– கடினமான காலங்களில் விவசாயிகளின் வாழ்க்கைக்கு உதவுவதற்கான திட்டம்
பல்வேறு வகையான பால் பொருட்களை உற்பத்தி செய்து, பெறுமதியான அந்நியச் செலாவணியை நாட்டுக்காக சேமிக்கும் இலங்கையின் முன்னணி உள்ளூர் பால் வர்த்தக நாமமான Pelwatte Dairy (பெல்வத்தை பால் பண்ணை), விவசாயிகளின் நலனில் முன்னணியில் நின்று செயற்படும் நிறுவனமாக உள்ளது. குறிப்பாக விவசாயிகள் தற்போது எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடிகளை கருத்திற் கொண்டு, விவசாயிகளின் சமூக ரீதியான தளத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கும், அதனை மேம்படுத்துவதற்குமாக மேற்கொண்டு வரும் முயற்சிகளில், பெல்வத்தையானது விவசாயிகளின் பல்வேறு வகையான குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான ஒத்துழைபை வழங்கும் நோக்கில் ஒரு புத்தாக்கமான செயற்றிட்டத்தை ஆரம்பித்துள்ளது.
Pelwatte நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் அக்மல் விக்ரமநாயக்க இது தொடர்பில் தெரிவிக்கையில், “எமது பலம் மிக்க, 10,000 பேரைக் கொண்ட பால் பண்ணை சமூகத்திற்கு சேவை செய்வதற்கான எமது சமீபத்திய முயற்சியில், நாட்டின் விவசாய அமைச்சுடன் இணைந்து முன்னெக்கப்படும் சிறிய அளவிலான விவசாய வர்த்தக பங்காளித்துவத் திட்டமான SAPP எனும் சிறுதோட்ட விவசாயப் பங்காளித் திட்டத்தின் (Smallholder Agribusiness Partnership Program) அங்கத்துவத்தை நாம் பெற்றுள்ளோம். SAPP திட்டமானது, அநுராதபுரம், நுவரெலியா, குருணாகல், மொணராகலை, பொலன்னறுவை, பதுளை, அம்பாறை, புத்தளம் ஆகிய எட்டு மாவட்டங்களைச் சேர்ந்த 10,000 பால் பண்ணை விவசாயிகளுக்கு அவர்களின் வர்த்தக பங்காளித்துவத்தை மேம்படுத்துவதற்காகவும், நிதி, தொழில்நுட்ப அறிவு, விவசாய இயந்திரமயமாக்கல் மற்றும் நிலைபேறான நடைமுறைகளை மேம்படுத்துவதற்கு உதவுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. நாட்டின் தற்போதைய பொருளாதார நிலையானது, எமது பால் பண்ணை சமூகத்தை கடுமையாக பாதித்துள்ளது. ஆயினும், பெல்வத்தை ஆகிய நாம் சிறந்த தரத்திலான பால் உற்பத்தியை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகிறோம். அந்த வகையில், SAPP மானியத் திட்டத்தில் பங்குதாரராக இருப்பதன் மூலம் முன்மாதிரியாக பயணிப்பதும் எமது கடமையென நாம் உணர்கிறோம். எமது விவசாயிகளின் குடும்பங்களில் இடம்பெறும் நிகழ்வுகளில், குறிப்பாக குடும்ப உறுப்பினரின் திருமணம், குடும்பத்தில் ஒரு புதிய உறுப்பினரின் பிறப்பு, விவசாயியின் குழந்தையை தரம் 01 இல் சேர்த்தல், குழந்தை தரம் 5 புலமைப்பரிசில் சித்தியடைதல் அல்லது பல்கலைக்கழகத்திற்கு நுழைதல், ஒரு பெண் குழந்தை பருவமடையும் போது போன்ற வாழ்வின் முக்கிய தருணங்களில் மற்றும் ஒரு குடும்ப உறுப்பினர் ஊனமுறல் அல்லது இதய அறுவை சிகிச்சை, சிறுநீரக சிகிச்சை, புற்றுநோய் சிகிச்சைகளை எதிர்கொள்ளும் போது, குடும்ப உறுப்பினரின் மரணத்தின் போதும் நாம் நிதி ரீதியான பங்களிப்பை வழங்கவுள்ளோம்.” என்றார்.
SAPP மானியம் வழங்கும் திட்டம், சிறுதொழில் வியாபார கூட்டாண்மை திட்டம் (SAPP) மற்றும் சந்தை சார்ந்த பால் பண்ணை (MOD) திட்டத்தின் பங்களிப்புடன் கெக்கிராவை பால் சேகரிப்பு நிலைய கேட்போர் கூடத்தில் கடந்த ஜூலை 08 ஆம் திகதி பெல்வத்தை நிறுவனத்தினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இங்கு கவனிக்கப்பட வேண்டி விடயம் யாதெனில், SAPP என்பது நிதி மானிய திட்டம் மாத்திரமல்லாது, மாறாக அமெரிக்க விவசாயத் துறை (USDA) மற்றும் சர்வதேச நிறைவேற்று கூட்டுத்தாபனம் (IESC) ஆகியவற்றினால் முன்னெடுக்கப்படும் சந்தை சார்ந்த பால் உற்பத்தித் திட்டத்தின் உதவியுடன் விவசாய சமூகத்தை மேம்படுத்துவதற்கான முயற்சியுமாகும்.
பெல்வத்தை முகாமைத்துவப் பணிப்பாளர் விக்ரமநாயக்க மேலும் கருத்து வெளியிடுகையில், “இலங்கையின் பால் பண்ணை விவசாய சமூகத்திற்கு பல்வேறு வழிகளில் உதவுகின்ற, தேசிய பால் உற்பத்தித் திட்டத்தில் அங்கம் வகிப்பதற்காக எமக்கு கிடைத்த வாய்ப்பு தொடர்பில் நாம் மகிழ்ச்சியடைகிறோம்.” என்றார்.
Pelwatte Dairy ஆனது, இலங்கையிலுள்ள முன்னணி உள்ளூர் பால் வர்த்தக நாமங்களில் ஒன்றாகும். இது பல்வேறு வகையான பால் பொருட்களை உற்பத்தி செய்வதன் மூலம், பெறுமதியான அந்நியச் செலாவணியை நாட்டிற்காக சேமிக்கிறது. உள்ளூர் பால் பண்ணையாளர்களை மேம்படுத்துவதில் எப்போதும் நம்பிக்கை கொண்டுள்ள பெல்வத்தை நிறுவனம், கொவிட்-19 மற்றும் பொருளாதார நெருக்கடியின் போது நாடு எதிர்கொண்ட இன்னல்களுக்கு மத்தியிலும் இடைவிடாமல் தொடர்ச்சியாக அவர்களுக்கு ஆதரவளித்து வந்துள்ளது. ஒரு நம்பகமான உள்ளூர் பால் பொருள் உற்பத்தியாளர் எனும் வகையில், பெல்வத்தை தனது தயாரிப்பின் தரத்தை மிக உயர்ந்ததாகவும், இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களை விட மிக புத்துணர்ச்சியுடனும் இருப்பதை மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்துகின்றது. எப்போதும், பண்ணையின் வாசலில் இருந்து சில்லறை விற்பனை நிலைய இறாக்கைகளைச் சென்றடையும் வரை, 48 மணித்தியாலங்களுக்கும் குறைவான நேரத்தை பெல்வத்தை உத்தரவாதம் அளிக்கிறது. இந்த அம்சத்தை இறக்குமதி செய்யப்பட்ட வர்த்தகநாமங்களில் கூட பெற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.