இரத்தினக்கல், ஆபரணக் கைத்தொழிலை மேம்படுத்த ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்துடன் ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட SLGJA

இலங்கையின் இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் கைத்தொழிற்துறைக்கு புத்துயிர் அளிப்பது தொடர்பான ஒரு முக்கிய படியாக, இலங்கை இரத்தினக்கல் மற்றும் ஆபரண சங்கம் (SLGJA) மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடமும் இணைந்து ஒரு முக்கியமான ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் (MOC) கைச்சாத்திட்டுள்ளன. இந்த முக்கிய நிகழ்வு கடந்த 2023 ஓகஸ்ட் 23ஆம் திகதி பல்கலைக்கழகத்தின் செனட் சபை விசேட வளாகத்தில் இடம்பெற்றது.

SLGJA இன் பட்டைதீட்டல் பிரிவின் உப தலைவர் பின்சிறி விஜேபால மற்றும் அவரது குழுவினரால், பட்டைதீட்டும் அம்சத்தை சர்வதேச தரத்திற்கு உயர்த்தும் நோக்கத்துடன் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டதோடு, இரத்தினக்கல் மற்றும் ஆபரணக் கைத்தொழில்துறையில் நவீன தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதையும் இது குறிக்கிறது.

இக்கைச்சாத்திடும் நிகழ்வில், இலங்கை இரத்தினக்கல் மற்றும் ஆபரண சங்கத்தின் தலைவர் அஜ்வார்ட் டீன், சங்கத்தின் சிரேஷ்ட உறுப்பினர்கள் மற்றும் பட்டைதீட்டல் பிரிவின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் பீடாதிபதி கலாநிதி திலக்சிறி பண்டார, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் இயந்திரவியல் பிரிவின் தலைவர் கலாநிதி துலானி முதுன்கொட்டுவ, இலங்கை இரத்தினக்கல் மற்றும் ஆபரண சங்கத்தின் பட்டைதீட்டல் பிரிவின் உப தலைவர் பின்சிறி விஜேபால உள்ளிட்ட ஏனைய முக்கியஸ்தர்களின் பிரசன்னத்துடனும் அவர்களது முக்கிய உரைகளுடனும் இந்நிகழ்வு இடம்பெற்றது.

பொறியியல் பீடத்தின் பீடாதிபதி கலாநிதி திலக்சிறி பண்டார தனது ஆரம்ப உரையில், “இந்த மங்களகரமான சந்தர்ப்பத்தில் உங்கள் முன் உரையாற்றுவதில் பெருமையடைகிறேன். மதிப்பிற்குரிய அனைத்து பங்கேற்பாளர்களுக்கும், குறிப்பாக தலைவர் அஜ்வார்ட் டீனுக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். பல்கலைக்கழகம் மற்றும் SLGJA ஆகியவற்றுக்கு இடையேயான இந்த ஒத்துழைப்பானது, அந்நியச் செலாவணி அதிகரிப்பை ஊக்குவித்து, இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான ஒருங்கிணைந்த முயற்சிகளுக்கு குறிப்பிடும்படியான வாய்ப்பை வழங்குகிறது.” என்றார்.

அவரது உரையைத் தொடர்ந்து, பல்கலைக்கழகத்தின் இயந்திரவியல் பிரிவின் தலைவர் கலாநிதி துலானி முதுன்கொட்டுவ, தனது கருத்துகளைப் பகிர்ந்துகொண்ட போது, “நமது நாடு முழுவதும் பல்வேறு தொழில்துறைகளை மேம்படுத்துவதில் பொறியியலாளர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். இந்த கூட்டிணைவானது, இலங்கை இரத்தினக்கல் மற்றும் ஆபரண சங்கத்துடன் இணைந்து பொருளாதாரத் துறையை புத்துயிரளிப்பதற்கான அவர்களது பாராட்டத்தக்க முயற்சிக்கு பங்களிக்கிறது. எதிர்வரும் வருடங்களிலும் பலனளிக்கும் வகையிலான இவ்வாறான கூட்டாண்மையை தொடர்ச்சியாக முன்னெடுக்க நாம் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.” என்றார்.

இலங்கை இரத்தினக்கல் மற்றும் ஆபரண சங்கத்தின் பட்டைதீட்டல் பிரிவின் உப தலைவர் பின்சிறி விஜேபால உரையாற்றுகையில், “இரத்தினக்கல் மற்றும் ஆபரணக் கைத்தொழில்துறையின் உலகளாவிய முக்கியத்துவத்தை குறைத்து மதிப்பிட முடியாது. எமது உள்ளூர் கைத்தொழில்துறையை மேம்படுத்துவது மற்றும் அதன் செழிப்பை சர்வதேச தரத்துக்கு நிகராக இணைப்பதை உறுதி செய்வது எமது கூட்டுப் பொறுப்பாகும். அத்துடன் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கும் இலங்கை இரத்தினக்கல் மற்றும் ஆபரண சங்கத்திற்கும் இடையிலான உத்தியோகபூர்வ உடன்படிக்கையானது, ஒரு உயர்ந்த கைத்தொழில் பாதையை நோக்கிய ஊக்கமளிக்கும் முதல் படியைக் குறிக்கிறது.” என்றார்.

இந்த ஊக்கமளிக்கும் உரைகளைத் தொடர்ந்து, இடம்பெற்ற சம்பிரதாயபூர்வ ஒத்துழைப்பு ஒப்பந்த கைச்சாத்திடல் நிகழ்வில், ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் மற்றும் இலங்கை இரத்தினக்கல் மற்றும் ஆபரண சங்கத்தின் பிரதிநிதிகள் ஒன்றிணைந்தனர். அதனைத் தொடர்ந்து இலங்கை இரத்தினக்கல் மற்றும் ஆபரண சங்கத்தின் நிர்வாக சபை உறுப்பினரும் பட்டைதீட்டல் பிரிவின் உறுப்பினருமான சமன் அமரசேனவின் நன்றியுரையுடன் நிகழ்வு நிறைவுற்றது.

END

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *