LEED+ திட்டத்தின் மூலம் பெறப்பட்ட கண்டுபிடிப்புகள், தகவலறிவுகள் வெளியீடு
சர்வதேச தொழிலாளர் தாபனம் (ILO) ஆனது, Local Empowerment through Economic Development and Reconciliation (LEED+) திட்டத்தை அடிப்படையாகக் கொண்ட இரண்டு நாள் அறிவுப் பகிர்வு மன்றத்தை வெற்றிகரமாக நடாத்தியுள்ளது. வட மாகாணத்திலுள்ள பல்வேறு மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்பட்ட, LEED+ திட்டமானது, இரண்டு வெற்றிகரமான கட்டங்களுக்குப் பிறகு நிறைவுக்கு வருகின்றது. அதன் முதல் கட்டம் 2011 இல் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த அறிவுப் பகிர்வு மன்றமானது, கிராமப்புற சமூகங்களை உள்ளீர்க்கப்பட்ட மற்றும் நிலைபேறான கண்ணியமான வேலை வாய்ப்புகளை உருவாக்கும் LEED+ திட்டத்தின் 12 ஆண்டு பயணத்தின் முக்கியமான இறுதிக் கட்டத்தை பிரதிபலிக்கிறது. பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பாதிக்கப்படக்கூடிய குழுக்கள் மீதும் இத்திட்டம் அதிக கவனம் செலுத்துகிறது.
ILO இனது அமைதி மற்றும் மீளெழுச்சிக்கான உலகளாவிய தொழில்வாய்ப்புத் திட்டத்தின் (Jobs for Peace and Resileince) ஒரு பகுதியான LEED+ திட்டமானது, அவுஸ்திரேலிய அரசின் வெளிவிவகார மற்றும் வர்த்தகத் துறை (DFAT), நோர்வே அரசாங்கம் ஆகியவற்றால் ஆதரவளிக்கப்படுகிறது. தேசிய மற்றும் துணைத் தேசிய அரசாங்க பங்குதாரர்கள், தனியார் துறை, அடிப்படை மட்ட நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் இந்த திட்டம் செயற்படுத்தப்பட்டது.
இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகராலயத்தின் அபிவிருத்தி ஒத்துழைப்புக்கான முதன்மைச் செயலாளர் Erika Seymour இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில், “LEED+ திட்டமானது, கடந்த 12 வருடங்களில் 43000ற்கும் மேற்பட்ட குடும்பங்களின் நிலைபேறான வருமானமீட்டலிற்கும், வியாபார வளர்ச்சிக்கான உத்திகளுக்கும், திறன்சார் விருத்திக்கும் நேரடியான பங்களிப்பினை வழங்கியுள்ளது” என தெரிவித்தார்.
இலங்கைக்கான நோர்வே தூதரகத்தின் பிரதம செயலாளரும் அதன் துணைத் தலைவருமான Hilde Berg Hansen இது தொடர்பில் தெரிவிக்கையில், “உள்நாட்டுப் போர் முடிவடைந்து ஒரு தசாப்தத்திற்கும் மேலாக கடந்துவிட்ட போதிலும், அதனுடன் தொடர்புடைய விளைவுகள் வட மாகாணத்தில் உள்ள சமூகங்களை தொடர்ந்தும் பாதித்த வண்ணம் உள்ளன. எனவே, இந்த சமூகங்களுக்கு ஆதரவளிப்பதற்கும் இந்த பிராந்தியங்களின் வளர்ச்சியை மேம்படுத்துவதற்கும், அரச மற்றும் தனியார் துறைகளுக்கு இடையிலான கூட்டு முயற்சிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. LEED+ திட்டமானது, இந்த சமூகங்களைச் சேர்ந்த தனிநபர்களின் திறன்களை மேம்படுத்துவதோடு அவர்கள தமது அபிலாஷைகளை அடைவதில், தனியார் துறை முதலீடுகளை ஈர்ப்பதற்கான வசதியை ஏற்படுத்துவதில் குறிப்பிடும்படியான பங்கைக் கொண்டுள்ளது.
30 வருட உள்நாட்டு மோதலின் விளைவாக, ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் இலங்கையின் வட மாகாணமானது, சமூக, பொருளாதார முன்னேற்றம் மற்றும் மேம்பாட்டை பாதிக்கும் பலவாறான தடைகளை எதிர்கொண்டுள்ளது. இங்கு தொழில் வாய்ப்பின்மை மற்றும் வறுமை விகிதாசாரம், நாட்டின் மொத்த சராசரி அளவிலும் அதிகமாக உள்ளது. அதிகளவான வறுமையான குடும்பங்களின் எண்ணிக்கையைக் கொண்டுள்ள வட மாகாணம் இலங்கையின் ஏழ்மையான பிராந்தியங்களில் ஒன்றாக காணப்படுகின்றது. இதை நிவர்த்தி செய்யும் நோக்கில், LEED திட்டம் அதன் முதல் கட்டத்தில் வடக்கின் கூட்டுறவுத் துறையை புத்துயிர் பெறுவதற்கான ஒரு மூலோபாயத்தைப் பயன்படுத்தியது. அத்துடன் பிராந்தியத்தில் உள்ள சிறிய அளவிலான விவசாயிகள் மற்றும் மீனவர்களை, இலங்கை முழுவதும் உள்ள வணிகங்களுடன் இணைக்க உதவியது. இத்திட்டத்தின் முதல் கட்டத்தில் பெற்ற படிப்பினைகள் மற்றும் வெற்றியை மேலும் கட்டியெழுப்பும் வகையில், அதன் இரண்டாம் கட்டத்தில் LEED+ திட்டமானது, தெரிவு செய்யப்பட்ட விவசாயம் மற்றும் மீன்பிடி பெறுமதிச் சங்கிலிகளில் கூட்டாண்மைகளை ஏற்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தியது. உற்பத்தியாளர்களுக்கும் முதலீட்டாளர்களுக்கும் சமமான அடிப்படையிலான பொருளாதார ஊக்குவிப்புகளை உருவாக்குதல், இதன் விளைவாக வரும் வெற்றிச் சூழ்நிலைகள் ஆகியன, நிறுவனங்கள் தங்கள் தடத்தை விரிவுபடுத்துவதையும், வடக்கில் செயலாக்க மையங்களை அமைப்பதையும் ஏற்படுத்தியது. இதன் மூலம் பல வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் முடிந்தது.
LEED+ திட்டமானது, அதன் செயற்பாட்டின் கடைசி வருடத்தை அடையும் இத் தருணத்தில், வெற்றிகரமான வணிக மாதிரிகளை நிறுவனமயமாக்குவதையும், திட்டம் முடிவடைந்த பின்னரும் அவற்றின் தொடர்ச்சியான விரிவாக்கத்தை உறுதி செய்வதையும் உள்ளடக்கிய, வெளியேறும் உத்திகளை செயற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. LEED+ அணுகுமுறை மற்றும் வணிக மாதிரிகளை ஏற்பதன் மூலம், நம்பிக்கைக்குரிய பெறுமதிச் சங்கிலிகளை ஏற்படுத்துவதற்கு அரச-தனியார் கூட்டாண்மைகளை LEED+ திட்டமானது ஏற்படுத்தியுள்ளது. கிராமப்புற சமூகங்களின் நீண்ட கால தொழில் வாய்ப்பு, உற்பத்தித் திறன், பொருளாதார வளர்ச்சிக்கு அது பங்களிக்கிறது. தனியார் துறையுடனான ஒத்துழைப்பு மூலம், மாகாணத்திற்கு சாத்தியமான பெறுமதிச் சங்கிலிகளை இத்திட்டம் அடையாளம் கண்டுள்ளதோடு, இது வட மாகாணத்தில் முதலீடுகளை அதிகரிக்க வழி வகுக்கின்றது.
இலங்கை மற்றும் மாலைதீவு நாடுகளுக்கான ILO அலுவலகத்தின் பணிப்பாளர் சிம்ரின் சிங் இங்கு கருத்து வெளியிடுகையில், “ஒரு தசாப்தத்திற்கும் அதிகமாக இடம்பெற்ற, LEED மற்றும் LEED+ திட்டங்கள், மேம்படுத்தப்பட்ட வாழ்வாதாரம் மற்றும் வேலைவாய்ப்பை மையமாகக் கொண்ட உத்திகளை நடைமுறைப்படுத்தியுள்ளது. இத்திட்டமானது, பிராந்தியத்தின் உண்மை நிலையினை அடிப்படையாகக் கொண்டு புத்தாக்கமாகவும் இடம்பெற்றது. அதன் வெற்றியானது, கூட்டுறவுச் சங்கங்களைச் செயற்படுத்துவதன் மூலமும், வட பகுதியிலும் உள்ள உற்பத்தியாளர்களுடன், தனியார் துறையினரின தொடர்பை உருவாக்குவதன் மூலமும் குறுகிய கால வெற்றிகளை வழங்கியுள்ள அதே வேளை நீண்ட கால தீர்வுகளையும் வழங்கியுள்ளது. உரிய ஆதரவுச் சேவைகள், அறிவூட்டல் மற்றும் சந்தை இணைப்புகள் ஆகிய சூழல் தொகுதி உருவாக்கப்பட்டதன் மூலம், சகலருக்கும் கௌரவமான தொழில் வாய்ப்புக்கள் தொடர்ச்சியாக உருவாக்கப்படவுமுள்ளது. ILO வின் பங்கானது, வணிகங்களை சமூகங்களுடன் இணைக்கும் வாய்ப்புகளை எளிதாக்குதல் மற்றும் உருவாக்குதல் ஆகியவற்றிற்கான விதையினை விதைப்பதாகும். அதன் மூலம் வளர்ச்சிப் படிநிலைகளை அனைவரும் பகிர்ந்தனுபவித்தற்குரிய சூழல் ஏற்படுத்தப்படுகிறது” என்றார்.
ஒரு தசாப்தத்திற்கும் மேலாக இலங்கையின் வடமாகாணத்தில், நன்கு பரீட்சிக்கப்பட்ட வெளியீடுகளைக்கொண்ட ILO LEED+ செயற்றிட்டமானது, பிராந்தியங்களிற்கிடையிலான ஏற்றத்தாழ்வுகளை சீர்செய்யும், மற்றும் ஒவ்வொரு மாவட்டதினதும், துறையினதும் தனித்துவமான தேவைகளை கருத்திள்கொள்ளும், மனிதர்களை அடிப்படையாக் கொண்ட பொருளாதார மற்றும் வணிக ரீதியிலான கொள்கைகளை வகுப்பதன் முக்கியத்துவத்தை நிரூபித்துள்ளது.