25 ஆவது ஆண்டை நிறைவு செய்யும் ‘SLIM Brand Excellence’: உயர் அங்கீகாரத்திற்காக போட்டியிடுமாறு வர்த்தகநாமங்களுக்கு அழைப்பு!

வெள்ளி விழா பதிப்பு, வர்த்தகநாமங்கள் தமது புத்தாக்கம், வியூகம், தாக்கம் மற்றும் உலகளாவிய ரீதியில் போட்டியிடும் இலட்சியத்தை வெளிப்படுத்த ஒரு களத்தை திறக்கிறது

இலங்கையின் சந்தைப்படுத்தல் மற்றும் வர்த்தகநாம பிரபலப்படுத்தல் துறையின் உயரிய அங்கீகாரம் வழங்கும் தளமான ‘SLIM Brand Excellence’, தனது 25ஆவது வெள்ளி விழா பதிப்பை ஆரம்பித்துள்ளது. ஏற்கனவே நிறுவப்பட்ட, வளர்ந்து வருகின்ற, சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகள் (SME), டிஜிட்டல், B2B, புத்தாக்கமான, நிலைபேறான துறைகளைச் சேர்ந்த வர்த்தகநாம பாதுகாவலர்கள் மற்றும் நிறுவனங்கள், தமது அளவிடக்கூடிய தாக்கத்தை ஏற்படுத்திய வர்த்தகநாமங்களுக்கு இவ்வெள்ளி விழா பதிப்பில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கிறது.

இந்த 25 ஆவது ஆண்டு நிறைவானது, வர்த்தகநாம அங்கீகாரத்தின் கால் நூற்றாண்டு பயணத்தைக் குறிப்பதுடன், இலங்கையின் வளர்ந்து வரும் வர்த்தகநாம பிரபலப்படுத்தல் நடைமுறைகளையும் பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது. பாரம்பரிய வர்த்தகநாம உருவாக்கத்திலிருந்து டிஜிட்டல் ரீதியான, புத்தாக்கமான, நிலைபேறான மற்றும் நோக்கம் சார்ந்த உத்திகளை நோக்கி, சந்தைகளையும் நுகர்வோர் அனுபவங்களையும் வடிவமைக்கும் வர்த்தகநாமங்களுடன் இணைந்து ‘Brand excellence’ விருது வளர்ந்துள்ளது. புதுப்பிக்கப்பட்ட விருதுப் பிரிவுகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட பரிசீலனை மற்றும் நடுவர் நடைமுறைகளுடன், 2026 ஆம் ஆண்டு பதிப்பானது அந்தப் பாரம்பரியத்தை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்கிறது.

இலங்கையின் சந்தைப்படுத்தல் துறையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழில்முறை அமைப்பாக, SLIM நிறுவனம் தனது சாதனைகளுக்குத் துணைபுரியும் உத்திகள், செயற்பாடுகள் மற்றும் முடிவுகளை வர்த்தகநாமங்கள் காட்சிப்படுத்துவதற்கான ஒரு தளமாக, ‘Brand Excellence’ திட்டத்தை நிறுவியுள்ளது. 2026 ஆம் ஆண்டிற்கான வெற்றியாளர்களை தெரிவு செய்யும் நடுவர் நடைமுறையானது, வர்த்தகநாமத்தின் வெளிப்படுத்தலை மாத்திரம் கணக்கில் கொள்ளாமல், அதன் வெற்றியின் சாராம்சத்திற்கு அதிக முக்கியத்துவம் அளித்து, உண்மையான வர்த்தகநாம செயல்திறன் மற்றும் மூலோபாய வர்த்தகநாம வளர்ச்சி ஆகிய இரண்டையும் மதிப்பீடு செய்யும்.

விருதுகளுக்காக இரண்டு சுற்றுகளைக் கொண்ட நடுவர் செயன்முறை பயன்படுத்தப்படும். உரிய அளவுகோல்களுடன் விண்ணப்பங்களை ஒப்பிடுகின்ற ஆரம்பப் பரிசீலனை நடைமுறைக்குப் பின்னர், அனுபவம் வாய்ந்த சந்தைப்படுத்தல் மற்றும் தொழில்துறை வல்லுநர்களைக் கொண்ட சிரேஷ்ட நடுவர் குழுவினால் பிரதான விருதுப் பிரிவுகளின் சிரேஷ்ட மட்டத்திலான மதிப்பீடு முன்னெடுக்கப்படும். விளக்கக்காட்சிச் சுற்றும் இதன் ஒரு அங்கமாக அமையும். இது வர்த்தகநாமத்தின் பாதுகாவலர்கள் தமது வர்த்தகநாமத்தின் பயணத்திற்கு வழிகாட்டிய சிந்தனைகளையும் முடிவுகளையும் காட்சிப்படுத்த வாய்ப்பை வழங்கும்.

இது குறித்து, இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவனத்தின் (SLIM) தலைவர் எனோக் பெரேரா தெரிவிக்கையில், “SLIM Brand Excellence தனது 25 ஆவது ஆண்டான வெள்ளி விழாவைக்

கொண்டாடும் இந்த வேளையில், ஒரு முக்கிய பாரம்பரியத்தை மட்டுமல்லாமல், இலங்கையில் வர்த்தகநாம பிரபலப்படுத்தல் மற்றும் சந்தைப்படுத்தலின் வளர்ச்சியையும் நாம் கௌரவித்து கொண்டாடுகிறோம். தொழில்நுட்பம், AI மற்றும் வளர்ந்து வரும் நுகர்வோர் எதிர்பார்ப்புகளால் உந்துதளிக்கப்பட்டு, வர்த்தகநாமங்கள் தமது மதிப்பை உருவாக்குவதிலும், நுகர்வோரை ஈர்ப்பதிலுமான விதம் வேகமாக மாற்றமடைந்து வருகிறது. SLIM இன் நோக்கம், தமது சந்தைப்படுத்தும் ஊழியர்கள் மற்றும் வர்த்தகநாமங்களின் திறன், நம்பிக்கை மற்றும் உலகின் பார்வையை ஏற்படுத்துவதன் மூலம் இலங்கையின் சந்தைப்படுத்தலை உலகளாவிய ரீதியில் கொண்டு செல்வதாகும். எனவே, இந்த வருடத்தின் Brand Excellence திட்டமானது, எமது கடந்த காலத்தின் கொண்டாட்டமாகவும், எதிர்காலத்திற்கான ஒரு தளமாகவும் அமைந்துள்ளது. இலங்கை வர்த்தகநாமங்கள் உள்நாட்டு பலத்திலிருந்து உலகளாவிய செல்வாக்கிற்கு நகரவும், சர்வதேச அரங்கில் போட்டியிடக்கூடிய சிறப்பை வெளிப்படுத்தவும் இது ஊக்குவிக்கிறது.” என்றார்.

SLIM நிறுவனத்தின் நிகழ்வுகள் மற்றும் நிலைபேறான தன்மையின் பிரதித் தலைவர் ரஜீவ் டேவிட் தெரிவிக்கையில், “SLIM Brand Excellence இன் வெள்ளி விழாவானது, உண்மையான விசேடத்துவமானது காலத்துடன் வளர்ச்சியடைகிறது என்பதை நினைவூட்டுகிறது. 2026 ஆம் ஆண்டில், நிலைபேறான தன்மை, படைப்பாற்றல் மற்றும் பொறுப்புணர்வை தழுவும் வர்த்தகநாமங்களை நாம் முன்னிலைப்படுத்துகிறோம். இது, தொடர்ச்சியாக புதிய தரநிலைகளை அமைப்பதை உறுதி செய்கிறது.” என்றார்.

இது குறித்து SLIM நிறுவனத்தின் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான பிரதித் தலைவர் மந்திக ரணசிங்க தெரிவிக்கையில், “Brand Excellence என்பது மிகப்பெரிய வர்த்தகநாமமாக இருத்தல் என்பது பற்றியது அல்ல. அது தெரிவு செய்யப்பட்ட சந்தையில் சிறந்த முறையில் செயற்படும் வர்த்தகநாமமாக இருப்பது பற்றியதாகும். இலங்கையில் ஒவ்வொரு துறையிலும் உள்ள அனைத்து அளவிலான வர்த்தகநாமங்களையும் இதில் பங்கேற்குமாறு நாம் ஊக்குவிக்கிறோம். விருதை வெல்வதற்கு அப்பால், மதிப்பீட்டு செயன்முறையே விலைமதிப்பற்ற கற்றலை வழங்குகிறது. வர்த்தகநாமங்கள் தங்களது செயல்திறனை அளவிடவும் எதிர்கால வளர்ச்சிக்கான பாதையை திறக்கவும் இது உதவுகிறது.” என்றார்.

SLIM இன் பிரதம நிறைவேற்று அதிகாரி சமில் விக்ரமசிங்க தெரிவிக்கையில், “இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவனத்தின் (SLIM) பிரதம நிறைவேற்று அதிகாரி எனும் வகையில், ‘SLIM Brand Excellence Awards 2026’ அறிமுகத்தை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். பல ஆண்டுகளாக, இந்த முதன்மையான தளமானது வலுவான வர்த்தகநாமங்கள் மற்றும் ஆற்றல்மிக்க சந்தைப்படுத்தல் துறைக்கு பங்களிக்கின்ற தொலைநோக்கு, நெகிழ்வுத்தன்மை மற்றும் மூலோபாய சிந்தனையை அங்கீகரித்து கௌரவித்து வருகின்றது. அந்த வகையில் 2026 ஆம் ஆண்டு பதிப்பானது சந்தையின் மாற்றமடைந்துவரும் கோரிக்கைகளைப் பிரதிபலித்து, வர்த்தகநாம நெகிழ்வுத்தன்மை, நிலைபேறான புத்தாக்க கண்டுபிடிப்பு மற்றும் அர்த்தமுள்ள வணிகச் செயற்பாட்டின் தாக்கம் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்துகிறது. Brand Excellence மூலம், சந்தைப்படுத்துனர்கள் மற்றும் நிறுவனங்கள் தமது திறன்களை வெளிப்படுத்தவும், தொழில்துறை தரநிலைகளிலிருந்து கற்றுக்

கொள்ளவும், இலங்கையில் சந்தைப்படுத்தலின் முன்னேற்றத்திற்கு பங்களிக்கவும் நம்பகமான தளத்தை SLIM தொடர்ச்சியாக வழங்கி வருகிறது.” என்றார்.

Lifetime Recognition Awards (ஆயுட்கால அங்கீகார விருதுகள்) மூலம், நாட்டின் வர்த்தகநாம பிரபலப்படுத்தல் மற்றும் சந்தைப்படுத்தல் துறையில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கிய தொழில்துறை ஆளுமைகளையும் இந்த 25ஆவது பதிப்பு அங்கீகரித்து கௌரவிக்கவுள்ளது.

ஒவ்வொரு வர்த்தகநாமமும் தாம் முன்வைக்க வேண்டிய விடயங்களை ‘Brand Book’ வழிகாட்டல்கள் எடுத்துக் காட்டும் அதே வேளையில், ‘2026 Entry Kit’ ஆனது பங்கேற்பதற்கு பரிசீலிக்கும் நிறுவனங்கள் மற்றும் வர்த்தகநாம பாதுகாவலர்களுக்கான தொடர்புடைய விருதுப் பிரிவுகள், தகுதிக்கான அளவுகோல்கள், நுழைவுக் கட்டணங்கள், வெற்றியாளர் தெரிவுக்கான அளவுகோல்கள் மற்றும் விண்ணப்ப நடைமுறைகளை வழங்குகிறது. திருத்தப்பட்ட பிரிவுகள், பரிசீலனை செயன்முறை, இரண்டு சுற்று நடுவர் முறை, சிரேஷ்ட நடுவர் குழாம், விளக்கக்காட்சி சுற்று மற்றும் வர்த்தகநாம பாதுகாவலர் தேவைகள் ஆகியன ‘Blueprint’ இல் விரிவாக விபரிக்கப்பட்டுள்ளன.

இது குறித்து, SLIM Brand Excellence 2026 நிகழ்ச்சித் திட்டத்தின் தலைவர் நுவன் திலகவர்தன தெரிவிக்கையில், “SLIM Brand Excellence இன் வெள்ளி விழாவில் அதற்குத் தலைமை தாங்குவதானது எனக்குக் கிடைத்த பெருமையாகும். 2026 பதிப்பானது வர்த்தகநாமங்கள் முன்னோக்கி செல்லவும், தமது உத்திகளுக்குப் பின்னால் உள்ள சிந்தனைகளை முன்வைக்கவும், அவை அடைந்த பெறுபேறுகளை வெளிப்படுத்தவும், இன்றைய சந்தையின் சவால்கள் மற்றும் வாய்ப்புகளுக்கு எவ்வாறு அவை பதிலளித்துள்ளன என்பதைக் காண்பிக்கவும் ஒரு வாய்ப்பை வழங்குகிறது. பல்வேறு துறைகளில் உள்ள வர்த்தகநாமங்களையும், தங்களது பயணங்களின் வெவ்வேறு கட்டங்களில் உள்ள வர்த்தகநாமங்களையும் இந்த மைல்கல்லின் ஒரு அங்கமாக இருக்குமாறும், தமது வெற்றியின் பின்னணியில் உள்ள ஆர்வம், விடாமுயற்சி மற்றும் நோக்கத்தைக் காட்சிப்படுத்த இத்தளத்தைப் பயன்படுத்துமாறும் அழைப்பு விடுக்கிறோம்.” என்றார்.

SLIM Brand Excellence 2026 நடுவர் குழுத் தலைவரும், Ceylon Ecolife நிறுவனத்தின் தலைவரும், பல்வேறு நிறுவனங்களின் மூலோபாய ஆலோசகருமான நந்தன ஏ. விக்ரமகே தெரிவிக்கையில், “SLIM Brand Excellence 2026 விருது விழாவில், விருதுகளின் நம்பகத்தன்மை, நேர்மை, நியாயம் மற்றும் தொழில்முறை ஆகியவற்றைப் பாதுகாப்பதில் நடுவர் குழு முக்கிய பங்கு வகிக்கிறது. ஒவ்வொரு விருதும் இறுக்கமான மற்றும் பாரபட்சமற்ற மதிப்பீட்டுச் செயன்முறையின் மூலம் தெரிவு செய்யப்படும். இது வர்த்தகநாமத்தின் உண்மையான விசேடத்துவத்தைப் பிரதிபலிக்கும். நுகர்வோர் மற்றும் சந்தையைப் பற்றிய அர்த்தமுள்ள நுண்ணறிவுகளை வர்த்தகநாமங்கள் எவ்வாறு கண்டறிகின்றன; அந்த நுண்ணறிவுகளை தெளிவான உத்திகளாக அவை எவ்வாறு மாற்றுகின்றன; அதை எவ்வாறு சிறப்பாக செயற்படுத்துகின்றன; இறுதியில் அளவிடக்கூடிய முடிவுகளை அவை எவ்வாறு வழங்குகின்றன என்பதைப் புரிந்துகொள்ள நாம் முயற்சிக்கிறோம். இந்த தெரிவுச் செயன்முறையானது நோக்கம், நுண்ணறிவு, உத்தி, படைப்பாற்றல், செயற்படுத்தல் மற்றும் செயல்திறன் ஆகியவற்றிற்கு விசேட முக்கியத்துவம் அளிக்கும். உண்மையான வர்த்தகநாம

விசேடத்துவத்தின் சிறந்த கதைகள் வெளிவரவும், எமது தொழில்துறைக்கு உத்வேகம் அளிக்கவும், எதிர்காலத்திற்கு புதிய தரநிலைகளை அமைக்கவும் எனது வாழ்த்துகளை தெரிவிக்கிறேன்.” என்றார்.

Brand Excellence தனது அடுத்த கால் நூற்றாண்டிற்குள் காலடி எடுத்து வைக்கும் இவ்வேளையில், அதன் கவனமானது ஏற்கனவே முத்திரை பதித்த வர்த்தகநாமங்கள் மீது மாத்திரமல்லாமல், அடுத்த கட்டத்தை வடிவமைக்கும் வர்த்தகநாமங்கள் மீதும் செலுத்தப்படுகிறது.

விசேடத்துவத்தை கௌரவிப்பதில் 25 வருட நிறைவு. தற்போது, மேடையில் ஏற உங்கள் வர்த்தகநாமத்திற்கு வாய்ப்பு!

END

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *