நன்மதிப்பின் பக்கபலத்துடன், தாங்கள் சான்று அங்கீகாரம் பெற்ற வாகனங்களை கொள்வனவு செய்கின்றோம் என்ற உத்தரவாதம் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கின்றது. மேர்கன்டைல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனத்தின் நம்பிக்கைமிக்க நிதி நிபுணத்துவத்துடன், வாடிக்கையாளர்களின் தேவைகளை நிறைவேற்றுகின்ற, பாதுகாப்பான, தனிப்பயனாக்கம் செய்யப்பட்ட, மற்றும் சிரமங்களற்ற நிதித் தீர்வுகளை வழங்கி, தனித்துவமான மதிப்புமிக்க முன்மொழிவை இக்கூட்டாண்மை வழங்கவுள்ளது.
சந்தையில் கிடைக்கும் பல்வேறு தெரிவுகளுக்கு மத்தியில், புத்தாக்கத்தையும், நவீன பாணியையும் மற்றும் நம்பகத்தன்மையையும், சிக்கனமான விலைத் தெரிவுகளையும் ஒன்றிணைக்கின்ற ஒரு வர்த்தகநாமமாக டொயோட்டா தலைநிமிர்ந்து நிற்கின்றது. தற்போது மேர்கன்டைல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிதிக் கூட்டாளராக இணைந்துள்ள நிலையில், டொயோட்டா வாகனமொன்றை சொந்தமாக்கிக் கொள்வது மேலும் இலகுவாக்கப்பட்டுள்ளது. பகிரப்பட்ட நோக்கத்துடன், மேர்கன்டைல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் மற்றும் டொயோட்டா லங்கா ஒன்றிணைந்து, இலங்கையில் வாகனமொன்றை சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும் என்ற கனவை நனவாக்குவதை இலக்காகக் கொண்டுள்ளன.