சூழலை பாதுகாப்பதில் பங்களித்த சிலாபத்தின் துடிப்பான குடிமக்கள்

மனிதன் உட்பட முழு உயிரினத் தொகுதிக்கும் சூழலுக்கும் இடையே பிரிக்க முடியாத தொடர்பு உள்ளது. பழங்காலத்திலிருந்தே சூழலுடன் மனிதன் பேணி வந்த ஆழமான தொடர்பு இன்று அழிந்து வருகிறது.

மனிதன் சூழலின் ஒரு கூறு மாத்திரமேயாகும் என்பதுடன் சூழலின் உயிர்வாழ்விற்கு மனிதன் இன்றியமையாத காரணி அல்ல. ஆனால் மனிதர்களின் நிலையான இருப்புக்கு சூழல் சமநிலை அவசியமாகும். இது சூழல் நிலைப்பு வாதம் என்று அழைக்கப்படுகிறது. இதை உணர்ந்த பண்டைய மக்கள், மனிதன் இயற்கையால் ஆளப்படுகிறான் என்பதை எண்ணி வாழ்ந்தனர். ஆனால் சமூக பரிணாம வளர்ச்சியுடன், சூழல் மனித விருப்பத்திற்கு ஏற்ப பயன்படுத்தக்கூடிய ஒரு சொத்தாக மாறியது. இதன் விளைவாக, உலகளாவிய ரீதியில் சூழல் மாசடைவு அதிகரித்து வருகிறது.

உயிர்க்கோளத்தை செயற்கையாக மாற்றுவதன் மூலம் அல்லது அதன் மீது ஆதிக்கம் செலுத்துவதன் மூலம் சூழல் தொடர்பின் வீழ்ச்சி, சூழல் மாசடைவு என வரையறுக்கப்படுகிறது. இன்றைய காலகட்டத்தில் பல்வேறு மனித நடவடிக்கைகள் காரணமாக, எதிர்கால சந்ததியினர் பாதுகாப்பான சூழல் தொகுதியில் வாழ்வதற்கான வாய்ப்புகள் குறைவடைந்துள்ளன. எனவே, ஒட்டு மொத்த சூழல் தொகுதியைப் பாதுகாக்கவும், பராமரிக்கவும், பேணுவதற்குமான பொறுப்பு முழு மனித இனத்திற்கும் உள்ளது.

அந்த வகையில், இலங்கையில் சூழல் மாற்றம் தொடர்பில் அதனை தணிப்பவர்களாக, சூழல் ஆர்வலர்களாக இளைஞர்களை  ஈடுபடுத்துவதில் தனது கவனத்தை செலுத்தியுள்ள British Council, இதற்காக Caritas Sri Lanka National Institute உடன் கைகோர்த்துள்ளது. இந்த உன்னதப் பணியின் பலனை அடையும் வாய்ப்பை Caritas Sri Lanka National Institute நிறுவனமானது Caritas Chilaw Janasaviya SEDEC இற்கு வழங்கியுள்ளது. இலங்கையின் வடமேற்குப் பகுதியில் செழுமையான வரலாற்றைக் கொண்ட புத்தளம் மாவட்டம், ஒருபுறம் அழகிய கடற்கரையையும், மாவட்டம் முழுவதும் நிறைந்த நீர்ப்பாசன தொகுதியையும், அதன் மூலம் போசணை அடையும் பலதரப்பட்ட விவசாய தொகுதியையும் கொண்டுள்ளது. மாவட்டத்தின் காலநிலைச் சமநிலையை பேணுவதற்கு ஆனைவிழுந்தான் இயற்கை பறவைகள் சரணாலயம் மற்றும் வில்பத்து பாதுகாக்கப்பட்ட வனப்பிரதேசம் ஆகியன முக்கியமானவையாகும். அது மாத்திரமன்றி, மாவட்டம் முழுவதும் பரந்து காணப்படும் பல சிறிய வனப் பகுதிகளையும் அது கொண்டுள்ளது.

மூன்று இனங்களின் நான்கு மதங்களைச் சேர்ந்த வெவ்வேறு சமூகங்களினால் கலந்துள்ள சமூக அமைப்பை இங்கு காணமுடியும். இதன் காரணமாக இலங்கையில் மிகவும் பிரபலமான பல சமய மற்றும் கலாசார மையங்களை புத்தளம் மாவட்டத்தில் காணலாம். மாவட்டத்தின் கேந்திர நிலையமாக கருதக்கூடிய சிலாபம் நகரமானது, முன்னாளில் ‘முதுபுரய’ என அழைக்கப்பட்டது. இவ்வாறான விழுமியங்கள் நிறைந்த புத்தளம் மாவட்டம் மனித செயற்பாடுகள் காரணமாக வீழ்ச்சியடைந்து வருவதைக் காண முடிந்துள்ளது. அதற்குத் தீர்வு காணும் வகையில் இளைஞர்களை வலுவூட்டுவதற்காக, British Council மற்றும் Caritas Sri Lanka – SEDEC நிறுவனமும் இணைந்துள்ளது.

Caritas Sri Lanka நிறுவனம் மற்றும் British Council ஆகியவற்றின் வழிகாட்டலின் கீழ், இளைஞர் நிகழ்ச்சித் திட்டமானது சிலாபத்தை அண்டிய பிரதேசங்களை தேர்ந்தெடுத்து அங்கு காணப்படும் சூழலுக்கு எதிர்ப்பான நிலைமைகளை அடையாளம் கண்டு, பொருத்தமான தீர்வுகளை கண்டறிந்து, உரிய விடயங்கள் மற்றும் அறிவின் மூலம் இளைஞர்களை வலுவூட்டும் வகையில் இந்நிறுவனங்களால் ‘British Council Active Citizens’ பயிற்சித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது. ஆறு நாட்களில், ஐந்து வளவாளர்களின் வழிகாட்டலின் கீழ் தெரிவு செய்யப்பட்ட அறுபது இளைஞர், யுவதிகள் குழுவினருக்கு, இரண்டு கட்டங்களாக இப்பயிற்சிகள் முன்னெடுக்கப்பட்டது. இங்கு, தெரிவு செய்யப்பட்ட பிரதேசத்தில் சூழல் பிரச்சினைகள் மக்களின் வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கிறது என கண்காணிக்கப்பட்டு, அப்பிரதேசத்திற்கு ஏற்ற நிலைபேறான வளர்ச்சித் திட்டத்திற்கான முன்மொழிவுகளை உருவாக்குவது மற்றும் சமூகத்தின் பல்வேறு மட்டங்களில் உள்ள மக்கள் மற்றும் அதிகாரிகளின் ஆதரவை எவ்வாறு பெறுவது என்பது பற்றியும், திட்டத்தை செயல்படுத்துவதற்கு தேவையான நிதி நடவடிக்கைகளை முறைமைப்படுத்துவது எவ்வாறு என்பது தொடர்பிலும் இளைஞர்கள் ஆராய்ந்தனர். திட்டத்தை செயற்படுத்துவதற்கு அவசியமான நிதி ரீதியான உதவிகளை, British Council உடன் இணைந்து Caritas Sri Lanka நிறுவனம் வழங்கியது. சர்வதேச மட்டத்திலான அறிவுடன் இளைஞர்களின் மனோபாவங்களையும் ஒன்றிணைக்கும் வகையிலான பயிற்சித் திட்டத்தின் விளைவாக, புத்தளம் மாவட்டத்திலுள்ள ஆறு சூழல் தொகுதிகளை பாதுகாப்பதற்காக, ‘British Council Active Citizens’  திட்டமிடப்பட்டன.

இத்திட்டத்திற்கு அவசியமான விபரங்களைப் பெற்றுக் கொண்ட முதல் குழுவினர், இலங்கை மக்களிடையே மிகவும் பிரபலமான இந்து ஆலயங்களில் ஒன்றான முன்னேஸ்வரம் கோவில் புனித பிரதேசத்தை அண்டிய ஆற்றில் படர்ந்துள்ள சல்வினியா தாவரத்தை அகற்றி, அதனை சேதன உர உற்பத்திற்கு செலுத்தியதோடு, முன்னேஸ்வரம் தலத்தை அண்டிய பிரதேசத்தில் காணப்படும் கழிவு முகாமைத்துவ தொகுதியை புதுப்பிக்க நடவடிக்கை எடுத்தனர். மேலும் முன்னேஸ்வரம் ஆற்றுப்படுக்கையின் இருபுறமும் மரநடுகை வேலைத்திட்டம் மேற்கொள்ளப்பட்டதுடன், இதன் மூலம் இயற்கையுடன் ஒன்றிய உயிர்ப்பான குடிமக்களால் மேற்கொள்ள வேண்டிய சில பணிகள் நிறைவுபெற்றன.

‘அழகிய கடற்கரையை நாளையும் காப்போம்’ எனும் தொனிப்பொருளுடன் இரண்டாவது ஆர்வலர்கள் குழு, உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் சுற்றுலாத் தலமாக கடற்கரையை மாற்றும் நோக்கில், வைக்கால் கடலை அண்டிய கடற்கரையை தூய்மைப்படுத்தும் திட்டத்தை ஆரம்பித்தனர். அதைத் தொடர்ந்து, கடலரிப்பைத் தடுக்க அடம்பன் கொடி போன்ற தாவரங்களும் நடப்பட்டதுடன், புவி வெப்பமடைவதைத் தணிக்கும் நோக்கிலான மரங்கள் நடும் திட்டமும் ஆரம்பிக்கப்பட்டது. கரையோரக் கழிவு முகாமைத்துவ தொகுதியை வலுப்படுத்தும் வகையில் புதிய குப்பைக் கிடங்குகளை அமைப்பதிலும் வைக்கால் சூழல் ஆர்வலர் இளைஞர் குழு கவனம் செலுத்தியது. இதற்கு பிரதேச மக்களின் அளப்பரிய ஆதரவு கிடைத்தமையானது மகிழ்ச்சிக்குரிய விடயமாக அமைந்தது.

மஹவெவ பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மாரவில வெல்ல, மாரவில தெற்கு, மோதர வெல்ல கிராம அலுவலர் பிரிவுகளின் எல்லையாக காணப்படும், பராக்கிராமபாகு மன்னன் காலத்தில் தற்காலிக படைமுகாமாகப் பயன்படுத்தப்பட்ட பாரிய நீர்த்தேக்கமானது, சட்டவிரோத நிர்மாணங்கள் காரணமாக தோன்றியுள்ள நிலப்பரப்பு தவிர்ந்த ஏனைய சிறு பகுதிகளில் ஒன்றான ‘கம் பிம்புர’ எனும் உயிர்ப் பல்வகைமை கொண்ட இயற்கை சூழல் தொகுதியை பாதுகாப்பதன் மூலம், உயிர்ப்பல்வகைமை மற்றும் மனிதகுலத்தின் உயிர்வாழ்வை உறுதிசெய்வது, மூன்றாவது ‘British Council Active Citizens’ குழுவினரின் பிரதான நோக்கமாகும். 100 ஏக்கர் பரப்பளவில் காணப்படும் இந்த நீர்த்தேக்கம் பல்வேறு வகையான பறவைகள் மற்றும் மீனினங்கள் மற்றும் ஊர்வன, உபயவாழிகள் மற்றும் பாலூட்டிகளின் இருப்பிடமாக உள்ளது. கடந்த அரை நூற்றாண்டில் வேகமாக மாற்றப்பட்டு வந்த இந்தக் குளம் தற்போது சதுப்பு நிலமாக காணப்படுகிறது. இவ்வாறாக, துடிப்பான குடிமக்கள் இளைஞர்கள் குழு, சுற்றுச்சூழலின் உயர்ந்த பகுதிகளை உயிரியல் வேலி மூலமாக பாதுகாப்பதற்கான அடிப்படை அடித்தளத்தை ஏற்படுத்தினர். குறித்த பிரதேசத்தில் அனுமதியற்ற கட்டுமானங்களைத் தடுக்கும் வகையில் அரசாங்கத்தின் தலையீட்டுடன் அதன் எல்லைகளை அடையாளப்படுத்தும் முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டு தற்போது அவை வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளன.

‘கிராமத்திற்கு நீர்ப்பாசனம்’ எனும் தொனிப்பொருளின் கீழ் துடிப்பான பிரஜைகள் பயிற்சித் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் முதல் குழுவினரால், கொட்டபிட்டிய குளத்தை புனரமைக்கும் பணியின் முதற் கட்டமாக, சல்வினியா மூடலை நீக்கும் நடவடிக்கை ஆரம்ப கட்டமாக இடம்பெற்றது. மேலும், குளத் தொகுதியின் எல்லையை காண்பிக்கும் வகையில் மருதமரங்களை நடும் திட்டம் செயற்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் நோக்கங்களை அடைய, உள்ளூர் இளைஞர் சங்கங்கள் மற்றும் விவசாய சங்கங்கள் மிகவும் உறுதுணையாக இருந்தன. இத்திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வருவதில் அவர்களின் முதன்மையான நோக்கமாக, நீர்ப்பாசன தொகுதியின் நீர்க் கொள்ளளவை அதிகரிப்பது, மக்களின் அன்றாட பயன்பாட்டிற்கு ஏற்றதாக குளத் தொகுதியை மாற்றுவது, விவசாயம் மற்றும் நன்னீர் மீன்பிடித் தொழிலின் வளர்ச்சியை மேம்படுத்துவது ஆகியன காணப்பட்டது. இங்கு ‘British Council Active Citizens’ குழு பெற்றுக் கொண்ட பயிற்சி மற்றும் அறிவு ஆகியன, நிலைபேறான சுற்றுச்சூழல் தொகுதியொன்றை உருவாக்க உரிய வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஐந்தாவது துடிப்பான குடிமக்கள் குழு, சிலாபத்தின் இதயமாக கருதப்படும் கடற்கரைப் பூங்காவில் கவனம் செலுத்தியது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பலர் கடற்கரைப் பூங்காவை விரும்பினாலும், பகல் காலத்தில் நிழல் இல்லாததால், கடற்கரைப் பூங்காவில் சுதந்திரமாக மக்கள் செலவிடும் நேரம் மிகக் குறைவாக காணப்படுகின்றது. அதனுடன் தொடர்புடைய கண்காணிப்பின் அடிப்படையில், கடற்கரை பூங்காவுடன் இணைந்த பசுமையான நிழலை மேம்படுத்த வேண்டுமென, கடற்கரை பூங்காவை தினசரி உடற்பயிற்சிக்காக பயன்படுத்தும் மக்கள் தெரிவித்தனர். ஒரு நீண்ட முடிவைக் கண்டறியும் ஆய்வைத் தொடர்ந்து, புவி வெப்பமடைவதைக் கட்டுப்படுத்தவும், தினமும் கடற்கரைப் பூங்காவைப் பயன்படுத்துபவர்களுக்கு நிழலை வழங்கவும், கடற்கரைப் பூங்கா நடைபாதையுடன் இணைந்தவாறான மரம் நடுகைத் திட்டமும் ஆரம்பிக்கப்பட்டது.

தொழில்நுட்ப வளர்ச்சியைத் தொடர்ந்து, உக்காத குப்பைகளை சுற்றுச்சூழலில் வெளியேற்றுவது தீவிரமடைந்துள்ளது. ‘British Council Active Citizens’ பயிற்சி நெறியின் இரண்டாம் கட்டத்தின் மூன்றாவது குழு இது குறித்து கவனம் செலுத்தியது. அதிகளவான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கவரும் சிலாபம் கடற்கரையானது அபாயகரமான நிலையில் காணப்பட்டது. ஆரம்ப கட்டமாக, சிலாபம் கரையோரப் பாதுகாப்பு பிரிவின் உதவியுடன் கடற்கரையை சுத்தப்படுத்தும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டதுடன், மக்களின் மனப்பாங்கை மாற்றும் வகையில் ‘தூய்மையான கடற்கரையை புத்துயிர் பெற கைகோர்ப்போம்’ எனும் தொனிப்பொருளில் ஆக்கபூர்வமான விளம்பரப் பலகைகள் அமைக்கப்பட்டன. அத்துடன், சிலாபம் மாநகர சபையினால் மேற்கொள்ளப்பட்டு வரும் கழிவு முகாமைத்துவ திட்டத்துடன் தொடர்புடைய குப்பைத் தொட்டிகளும் புனரமைக்கப்பட்டதுடன், புதிய தொட்டிகளை நிறுவும் வேலைத்திட்டமும் ஆரம்பிக்கப்பட்டது.

இவ்வாறு, காலநிலை மாற்றத்தைத் தணிக்கவும், நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளின் கீழ் சூழல் தொகுதியை மேம்படுத்தவும் பௌதீக மற்றும் மனித வளங்களை வெற்றிகரமாக நிர்வகித்து சிலாபம் நகரத்தை அண்டிய பகுதிகளில் செயற்பட்ட, ‘துடிப்பான பிரஜைகள்’ பிரசாரங்கள் நிறைவடைந்ததுடன், வெகுசன ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம், துடிப்பான சூழல் நட்பு இளைஞர் குழுக்கள், தொடர்ச்சியாக ஒட்டுமொத்த சமூகத்தின் நன்மைக்காக, மக்களின் வாழ்க்கையின் மதிப்பை தொடர்ந்தும் கண்காணித்து வருவர்.

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *