Microgrid கட்டமைப்பு மூலம் இலங்கையில் பசுமை வலு சக்தியை மேம்படுத்தும் DIMO

இலங்கையின் முன்னணியில் உள்ள பல்வகைப்பட்ட கூட்டு நிறுவனங்களில் ஒன்றான DIMO, மொரட்டுவை பல்கலைக்கழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட இலங்கையின் முதலாவது ‘Microgrid புதுப்பிக்கத்தக்க வலுசக்தி திட்டத்தை’ அண்மையில் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இந்த Microgrid கருத்திட்டத்தின் மூலம் உள்ளூர் தொழிற்துறைகளுக்கு தொடர்ச்சியான மின்சார விநியோகத்தை வழங்க DIMO நிறுவனம் எதிர்பார்க்கிறது. தனது பொறியியல் சேவைகள் மூலம் மாலைதீவு மற்றும் ஆபிரிக்காவின் கிராமப்புறங்களில் தனது வியாபித்துள்ள DIMO, குறித்த வெளிநாட்டு சந்தைகளுக்கும் Microgrid கருத்திட்டதை அறிமுகப்படுத்த எதிர்பார்த்துள்ளது.

இலங்கை தனியார் மின்சார நிறுவனம் (LECO) மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன், DIMO நிறுவனத்தினால் மொரட்டுவை பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்ட Microgrid கட்டமைப்பு மூலம், பல்கலைக்கழகத்திற்குத் அவசியமான மின்சாரம் தொடர்ச்சியாக விநியோகிக்கப்படுகின்றது. இதன் காரணமாக தற்போது நடைமுறையில் உள்ள மின்சாரத் தடையின்போது, (13 மணி நேர மின்வெட்டு) ஏற்படும் சிரமங்களை மொரட்டுவை பல்கலைக்கழகத்தினால் சமாளிக்கக் கூடியதாக உள்ளது. மேலும், இத்திட்டத்தின் காரணமாக, தேசிய மின்கட்டமைப்பை மாத்திரம் சார்ந்திருக்காமல், மொரட்டுவைப் பல்கலைக்கழகம் தனது சொந்த மின்சாரத் தேவைகளை அதன் வளாகத்திலேயே உற்பத்தி செய்து கொள்ள முடிந்துள்ளது. பல்கலைக்கழகத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த Microgrid கட்டமைப்பு,  375kw Solar PV தொகுதி மற்றும் 418kw கொள்ளவு கொண்ட ஒரு மின்கலம் மற்றும் அவசியமான வேளையில் பயன்படுத்தக் கூடிய 1,170 kW டீசல் மின்பிறப்பாக்கி ஆகியவற்றை கொண்டுள்ளது. Microgrid கட்டமைப்பினுள் எல்லா நேரங்களிலும் அவ்வேளைக்கு அவசியமான மின்சக்தியை கண்டறிந்து அதற்கேற்ற வகையில் மின்சாரத்தை உருவாக்குகிறது. இதன் விளைவாக அத்தொகுதியில் உள்ள அனைத்து மின்சக்தி மூலங்களையும் பயன்படுத்தி தொடர்ச்சியான தடையில்லாத வகையில் திறனாக மின்சாரத்தை வழங்குவதற்கும் முடிவதோடு, மின்சாரக் கட்டண செலவுகளை குறைக்கவும் முடிகின்றது.

இந்த திட்டத்தில், கலப்பின (Hybrid) தொழில்நுட்பத்தின் அடிப்படையிலான புதுப்பிக்கத்தக்க வலுசக்தி தீர்வுகளை வழங்குகின்றதும், இத்துறையில் உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றானதுமான DHYBRID உடன் DIMO கைகோர்த்துள்ளது.

ஒவ்வொரு வருடமும் வரட்சியான காலங்களில், இலங்கையில் நீர்மின் உற்பத்தியானது சுமார் 28% ஆக வீழ்ச்சியடைகிறது. மேலும் தற்போதைய வெளிநாட்டு செலாவணி நெருக்கடி காரணமாக, எரிபொருள் மூலமான மின்னுற்பத்திச் செயன்முறைகளிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன், இது தற்போதைய மின்வெட்டுக்கும் வழிவகுத்துள்ளது. இந்நிலை இவ்வாறிருக்கையில், நாட்டில் மின்சக்தி தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அதனுடன் இணைந்தவாறு தொழில்துறைகள் மற்றும் கைத்தொழில் துறைகளில் ஈடுபடும் நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்ய சூரிய சக்தியை பயன்படுத்துகின்ற போதிலும், பகல் வேளையில் ஏற்படும் மின்வெட்டுகளின் போது சூரிய மின்கலங்களை பயன்படுத்த முடியாது என்பதால் Microgrid கட்டமைப்புகள் இதற்கு சிறந்த தீர்வாக அமைகின்றன.

இப்புதிய மாற்று வழி குறித்து கருத்துத் தெரிவித்த DIMO குழுமத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி கஹநாத் பண்டிதகே, “எமது புதிய Microgrid திட்டத்தை வெற்றிகரமாக முடித்தமையானது, இலங்கை புதுப்பிக்கத்தக்க சக்தியை நோக்கிச் செல்லும் செயல்பாட்டில் குறிப்பிடத்தக்க சாதனையாகும். எதிர்காலத்தில் இது போன்ற பல புதிய திட்டங்களை முன்னெடுப்பதற்காக எமது கூட்டாளர்களுடன் இணைந்து தொடர்ந்தும் நாம் பணியாற்றவுள்ளோம். இத்திட்டங்களின் மூலம், இலங்கை மக்களின் கனவுகள் மற்றும் அபிலாஷைகளை ஊக்குவிப்பதில் நாம் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்.” என்றார்

தொடர்ச்சியான மின்வெட்டு நிலைமையானது, தொழில்துறை செயல்பாடுகளை பாதிப்படையச் செய்கிறது. விசேடமாக, கண்ணாடி மற்றும் பீங்கான் போன்ற தொழில்துறைகளில், மிகச் சிறிய மின்வெட்டு கூட மிகப் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தி விடும். தற்போதைய சூழ்நிலை அத்தகைய தொழில்துறைகளால் எதிர்கொள்ள முடியாத நிலைமையாக உள்ளது. எனவே, Microgrid கட்டமைப்புகள் வணிக மையங்கள், தொழிற்சாலைகள், ஓய்வு விடுதிகள், வைத்தியசாலைகள், பல்கலைக்கழகங்கள், தரவுக்களஞ்சிய மையங்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில்துறைகளுக்கு சிறந்த தீர்வை வழங்குகின்ற, சரியான நேரத்தில் அமைந்த கருத்தாக்கம் என கூறலாம்.

இலங்கையின் பசுமை வலு சக்தி தோற்றத்தில் உரிய மாற்றத்தை மேற்கொள்வதற்காக தொடர்ச்சியாக தன்னை அர்ப்பணித்துள்ள நிறுவனமான DIMO, நாட்டிலுள்ள சிறிய நீர் மின்சார கட்டமைப்புகள், உயிர் வாயு, உயிர் சேதனங்கள், சூரிய வலு, காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களை நிறுவுவதில் மேம்பட்ட தீர்வுகள வழங்கி வருகிறது. இலங்கையின் முதலாவது காற்றாலை மின் திட்டத்தை மன்னாரில் செயற்படுத்துவதில் DIMO முக்கிய பங்காற்றியுள்ளதுடன், அந்த வகையில், இலங்கையின் முதலாவது Microgrid கட்டமைப்பை வெற்றிகரமாக நிறுவ முடிந்துள்ளமையானது, புத்தாக்கமான பசுமை வலு சக்தி முன்முயற்சிகளை செயற்படுத்தும் DIMO நிறுவனத்தின் அர்ப்பணிப்புக்கான ஒரு சான்றாகும்.

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *