இலங்கையின் வளர்ந்து வரும் மோட்டார் பந்தயத் திறமைசாலியான தனாஷா ரதல்ல (Tanasha Raddella), பண்டாரகமவில் நடைபெற்ற IAME Sri Lanka தொடரின் 3 ஆம் சுற்றில் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பதிவு செய்து, இத்தொடரின் சுற்று ஒன்றை வென்ற வரலாற்றின் முதலாவது பெண் மோட்டார் பந்தய வீராங்கனை எனும் சாதனையை படைத்துள்ளார். இதன் மூலம் மோட்டார் பந்தயத் துறையில் பெண்களுக்கான தடைகளை அவர் தொடர்ந்து தகர்த்து வருகிறார். அவரது விரைவான வளர்ச்சிக்குச் சான்றாக அமைந்துள்ள இந்த வரலாற்றுச் சாதனை, தேசிய மற்றும் சர்வதேச அரங்கில் அவரது பயணத்திற்குத் தொடர்ந்து ஆதரவளித்து வரும் Mobil, Yokohama, Cinnamon Grand Colombo, Auto Miraj, Pitpass ஆகிய நிறுவனங்களின் வலுவான ஆதரவின் தாக்கத்தையும் வெளிப்படுத்துகிறது.
தனது 9 ஆவது வயதிலேயே இலங்கையின் இளம் சர்வதேச பெண் Kart பந்தய வீராங்கனைகளில் ஒருவராக அங்கீகரிக்கப்பட்டுள்ள தனாஷா, ஏற்கனவே IAME இலங்கை சம்பியன்ஷிப்பில் போட்டியிட்டுள்ளதுடன், தற்போது மலேசிய கார்ட்டிங் சம்பியன்ஷிப் மற்றும் IAME மலேசிய சம்பியன்ஷிப் ஆகிய இரண்டிலும் போட்டியிட்டுகிறார். ஓகஸ்ட் முதல், அவர் ஆசிய பிராந்தியத்தின் மிகவும் திறமையான இளம் பந்தய சாரதிகளுடன் போட்டியிடும் IAME ஆசிய சம்பியன்ஷிப் தொடரிலும் களமிறங்கவுள்ளார். அவரது இந்த சவாலானது, விளையாட்டுச் சாதனையைத் தாண்டியது; பாரம்பரியமாக ஆண்களின் ஆதிக்கம் நிறைந்த ஒரு விளையாட்டில் தடைகளை உடைக்கும் மன உறுதி, சகிப்புத்தன்மை மற்றும் துணிச்சலின் சக்திவாய்ந்த கதையாக இது திகழ்கிறது.
பண்டாரகமவில் தனாஷா பெற்ற வரலாற்று வெற்றியானது, மிக உயர்ந்த மட்டத்தில் போட்டியிடுவதற்கான அவரது திறனை உறுதிப்படுத்துவதோடு மட்டுமன்றி, திறமைக்கும் மன உறுதிக்கும் பாலினம் தடையில்லை என்ற சக்திவாய்ந்த செய்தியையும் வழங்குகிறது. அவரது இந்த வெற்றி, மோட்டார் வாகன பந்தயத்தில் பெண்களின் பங்கேற்பு குறித்த பார்வையை மாற்றியமைக்க உதவுவதுடன், மேலும் பல இளம் பெண்கள் தங்களது இலட்சியங்களை நம்பிக்கையுடன் தொடர ஊக்கமளிக்கிறது.
தனாஷாவின் பயணத்திற்கு அவரது பலமான அனுசரணையாளர்கள் ஆதரவளித்து வருகின்றனர். அவர்களின் இந்த முதலீடு, இளைஞர் மேம்பாடு, சம வாய்ப்பு மற்றும் சர்வதேச அரங்கில் இலங்கை இளம் விளையாட்டு வீரர்கள் வெற்றிகரமாகப் போட்டியிடுவதற்கான சாத்தியக்கூறுகள் மீதான நம்பிக்கையை எடுத்துக் காட்டுகிறது. திறமையான இளம் போட்டியாளர்கள் தங்களது கனவுகளை நனவாக்க உதவுவதுடன், அடுத்த தலைமுறைக்கு ஊக்கமளிப்பதிலும் அர்த்தமுள்ள கூட்டாண்மைகள் எவ்வாறு உதவ முடியும் என்பதை இந்த அனுசரணையாளர்கள் ஒன்றிணைந்து நிரூபித்து வருகின்றனர்.
சர்வதேச மோட்டார் வாகன பந்தயத்திற்குப் பயிற்சி, பயணம், உபகரணங்கள் மற்றும் போட்டிகளில் பங்கேற்பதற்கு கணிசமான முதலீடு தேவைப்படுவதால், திறமையான இளம் பந்தய வீரர்கள் தொடர்ச்சியாக மிக உயர்ந்த மட்டத்தில் போட்டியிடுவதற்கு அனுசரணை ஒரு முக்கிய பங்கை வகிக்கிறது. தனது பங்காளர்களின் தொடர்ச்சியான ஆதரவுடன், தனாஷா மலேசிய கார்ட்டிங் சம்பியன்ஷிப், IAME மலேசிய சம்பியன்ஷிப் மற்றும் ஓகஸ்ட் முதல் IAME ஆசிய சம்பியன்ஷிப் ஆகியவற்றில் பங்கேற்று, ஆசியாவின் மிகக் கடுமையான பந்தயப் பாதைகளில் இலங்கையின் நாமத்தைப் பெருமையுடன் எடுத்துச் செல்வார்.
மோட்டார் வாகன பந்தயத்தைத் தாண்டி, தனாஷா பல விளையாட்டுத் துறைகளில் ஈர்க்கக்கூடிய சாதனைகளைப் படைத்த ஒரு திறமையான இளம் விளையாட்டு வீராங்கனையாவார். அவர் தனது பாடசாலையின் 10 வயதுக்குட்பட்டோருக்கான தடகளச் சம்பியனாகத் திகழ்வதுடன், வேகம், சகிப்புத்தன்மை மற்றும் போட்டி மனப்பான்மையை வெளிப்படுத்தி வருகிறார். அத்துடன், அவர் தனது பாடசாலையின் 13 வயதுக்குட்பட்டோருக்கான சிறுமிகளுக்கான கூடைப்பந்தாட்ட அணி மற்றும் கால்பந்தாட்ட அணியின் உறுப்பினராகவும் உள்ளார். இது அவரது பன்முகத்தன்மை, குழுப்பணி மற்றும் விளையாட்டின் மீதான ஆர்வத்தைப் பிரதிபலிக்கிறது. தடகளம் மற்றும் குழு விளையாட்டுகளில் அவர் அடைந்துள்ள சாதனைகள், பந்தயப் பாதைக்கு உள்ளேயும் வெளியேயும் அவரது வெற்றிக்குத் தொடர்ச்சியாக உந்துதலாக அமைகின்ற ஒழுக்கம், மன உறுதி, நெகிழ்ச்சித் தன்மையை மேலும் வெளிப்படுத்துகின்றன.
வரலாற்று ரீதியாகப் பெண்களின் பிரதிநிதித்துவம் குறைவாக உள்ள துறைகளில் தாங்களும் சிறந்து விளங்க முடியும் என்ற நம்பிக்கையை இலங்கை முழுவதும் உள்ள இளம் பெண்களுக்கு தனாஷாவின் சாதனைகள் வழங்கி வருகின்றன. ஆர்வம், விடாமுயற்சி, இளம் திறமையாளர்களை நம்புபவர்களின் ஆதரவு ஆகியன ஒரு காலத்தில் சாத்தியமில்லை என்று கருதப்பட்ட நிலையை தகர்த்து, அதற்கான கதவை திறக்க முடியும் என்பதை அவரது பயணம் எடுத்துக் காட்டுகிறது.
இது குறித்து தனாஷா ரதல்லவின் தந்தையும் அவரது முகாமையாளருமான துஷிர ரதல்ல கருத்துத் தெரிவிக்கையில், “இந்தக் கூட்டாண்மை வெறுமனே பந்தயம் பற்றியது மட்டுமல்ல. இது ஒரு இளம் பெண் தனது கனவுகளைத் தொடரவும், மோட்டார் பந்தயத்தில் பெண்களுக்கான தடைகளை உடைக்கவும், எந்தவொரு கனவையும் காண்பது பெரிய விடயமல்ல என்று ஏனையவர்களை நம்ப வைப்பதற்கான ஊக்கத்தை அளிக்கவும், தொழில்துறையினர் இளம் திறமையாளர்களில் முதலீடு செய்யும் போது எவையெல்லாம் சாத்தியமாகும் என்பதை காண்பிக்கவும் வாய்ப்பளிக்கின்றது. தனாஷாவின் திறமையை நம்பி இந்தப் பயணத்தில் எம்முடன் இணைந்த Mobil, Yokohama, Cinnamon Grand Colombo, Auto Miraj, Pitpass ஆகிய எமது பங்காளர்களுக்கு நாம் எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.” என்றார்.
தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் தனது வெற்றிகளை தொடர்ச்சியாக கட்டியெழுப்பி வரும் தனாஷா, IAME இலங்கைத் தொடரில் பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி இலங்கை மோட்டார் வாகன பந்தயத் துறைக்கு ஒரு திருப்புமுனையாக அமைகிறது. முற்போக்குச் சிந்தனை கொண்ட இலங்கைப் வர்த்தகநாமங்களின் ஆதரவுடனும், வெற்றி பெறுவதற்கான அசைக்க முடியாத மன உறுதியுடனும், தடைகள் உடைக்கப்படுவதற்கே என்பதை நிரூபித்து வரும் அவர், முன்னரை விட பெரிய கனவுகளைக் காண புதியதொரு தலைமுறையினரை ஊக்கப்படுத்தி வருகிறார்.