வாகன இறக்குமதியை மீண்டும் அமுல்படுத்துவது தொடர்பில் அண்மையில் எழுந்துள்ள பல்வேறு வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைக்க, சிலோன் மோட்டார் வாகன வர்த்தகர்கள் சங்கம் (CMTA) ஆனது, ஒரு முனைப்பான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. பொருளாதாரத்திற்கு நன்மையளித்தல், மக்களின் போக்குவரத்து தேவைகளைப் பூர்த்தி செய்தல், அரச வருமானத்தை உறுதி செய்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்தி, ஒரு விரிவான முன்மொழிவை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் CMTA சமர்ப்பித்துள்ளது.
குறித்த முன்மொழிவானது, இரண்டு முக்கிய பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. முதல் பகுதியானது, வாகன இறக்குமதி மீதான தற்காலிகத் தடையை படிப்படியான மற்றும் இடைவிட்ட அணுகுமுறை மூலம் நீக்குவதற்கு வலியுறுத்துகிறது. ஆரம்ப கட்டமாக இரு சக்கர வாகனங்கள் மற்றும் மூன்று சக்கர வாகனங்களையும், அதனைத் தொடர்ந்து வர்த்தக தேவை வாகனங்களையும், இறுதியாக பயணிகள் வாகனங்களையும் இறக்குமதி செய்தல். இத்திட்டத்தின் இரண்டாம் பகுதியானது, அதிக வரியுடன், காலாண்டின் அடிப்படையிலான குறைப்புடன், மேலதிக 130% எனும் வரி விதிப்புக்கு உட்பட்டு வாகனங்களை இறக்குமதி செய்ய முன்மொழியப்பட்டுள்ளது. இந்த முறையான அணுகுமுறையானது, இரண்டு வருட காலத்திற்குட்பட்டு, ஒவ்வொரு காலாண்டிலும் 15% வரி குறைப்புடன், வரிக் கட்டமைப்பை அதன் தற்போதைய நிலைமைக்கு கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்தகைய திட்டமானது, இறக்குமதித் தடை நீக்கத்துடன் அதிகளவான வாகன இறக்குமதியை மேற்கொள்வதை தடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பைப் பாதுகாக்கும் வகையிலான ஒழுங்குபடுத்தப்பட்ட மற்றும் நிலைபேறான இறக்குமதி நடைமுறைகளின் தேவை என்பது CMTA இனால் முன்னிலைப்படுத்தப்பட்ட முக்கியமான அம்சங்களில் ஒன்றாகும். பழைய வாகனங்களை இறக்குமதி செய்வதை, சங்கம் வன்மையாக எதிர்க்கிறது. ஏனெனில் இது சூழல், எரிபொருள் நுகர்வு ஆகியவற்றில் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதோடு, உதிரிப்பாகங்களின் இறக்குமதியின் தேவையை கணிசமாக அதிகரிக்கும். இது அந்நியச் செலாவணி வெளியேற்றத்தை மேலும் அதிகரிக்கும். அத்துடன், கடன் முறையில் வாகனங்களை இறக்குமதி செய்வதை CMTA ஆதரவளிக்கவில்லை. ஏனெனில் இது விநியோகஸ்தர்களுக்கு சட்டவிரோதமான வழிகளில் நிதியை அனுப்பும் நடைமுறைகளை எளிதாக்கும் வாய்ப்பைக் கொண்டுள்ளது.
CMTA இனது முன்மொழிவானது, வாகன இறக்குமதிக்கான முழுமையாக ஆராய்ந்து வடிவமைக்கப்பட்ட கட்டமைப்பைச் செயற்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றுவதற்கான அதன் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது. நீண்ட கால, நிலைபேறானதன்மை, பொறுப்பான பொருளாதார வளர்ச்சியை மையமாகக் கொண்டு, முழு நாட்டிற்கும் பயனளிக்கும் சாதகமான மாற்றங்களைக் கொண்டுவர சங்கம் முயற்சி செய்கிறது.
1919 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட, சிலோன் மோட்டார் வாகன வர்த்தகர்கள் சங்கம் (CMTA) ஆனது, இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் அனுமதி பெற்ற ஒரேயொரு வர்த்தக சங்கமாகும். இது வாகன உற்பத்தியாளர்களால் உள்நாட்டில் நியமிக்கப்பட்ட, அனுமதிப்பத்திரம் கொண்டவர்களை (பொதுவாக ‘முகவர்’ என்று அழைக்கப்படுகிறது) பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இது இப்பிராந்தியத்தில் உள்ள மிக பழமை வாய்ந்த வாகன வர்த்தக சங்கமாகும். CMTA வில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் ஒன்றிணைந்து ஆயிரக்கணக்கான இலங்கையர்களை பணிக்கு அமர்த்தி, பயிற்சிகளை வழங்கும் அதே நேரத்தில், பொறியியல் மற்றும் முகாமைத்துவத்தில் சர்வதேச ரீதியாக கடைப்பிடிக்கப்படும் சிறந்த நடைமுறைகளையும் நாட்டிற்கு கொண்டு வந்து, நன்கு பயிற்றப்பட்ட மற்றும் வெளிநாடுகளில் தொழில் பெறும் ஆற்றல் கொண்ட ஒரு தொழிற்படையை உருவாக்குகின்றனர். CMTA வில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் அனைவரும், தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் உற்பத்தியாளர்களால் கணக்காய்வு செய்யப்படுவதோடு, அவர்கள் இறக்குமதி செய்யும் வாகனங்கள், நாட்டிற்கு விசேடத்தும் கொண்ட குறிப்பிட்ட தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டு உரிய தொழிற்சாலைகளிலிருந்து நேரடியாக அனுப்பி வைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
END
Photo Caption
சிலோன் மோட்டார் வாகன வர்த்தகர்கள் சங்கத்தின் (CMTA) தலைவர், சாரக்க பெரேரா