லயன்ஸ் & லியோஸின் ‘ஆயிரம் அபிலாஷைகள்’ முதற் கட்டம் ரூ. 20 மில்லியன் பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் அன்பளிப்பு

ஆயிரம் அபிலாஷைகள்’ பிரசாரத்தின் முதற் கட்டமாக IDH மருத்துவமனை மற்றும் கொழும்பு கிழக்கு போதனா மருத்துவமனைகளுக்கு ரூ. 20 மில்லியன் பெறுமதியான மருத்துவ மற்றும் ஆய்வுகூட உபகரணங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன. இந்நிகழ்வு, Lions & Leos of Multiple District 306 இன் ஏற்பாட்டில் அண்மையில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவ்வுபகரணங்களை  உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு, கோட்டையில் உள்ள லயன்ஸ் செயல்பாட்டு மையத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில், Multiple Council தலைவர் லயன் ஸ்ரீலால் பெனாண்டோ, முன்னாள் Council தலைவர் லயன் மகேஷ் பஸ்குவேல், ஆறு லயன்ஸ் மாவட்டங்களைச் சேர்ந்த ஆறு District Governor, கொழும்பு கிழக்கு போதனா மருத்துவமனை பணிப்பாளர் ரியர் அட்மிரல் வைத்தியர் ஜயசேகர, கொழும்பு கிழக்கு போதனா மருத்துவமனையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் சமிந்த அல்கம ஆகியோரினர் பங்குபற்றியிருந்தனர். இப்பிரசாரத்தின் தூதுவரான பாத்திய ஜயகொடியும் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு நன்கொடையாக வழங்கப்பட்ட உபகரணங்களில் CFX96 Dx Real-Time PCR Detection System (IVD), High flow Oxygen machine, Multichannel Pipette – Volume 120-1200, Centrifuge 5427 R, Freezer (-20 degree Celsius), Multichannel Pipette – Volume 10-100, Non-invasive ventilator (With BiPAP and CPAP), Spectrophotometer ELIZA Reader, Wellwash Versa 2×12 ஆகியன அடங்குகின்றன.

இந்நிகழ்வில் உரையாற்றிய, Multiple Council தலைவர் லயன் ஸ்ரீலால் பெனாண்டோ, “நாம் அனைவரும் மிகவும் இக்கட்டான காலகட்டத்தில் வாழ்ந்து வருகின்ற இவ்வேளையில், ஒருவருக்கொருவர் உதவியளிப்பது முன்னெப்போதையும் விட இப்போது மிகவும் அவசியமானதாக காணப்படுகின்றது. இந்த ‘ஆயிரம் அபிலாஷைகள்’ பிரசாரமானது, எமது மக்களின் வாழ்க்கைக்கு மீண்டும் நம்பிக்கையை அளிக்கும் நோக்கத்தை கொண்டதாகும். பொதுச் சுகாதாரப் பாதுகாப்பு கட்டமைப்பை வலுப்படுத்துவதே இவ்வேளையில் முன்னுரிமையான விடயமாக காணப்படுகின்றது. நாடு முழுவதுமுள்ள மருத்துவமனைகளுக்கு குறிப்பிட்ட அளவிலான நன்கொடைகளை வழங்கும் வகையிலான சவாலை, எமது லயன்களும், லியோக்களும் எதிர்கொண்டுள்ளனர். திட்டத்தின் இரண்டாம் கட்டமாக, நாடு முழுவதிலுமுள்ள தெரிவு செய்யப்பட்ட மருத்துவமனைகளுக்கு, ரூ. 50 மில்லியன் பெறுமதியான மருத்துவ உபகரணங்களை நாம் வழங்க திட்டமிட்டுள்ளோம்.” என்றார்.

‘ஆயிரம் அபிலாஷைகள்’ பிரசாரத்தின் தூதுவரான பாத்திய ஜயக்கொடி, இப்பிரசார நடவடிக்கைகளுக்கு பாராட்டுகளை தெரிவித்ததோடு, இம்முயற்சியின் பங்காளராவதற்கான அழைப்பை பொதுமக்களுக்கு விடுத்தார். இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “கொவிட்-19 தொற்றுநோய்க்கு எதிராக போராடுவதற்காக மருத்துவமனைகளை வலுப்படுத்துவது தொடர்பான இந்த முக்கியமான விடயத்தில் ஒரு அங்கமாக எம்மையும் அழைத்தமை தொடர்பில் நாம் உண்மையில் Multiple District 306 அமைப்பிற்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம். 150 மில்லியன் பெறுமதியான மருத்துவ உபகரணங்களை நன்கொடையாக வழங்கும் வகையிலான, மூன்று கட்டத்தை கொண்ட இப்பாரிய ‘ஆயிரம் அபிலாஷைகள்’ திட்டமானது, நாட்டின் சுகாதாரப் பாதுகாப்பு கட்டமைப்பில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை ஏற்படுத்துமென நம்புகிறோம். இச்சவாலான காலத்தில் எமது ஆதரவை இத்திட்டத்திற்கு வழங்குவோம் என்பதுடன், இலங்கை வாழ் எமது சக குடிமக்களுக்கும் தொடர்ந்தும் உதவுவோம்.” என உறுதியளித்தார்.

இலங்கையின் லயன்களும் லியோக்களும், கொவிட்-19 தொற்றுநோய் பரவலின் ஆரம்பத்திலிருந்தே சமூக ஆதரவு முயற்சிகளில் முன்னணியில் இருந்து செயற்பட்டு வருகின்றனர். அதற்காக அடி மட்டத்தில் இருந்து அவசியமான தங்களால் இயன்ற உதவிகளை அவர்கள் வழங்கி வருகின்றனர். பொதுச் சுகாதாரப் பாதுகாப்பு கட்டமைப்புக்கு உதவியளிக்கும் முயற்சியில், Lions Multiple District 306 ஆனது, சுகாதார அமைச்சுடன் இடம்பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து, ‘Lions of Sri Lanka COVID-19 Relief Fund’ எனும் நிவாரண நிதியத்தை நிறுவி, நாட்டிலுள்ள மருத்துவமனைகளுக்கு மருத்துவ மற்றும் ஆய்வுகூட உபகரணங்களை நன்கொடையாக வழங்கும் வகையில், ரூ. 150 மில்லியன் நிதியை திரட்டும் நோக்கிலான ‘ஆயிரம் அபிலாஷைகள்’ எனும் தேசிய அளவிலான திட்டத்தை ஆரம்பித்து வைத்தது. அனைத்து இலங்கையர்களினதும் வாழ்க்கையும், உரிய வகையில் சிறப்பாக அமைக்கப்பட்ட பொதுச் சுகாதார கட்டமைப்பில் தங்கியுள்ளது என்பதை இலங்கையின் லயன்ஸ் கழகமானது புரிந்து கொண்டுள்ளது. 15,000 லயன் உறுப்பினர்களையும் 9,000 லியோக்களையும் கொண்ட (Lions of Sri Lanka) இவ்வமைப்பானது, ‘Lions Clubs International Foundation’ அறக்கட்டளையின் உறுதியான ஆதரவுடன், இம்முயற்சியில் மிக வலுவாக ஈடுபட்டுள்ளது.

இத்திட்டம் வெற்றி பெறுவதற்காக பங்களிப்பு வழங்கிய, அனைத்து Lions & Leos மற்றும் Lions Clubs International Foundation, நன்கொடைகளை வழங்கிய பொதுமக்கள், இச்செய்தியை எடுத்துச் செல்ல உதவிய Siyatha FM அலைவரிசை உள்ளிட்ட ஊடக வலையமைப்புகள் ஆகியோருக்கு, Multiple District 306 ஆனது தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.

Lions Clubs International ஆனது, சமூக சேவைகளை மேற்கொள்ளும் உலகின் மிகப்பெரிய கழக அமைப்பாகும். இது உலகெங்கிலும் 200 இற்கும் மேற்பட்ட நாடுகளில் சுமார் 46,000 கழகங்களைக் கொண்டுள்ளதுடன், 1.4 மில்லியனுக்கும் அதிகமான உறுப்பினர்களையும் கொண்டுள்ளது. Lions Clubs International Multiple District 306 (Sri Lanka) ஆனது, இந்த உலகளாவிய அமைப்பின் ஒரு பகுதியாகும் என்பதுடன், சுமார் 15,000 உறுப்பினர்களைக் கொண்ட இது, 550 இற்கும் மேற்பட்ட கழகங்களையும் கொண்டுள்ளது. Leos Clubs International ஆனது, இலங்கையில் 9,000 இற்கும் மேற்பட்ட Leos கொண்ட லயன்ஸின் இளைஞர் பிரிவாகும். Lions & Leos of Multiple District 306 ஆனது பல தசாப்தங்களாக நாட்டின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் சமூக ஆதரவு முயற்சிகளில் முன்னணியில் இருந்து வருகின்றது. Lions & Leos ஆனது, கொவிட் தொற்றுநோய் பரவல் காலப் பகுதி முழுவதும் தனது சொந்த குழுவினர் மூலம் தன்னார்வ நடவடிக்கைகள் மற்றும் நன்கொடைகளை வழங்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளது.

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *