ரூ. 40 பில்லியன் அரசாங்க வருமானக் கசிவு தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறும், வாகனத் துறையிலுள்ள அனைத்து இறக்குமதியாளர்களுக்கும் சீரான வரி அமைப்பை ஏற்படுத்துமாறும் CMTA வலியுறுத்தல்

1919ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இலங்கையின் மிகப் பழமையான வாகனச் சங்கமும், இலங்கை வர்த்தகச் சம்மேளனத்துடன் இணைக்கப்பட்டதுமான இலங்கை மோட்டார் வாகன வர்த்தகர்கள் சங்கம் (Ceylon Motor Traders’ Association – CMTA), நாட்டின் வாகனத் துறையை நிர்வகிக்கும் கொள்கைகளில் அதிக சீரான தன்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் நியாயமான தன்மை இருக்க வேண்டுமென அழைப்பு விடுத்துள்ளது. அத்துடன் ஒரு நிலைபேறான வாகன இறக்குமதிக் கட்டமைப்பின் மூலம் முழுத் துறையிலும் சமமான போட்டித் தளத்தை உறுதி செய்ய வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளது.

வாகனங்கள் மீது 50% மேலதிக கட்டணம் அறிமுகப்படுத்தப்பட்டமை உள்ளிட்ட சமீபத்திய கொள்கை நடவடிக்கைகள், ஏற்கனவே சவால்கள் நிறைந்த இச்சந்தைக்கு மேலும் சிக்கலைச் சேர்த்துள்ள நிலையில், வாகனத் துறையானது தொடர்ந்தும் கணிசமான நிதி மற்றும் கட்டுப்பாட்டு அழுத்தங்களின் கீழ் இயங்கி வரும் ஒரு தருணத்திலேயே சங்கம் இவ்விடயத்தை தெரிவித்துள்ளது. அந்நியச் செலாவணியை நிர்வகித்தல், வருமானத்தை உருவாக்குதல் மற்றும் வாகன இறக்குமதியை பொறுப்புடன் கட்டுப்படுத்துதல் ஆகிய அரசாங்கத்தின் தேவையை CMTA அங்கீகரிக்கும் அதே வேளையில், இத்தகைய நடவடிக்கைகள் சட்டபூர்வமான வணிகங்களுக்கு, விகிதாசாரத்திற்கு மாறான பாதகத்தை ஏற்படுத்தாத வகையிலும் அல்லது சந்தையின் பல்வேறு பிரிவுகளுக்கு இடையே போட்டியை சீர்குலைக்காத வகையிலும் அமைவது அவசியமென எதிர்பார்க்கிறது.

வரி கணிப்பீட்டு நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும், பயன்படுத்தப்பட்ட வாகனங்களுக்கான இறக்குமதிச் செலவு, காப்புறுதி மற்றும் சரக்கு முகாமைத்துவ கட்டணமானது (CIF) அதன் பெறுமதியில் தொடர்ச்சியாக 15% போலியான தேய்மானத்தை கழிக்கும் முறையே சங்கத்தின் முக்கியமான கவலைகளில் ஒன்றாக அமைந்துள்ளது. இலங்கைக்குள் நுழையும் பயன்படுத்தப்பட்ட வாகனங்களின் மாதிரி, அதிலுள்ள அம்சங்கள், மிக முக்கியமாக அது ஓடிய தூரம் ஆகியவற்றின் அடிப்படையில் புதிய வாகனங்களுக்கு நிகராக அவை இருக்கும் நிலையில், இந்த பொறிமுறையானது பயன்படுத்தப்பட்ட சில வாகன இறக்குமதிகளுக்கு எதிர்பாராத நன்மையை வழங்குவதாக CMTA சுட்டிக் காட்டுகிறது.

தற்போதுள்ள இந்த பெறுமதித் தேய்மானப் பொறிமுறையானது 2025 ஆம் ஆண்டில் மாத்திரம் அரசாங்க வருமானத்தில் சுமார் ரூபா. 40 பில்லியனை இழக்க வழிவகுத்துள்ளதாக சங்கம் மதிப்பிட்டுள்ளது. இது தொடர்பில் மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால், 2026 ஆம் ஆண்டிலும் இதே அளவிலான வருமானக் கசிவு ஏற்படக்கூடும் என்பதுடன், அரச நிதியைப் பலப்படுத்துவதற்கும் நாட்டின் அபிவிருத்திக்கு ஆதரவளிப்பதற்கும் அரசாங்க வருமானமானது மிக முக்கியமானதாக இருக்கும் இத்தருணத்தில் இது ஒரு கணிசமான இழப்பைப் பிரதிபலிக்கிறது.

நுகர்வோர் தெரிவைக் கட்டுப்படுத்துவதோ அல்லது பயன்படுத்தப்பட்ட வாகனச் சந்தையை எதிர்ப்பதோ தமது நோக்கமல்ல என குறிப்பிட்டுள்ள CMTA, மாறாக நாட்டிற்குள் நுழையும் வாகனங்கள் அவற்றின் உண்மையான மதிப்பு மற்றும் நிலைமைகளின் அடிப்படையில் நியாயமாகவும் சீராகவும் மதிப்பிடப்படுவதை உறுதி செய்வதே இதன் நோக்கம் எனவும் வலியுறுத்துகிறது. கிட்டத்தட்ட ஒரே மாதிரியான இரண்டு வாகனங்கள், ஒன்று இறக்குமதி செய்யப்படுவதற்கு முன்னர் வெளிநாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதற்காக மாத்திரம் வெவ்வேறு அளவிலான வரி அறவீட்டிற்கு உட்படும்போது, அதில் ஒரு வேறுபாடு காட்டப்படுமானால் குறித்த கொள்கை மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டுமென சங்கம் எதிர்பார்க்கிறது.

அண்மையில் கொண்டுவரப்பட்ட 50% மேலதிக கட்டணம் உள்ளிட்ட புதிய நிதி நடவடிக்கைகளின் தாக்கத்தைக் கருத்தில் கொள்ளும்போது இதே நியாயமான கோட்பாடு பயன்படுத்தப்பட வேண்டுமென CMTA வாதிடுகிறது. இத்தகைய கணிசமான மேலதிக செலவு, வாகன விலைகள், நுகர்வோரின் கொள்வனவுத் திறன், வணிக சாத்தியக்கூறுகள் மற்றும் வாகன விற்பனை, விற்பனைக்குப் பிந்தைய சேவைகளுக்கு ஆதரவளிக்கும் பரந்த கட்டமைப்பு ஆகியவற்றைப் பாதித்து, வாகன மதிப்புச் சங்கிலி முழுவதும் தாக்கங்களை ஏற்படுத்தும்.

இந்தத் தாக்கமானது, அங்கீகரிக்கப்பட்ட வாகன இறக்குமதியாளர்களுக்கு, ஒரு வாகனத்தின் ஆரம்ப விற்பனைக்கு பின்னரும் நீடிக்கிறது. காட்சியறைகள், சேவை மையங்கள், தொழில்நுட்ப உபகரணங்கள், பயிற்சி மற்றும் வாடிக்கையாளர் ஆதரவு ஆகியவற்றில் இந்த வணிக நிறுவனங்கள் முதலீடு செய்வதுடன் தொழில்நுட்ப வல்லுநர்கள், பொறியியலாளர்கள், விற்பனை நிபுணர்கள் மற்றும் ஏனைய பணியாளர்களையும் வேலைக்கு அமர்த்துகின்றன. அத்துடன் நிறுவப்பட்ட மற்றும் கண்டறியக்கூடிய அமைப்புகள் ஊடாக இயங்கி, வரிகள், தீர்வைகள், EPF, ETF மற்றும் ஏனைய சட்டபூர்வ கடமைகள் மூலம் அவை பங்களிக்கின்றன.

வாகனக் கொள்கையை வகுக்கும் போது, இந்த பரந்த பங்களிப்பைக் கருத்தில் கொள்ள வேண்டுமென சங்கம் தெரிவிக்கிறது. இணக்கமான மற்றும் வெளிப்படையான வணிகங்கள் மீது விகிதாசாரத்திற்கு மாறான சுமையை சுமத்தும் அதே வேளையில், ஏனைய பிரிவினர் மதிப்பீட்டுச் சலுகைகள் அல்லது கட்டமைப்பு நன்மைகளை பெற அனுமதிக்கும் ஒழுங்குபடுத்தல் சூழலானது, நுகர்வோர் வாகனத்தை கொள்வனவு செய்த பின்னரும் அவர்களுக்கு ஆதரவளிக்கின்ற கட்டமைப்பை குறைந்த மதிப்பீட்டிற்கு உட்படுத்தும் அபாயத்தை இது கொண்டுள்ளது.

வருமானக் கசிவின் பரந்த பின்விளைவுகளையும் CMTA சுட்டிக்காட்டுகிறது. தவிர்க்கக்கூடிய வரிச் சலுகை மூலம் இழக்கப்படும் ஒவ்வொரு ரூபாவும் பொதுச் சேவைகள், உட்கட்டமைப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கக்கூடிய வருமானத்தை பிரதிபலிக்கிறது. எனவே, ஒரு வகை வாகனத்திற்கான தன்னிச்சையாக சாதகமாக அமையும் நடவடிக்கைகள் மூலம் கொள்வனவு செய்யும் திறனை அடைய முயலக்கூடாது என்றும், குறிப்பாக அத்தகைய நடவடிக்கைகள் திறைசேரிக்கு கணிசமான இழப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்றும் சங்கம் நம்புகிறது.

அவ்வாறன்றி, நுகர்வோருக்கு வாகனங்களை மேலும் அணுகக்கூடியதாக மாற்றுவதே இக்கொள்கையின் நோக்கமாயின், முழு வாகனச் சந்தையையும் கருத்தில் கொள்ளும் வெளிப்படையான மற்றும் சீரான கட்டமைப்பின் மூலம் இது எட்டப்பட வேண்டுமென CMTA எதிர்பார்க்கிறது. இத்தகைய அணுகுமுறை வருமானத்தைப் பாதுகாத்தல் மற்றும் ஒரு தொழில்துறையை நிலைபேறானதாக பராமரித்தல் ஆகிய தேவைகளுடன் நுகர்வோர் நலன்களையும் சமநிலைப்படுத்த அரசாங்கத்திற்கு அனுமதிக்கும்.

மேலதிக 15% சலுகைக்குப் பதிலாக வாகனத்தின் உண்மையான வயதின் அடிப்படையில் அமைந்த ஒரு கட்டமைக்கப்பட்ட தேய்மான முறையை சங்கம் இதற்கு முன்னர் பரிந்துரைத்திருந்தது. முந்தைய முன்மொழிவின் கீழ், தேய்மானம் ஒரு வரையறுக்கப்பட்ட அளவுகோலின் படி கணக்கிடப்பட்டு உச்சபட்சமாக 10% ஆகக் குறைக்கப்படும். இது தவறான பயன்பாட்டிற்கான வாய்ப்புகளை குறைக்கும் அதே வேளையில் வாகனத்தின் உண்மையான தேய்மானத்தை சிறந்த முறையில் பிரதிபலிக்கும் வெளிப்படையான பொறிமுறையை வழங்குகிறது.

இந்தக் கோட்பாடானது, இன்றும் பொருத்தமானதாகவே இருப்பதாக CMTA நம்புகிறது. பயன்படுத்தப்பட்ட வாகன இறக்குமதிக்கு ஏதேனும் சலுகை பேணப்பட வேண்டுமானால், அது வாகனத்தின் வயது போன்ற ஒரு நோக்கம் சார்ந்த அளவுகோல்களின் அடிப்படையில் அமைய வேண்டும் என்பதுடன் தெளிவாக வரையறுக்கப்பட்டு சீராக நிர்வகிக்கப்படும் கட்டமைப்பிற்குள் பயன்படுத்தப்பட வேண்டும். இறுதியில் வாகன மதிப்பீடானது உண்மையான பரிவர்த்தனை மதிப்புகளைப் பிரதிபலிக்க வேண்டுமென்பதுடன், ஒரே சந்தையில் போட்டியிடும் வணிகங்கள் சமமான வகையில் நடத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

சமமான போட்டிக் களம் என்பது வணிகங்களுக்கு மட்டுமல்லாது, நுகர்வோருக்கும் அவசியமானது என்பதை சங்கம் மேலும் வலியுறுத்துகிறது. அங்கீகரிக்கப்பட்ட வழிகள் மூலம் கொள்வனவு செய்யப்படும் புதிய வாகனங்கள் பொதுவாக உற்பத்தியாளரின் உத்தரவாதம் மற்றும் கட்டமைக்கப்பட்ட விற்பனைக்குப் பிந்தைய ஆதரவுடன் வருகின்றன. இது உத்தரவாதக் காலத்தில் பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்புச் செலவுகளை நிர்வகிக்க நுகர்வோருக்கு உதவுகிறது. இந்த நன்மைகள் நீண்டகால நம்பகத்தன்மை, அசல் உதிரிப் பாகங்களுக்கான அணுகல் மற்றும் வாகன உரிமையாளர்களுக்கு மன அமைதிக்கு பங்களிக்கின்றன.

இந்த பின்னணியில், தனித்தனி பிரிவுகளைத் தனித்தனியாக அணுகாமல், வாகன வரி விதிப்பு மற்றும் இறக்குமதி ஒழுங்குமுறைகளை ஒரு முழுமையான கோணத்தில் பார்க்குமாறு கொள்கை வகுப்பாளர்களை CMTA கேட்டுக்கொள்கிறது. புதிய வாகனங்கள், பயன்படுத்தப்பட்ட இறக்குமதி வாகனங்கள், அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தர்கள், சுயாதீன வணிகங்கள், நுகர்வோர் ஆகிய அனைவரும் வெளிப்படையான மற்றும் போட்டித்தன்மை கொண்ட சந்தையில் பங்கேற்கக்கூடிய ஒரு கட்டமைப்பை உருவாக்குவதே இதன் நோக்கமாக இருக்க வேண்டுமென அது கூறுகிறது.

இத்தகைய கட்டமைப்பானது மதிப்பீட்டில் உள்ள முரண்பாடுகளைக் குறைப்பதன் மூலமும், சுரண்டலுக்கான வாய்ப்புகளைக் கட்டுப்படுத்துவதன் மூலமும், தெளிவான மற்றும் கணிப்பிடக்கூடிய கொள்கைகளின்படி வரி விதிப்பு பயன்படுத்தப்படுவதை உறுதி செய்வதன் மூலமும் இத்துறை மீதான நம்பிக்கையை வலுப்படுத்த உதவும். அதிக வெளிப்படைத்தன்மையானது அரசாங்க வருமானம், சட்டபூர்வ வணிகங்கள் மற்றும் நுகர்வோர் அனைவருக்கும் நன்மையளிக்கும்.

நாட்டின் பொருளாதார நலன்களைப் பாதுகாப்பதற்கும் வாகன இறக்குமதியுடன் தொடர்புடைய சவால்களை நிர்வகிப்பதற்கும் அரசாங்கத்திற்கு உள்ள பொறுப்பை CMTA ஏற்றுக்கொள்கிறது. இருப்பினும், வாகனத் துறைக்குள் தேவையற்ற ஏற்றத்தாழ்வுகளை உருவாக்காமல் இந்த இலக்குகளை அடைய முடியுமென அது நம்புகிறது.

இலங்கை தனது பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பி, அரச நிதியைப் பலப்படுத்தி வரும் வேளையில், நியாயமான நடைமுறையானது முழுத் துறைக்கும் பொருந்த வேண்டும் எனும் வகையில், வாகனக் கொள்கையானது ஒரு எளிமையான ஆனால் அடிப்படையான கோட்பாட்டினால் வழிநடத்தப்பட வேண்டுமன சங்கம் கோருகிறது. நியாயமற்ற மதிப்பீட்டு சலுகைகளை நீக்குதல், கணிசமான புதிய மேலதிக கட்டணங்களின் தாக்கத்தை மறுபரிசீலனை செய்தல் மற்றும் உண்மையான வாகன மதிப்புகளின் அடிப்படையில் வெளிப்படையான விதிகளை நிறுவுதல் ஆகியவற்றுடன், ஒரு நிலைபேறான வாகனத் துறைக்கு வலுவான அடித்தளத்தை வழங்குவதே CMTA இன் எதிர்பார்ப்பாகும்.

இறுதியில், ஒரு ஆரோக்கியமான வாகனத் துறையானது எந்தப் பிரிவு அதிக நன்மையைப் பெறுகிறது என்பதன் மூலம் வரையறுக்கப்படக் கூடாது. மாறாக ஒவ்வொரு சட்டபூர்வ பங்கேற்பாளரும் நியாயமான, வெளிப்படையான மற்றும் சீராகப் பயன்படுத்தப்படும் விதிகளின் கீழ் இயங்குகிறார்களா என்பதன் மூலமே வரையறுக்கப்பட வேண்டுமென சங்கம் நம்புகிறது. அரசாங்க வருமானத்தைப் பாதுகாப்பதற்கும், பொறுப்பான வணிகங்களுக்கு ஆதரவளிப்பதற்கும், இலங்கை நுகர்வோருக்கு அதிக மதிப்பையும் நம்பிக்கையையும் வழங்குவதற்கும் சமமான போட்டிக் களத்தை பேணுவது அத்தியாவசியமானதாகும்.

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *