யூனியன் அஷ்யூரன்ஸ் சுவமக திட்டத்தினூடாக பொசொன் யாத்திரிகையின் போது ஆயிரக் கணக்கானவர்கள் மத்தியில் இலவச நீரிழிவு பரிசோதனை முன்னெடுப்பு

இலங்கையின் நீண்ட காலமாக இயங்கும் ஆயுள் காப்புறுதி சேவைகள் வழங்குனரான யூனியன் அஷ்யூரன்ஸ், தனது பிரதான சமூகப் பொறுப்புணர்வு செயற்திட்டமான யூனியன் அஷ்யூரன்ஸ் சுவமக ஊடாக, அனுராதபுர புனித நகரில் ஜுன் 28, 29 மற்றும் 30 ஆகிய மூன்று தினங்களில் சந்தஹிரு சேயாவிற்கு அருகாமையில் பொசொன் பருவகாலத்தை முன்னிட்டு இலவச நீரிழிவு பரிசோதனைகள் மற்றும் சுகாதார விழிப்புணர்வு செயற்பாடுகளை யாத்திரிகர்கள் மற்றும் பரந்தளவு மக்களிடையே முன்னெடுத்திருந்தது. கருணை, தாராள குணம் மற்றும் சேவை ஆகிய நற்பண்புகளை அடிப்படையாகக் கொண்ட பொசொன் காலத்தின் உன்னத நோக்கத்தைப் பிரதிபலிக்கும் வகையில், யூனியன் அஷ்யூரன்ஸ் இலங்கையின் மிகப்பெரிய ஆன்மீக யாத்திரையை, ஆயிரக்கணக்கான மக்கள் தங்களின் ஆரோக்கியம் குறித்து முன்கூட்டியே விழிப்புடன் செயற்படுவதற்கான ஒரு நல்வாய்ப்பாக மாற்றியமைத்தது. இதற்கமைய, நீரிழிவு நோயை ஆரம்பத்தில் கண்டறிதல் மற்றும் அதற்கான தடுப்புப் பராமரிப்புச் சேவைகளை வழங்கும் விசேட திட்டமொன்றை முன்னெடுத்திருந்தது.

மிகவும் முக்கியமானவற்றைப் பாதுகாப்பது என்ற உன்னத நோக்கத்தின் வழிகாட்டலுடன், யூனியன் அஷ்யூரன்ஸ் நிறுவனம், ஆயுள் காப்புறுதியின் பங்களிப்பை வெறும் நிதிப் பாதுகாப்பு என்பதற்கு அப்பால் தொடர்ந்து விரிவுபடுத்தி வருகின்றது. விழிப்புணர்வு மற்றும் ஆரம்ப கட்ட மருத்துவத் தலையீடுகளை ஊக்குவிக்கும் யூனியன் அஷ்யூரன்ஸ் சுவமக முயற்சியின் ஊடாக, நிறுவனம் ஆரோக்கியமான சமூகங்களைக் கட்டியெழுப்ப உதவுவதுடன், அத்தியாவசியமான சுகாதாரச் சேவைகளை நாடளாவிய ரீதியில் நேரடியாக மக்களிடத்திற்கே கொண்டு சேர்க்கிறது.

2024 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது முதல், யூனியன் அஷ்யூரன்ஸ் சுவமக முயற்சி, இலங்கையின் தனியார் துறையினரால் முன்னெடுக்கப்படும் மிக விரிவான நீரிழிவு விழிப்புணர்வு மற்றும் பரிசோதனைத் திட்டங்களில் ஒன்றாக வளர்சியடைந்துள்ளது. இத்திட்டம் நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து 25 மாவட்டங்களிலுமுள்ள சமூகங்களையும் சென்றடைந்துள்ளதுடன், 23,500 க்கும் மேற்பட்ட தனிநபர்களுக்கு நேரடிப் பயனைப் பெற்றுக்கொடுத்துள்ளது. அத்துடன், 1.2 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு இதுகுறித்த விழிப்புணர்வையும் விரிவுபடுத்தியுள்ளது. இலங்கை நீரிழிவு சங்கம் மற்றும் சுகாதார அமைச்சு ஆகியவற்றுடன் இணைந்து கூட்டாக முன்னெடுக்கப்படும் இத்திட்டம், ஆரம்ப கட்டத்திலேயே நோயைக் கண்டறிவதனை எளிதாக்குவதற்கும், ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளை ஊக்குவிப்பதற்கும் மருத்துவ நிபுணத்துவம், நிறுவனங்களுக்கிடையிலான ஒத்துழைப்பு மற்றும் சமூகப் பங்களிப்பு ஆகியவற்றை ஒன்றிணைக்கிறது. சுயாதீனமாக சான்றளிக்கப்பட்ட யூனியன் அஷ்யூரன்ஸ் சுவமக தாக்க அறிக்கை 2025, பொதுச் சுகாதாரம் மற்றும் கொள்கை மேம்பாட்டு ஆலோசனைகளில் இம்முயற்சியின் பங்களிப்பை மேலும் உறுதிப்படுத்துகிறது. இத்திட்டத்தில் பங்கேற்ற பயனாளிகளில் 71 சதவீதமானோர் தங்களின் பழக்கவழக்கங்களில் நேர்மறையான மாற்றங்களை வௌிப்படுத்தியுள்ளனர் என்பதை அந்த அறிக்கை கண்டறிந்துள்ளது. இது, இந்நோயை ஆரம்பத்திலேயே கண்டறிவதை ஊக்குவிப்பதிலும், இந்த அமைதியான கொலையாளியின் நீண்டகாலப் பாதிப்பைக் குறைப்பதற்கான ஆரோக்கியமான நடத்தைகளை வளர்த்தெடுப்பதிலும் இத்திட்டத்தின் முக்கிய பங்கை வெளிப்படுத்துகிறது.

இந்தத் திட்டம் தொடர்பான யூனியன் அஷ்யூரன்ஸ் பிஎல்சி சந்தைப்படுத்தல் அதிகாரி மஹேன் குணரட்ன கருத்துத் தெரிவிக்கையில்,: “மிகவும் முக்கியமானவற்றைப் பாதுகாப்பதென்பது, அந்தப் பாதுகாப்பிற்கான தேவை ஏற்படுவதற்கு மிக நீண்ட காலத்திற்கு முன்பே தொடங்கிவிடுகிறது என்று யூனியன் அஷ்யூரன்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த நாம் உறுதியாக நம்புகிறோம். நீரிழிவு நோய் பரிசோதனைகளை மக்கள் மிக எளிதாகப் பெற்றுக்கொள்ள வழிவகை செய்வதன் மூலமும், ஆரம்ப கட்டத்திலேயே அதற்கான மருத்துவத் தலையீடுகளை ஊக்குவிப்பதன் மூலமும், இலங்கையின் மிக முக்கியமான பொதுச் சுகாதார சவால்களில் ஒன்றிற்குத் தீர்வுகாணும் தொலைநோக்குடன் ‘யூனியன் அஷ்யூரன்ஸ் சுவமக’ ஆரம்பிக்கப்பட்டது. அதிலிருந்து, இம்முன்முயற்சி தொடர்ச்சியான வேகத்துடன் பல்வேறு சமூகங்களுக்கும் தனது சேவைகளை விரிவுபடுத்தி வருவதுடன், தங்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதில் முன்கூட்டியே விழிப்புடன் செயல்பட பல்லாயிரக்கணக்கான இலங்கையர்களுக்குத் தொடர்ந்து வலுவூட்டி வருகின்றது.” என்றார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், “இந்த அர்ப்பணிப்பை மேலும் விஸ்தரிப்பதற்கான அர்த்தமுள்ள வாய்ப்பை பொசொன் வழங்கியிருந்தது. நாட்டின் பல்வேறு பாகங்களிலிருந்தும் அனுராதபுரத்திற்கு வருகை தரும் ஆயிரக் கணக்கான யாத்திரிகர்களில், தடுப்பதற்கான சுகாதாரபராமரிப்பை நேரடியாக வழங்க நாம் எதிர்பார்த்ததுடன், உரிய காலப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய சுகாதார பரிசோதனைகளான சில தடைகளை நீக்கவும் நடவடிக்கை எடுத்திருந்தோம். யூனியன் அஷ்யூரன்ஸ் சுவமக ஊடாக, தமது ஆரோக்கியம் தொடர்பான புரிதலைப் பெற்றுக் கொள்ளும் முதல் படியை எடுத்துவைப்பதற்கு நாம் பல இலங்கையர்களுக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளோம். ஏனெனில், உரிய காலத்தில் நடவடிக்கை எடுப்பதனூடாக, பெருமளவு மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும்.” என்றார்.

கொழும்புப் பங்குப்பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட இலங்கையின் மிகப்பெரிய கூட்டுநிறுவனமான, ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்சின் (ஜேகேஎச்) அங்கத்துவ நிறுவனமாக யூனியன் அஷ்யூரன்ஸ் திகழ்கின்றது. இது 7 வகையான பரந்துபட்ட தொழில் துறைகளில் 80இற்கும் அதிகமான நிறுவனங்களைக் கொண்டு இயங்குகின்றது. அதன் அங்கத்துவ நிறுவனமாகத் திகழ்ந்து, துறையில் மூன்று தசாப்த கால வெற்றிகரமான சேவையை யூனியன் அஷ்யூரன்ஸ் பூர்த்தி செய்துள்ளதுடன், 2026 மார்ச் மாத இறுதியில் சந்தை மூலதனவாக்கமாக ரூ. 40.6 பில்லியனையும், ஆயுள் நிதியமாக ரூ. 96.2 பில்லியனையும் கொண்டிருந்தது. இலங்கையர்களின் கனவுக்கு வலுச்சேர்க்கும் வகையில் இயங்கும் யூனியன் அஷ்யூரன்ஸ், கல்வி, ஆரோக்கியம், பாதுகாப்பு, ஓய்வூதியம் மற்றும் முதலீடு போன்ற ஆயுள் காப்புறுதியுடன் தொடர்புடைய தீர்வுகளை இலங்கையர்ளுக்கு வழங்குகின்றது. நாடளாவிய ரீதியில் பரந்த கிளை வலையமைப்பினூடாக 3,000 க்கும் அதிகமான ஊழியர்களைக் கொண்டு இயங்கும் யூனியன் அஷ்யூரன்ஸ், தொடர்ச்சியான தனது ஊழியர்கள், தீர்வுகள் மற்றும் செயன்முறைகள் போன்றவற்றில் வாடிக்கையாளர்களை மையப்படுத்திய முன்னேற்றங்களை மேற்கொள்ளும் வகையில் முதலீடுகளை மேற்கொண்ட வண்ணமுள்ளது.

யூனியன் அஷ்யூரன்ஸ் பிஎல்சி இலங்கை காப்புறுதி ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் (IRCSL) அங்கீகாரம் பெற்ற நிறுவனமாகும்.

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *