இலங்கையின் தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி மற்றும் பயிற்சி (TVET) துறையின் முக்கிய பங்குதாரர்களை ஒன்றிணைத்து, ‘CAREER ONE’ டிஜிட்டல் தளம் (www.careerone.gov.lk) குறித்தான விரிவான வணிக மாநாடு தொழில்துறையினருக்காக 2026 ஜூன் 02 புதன்கிழமை கொழும்பு ஷங்ரி-லா (Shangri-La) ஹோட்டலில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது.
இந்தத் திட்டம் KOICA நிதியுதவியுடனான ‘TVET Career Platform’ திட்டத்தின் (2023-2026) கீழ் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இத்திட்டத்தை திட்ட முகாமைத்துவ ஆலோசகராகச் செயற்படும் முன்னணி கொரிய தொழில்நுட்ப கல்வி (EdTech) நிறுவனமான UBION, இலங்கையின் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு மற்றும் மூன்றாம் நிலை தொழிற்கல்வி ஆணைக்குழு (TVEC) ஆகியன இணைந்து செயற்படுத்துகின்றன.
இந்த திட்டமானது டிஜிட்டல் தொழில்சார் தயார்நிலையை ஊக்குவிப்பதானது, தொழில் வழிகாட்டல் வழிமுறைகளை வலுப்படுத்துதல் மற்றும் இலங்கையின் TVET துறையின் தொழில் வழிகாட்டல் தளமாக விளங்கும் ‘CAREER ONE’ டிஜிட்டல் தளத்தின் பயனுள்ள பயன்பாட்டை விரிவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்தளம் NVQ கற்கைகளைத் தொடரும் TVET மாணவர்களுக்கு தொழில் வழிகாட்டல் சேவைகள், பணியிடப் பயிற்சி (OJT) வாய்ப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு விபரங்களை வழங்குகிறது.

கல்வி அமைச்சின் தொழிற்பயிற்சி பிரிவின் பணிப்பாளர் திமுதுன் சந்திரசிறி, TVEC தலைவர் பேராசிரியர் ஜி.எல். தர்மசிறி விக்ரமசிங்க, NAITA திட்டமிடல் பிரிவு பணிப்பாளர் ரொஹான் ரொட்ரிகோ, KOICA இலங்கை அலுவலகத்தின் நாட்டுக்கான பணிப்பாளர் லீ யூரி (Lee Yuri), UBION நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் ஸ்கொட் (Scott) ஆகியோர் இங்கு உரையாற்றினர். தொழிற்பயிற்சி பெறுபவர்கள் மற்றும் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு அரச நிறுவனங்கள், தொழிற்பயிற்சி வழங்குநர்கள் மற்றும் தனியார் துறைக்கு இடையே ஒத்துழைப்பை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை பேச்சாளர்கள் வலியுறுத்தினர்.
‘CareerOne’ திட்டம் பற்றிய மேலோட்டப் பார்வையை UBION நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் ஸ்கொட் வழங்கினார். CareerOne ஆனது KOICA நிதியுதவியுடன் 2022 டிசம்பர் முதல் 2026 டிசம்பர் வரை UBION நிறுவனத்தால் செயற்படுத்தப்படும் ஒரு தேசிய TVET தொழில் தளமாகும் என அவர் விளக்கினார். இத்திட்டத்தின் நோக்கம், ஒரு நிலைபேறான டிஜிட்டல் தொழில் வழிகாட்டல் மற்றும் சரியான வேலையை வழங்கும் தளத்தின் மூலம் TVET பட்டதாரிகளின் வேலைவாய்ப்புக்கான வாய்ப்புகளை மேம்படுத்துவதாகும். நிறுவனப் பதிவு, வெற்றிடங்களை அறிவித்தல் மற்றும் OJT வாய்ப்புகளை வழங்குதல் ஆகியவற்றின் மூலம் நிறுவனங்களின் செயலூக்கமான பங்களிப்பின் முக்கியத்துவத்தை அவர் எடுத்துக் கூறினார். தொழில் வழங்குனர்களின் ஈடுபாடு, பயிற்சி பெறுனர் பொருத்தம் மற்றும் தர உத்தரவாதம் ஆகியவற்றிற்கு ஆதரவளிப்பதில் NAITA பரிசோதகர்களின் பங்கையும் அவர் வலியுறுத்தினார்.

NAITA பரிசோதகர்களின் பங்கு மற்றும் CareerOne தளத்தை திறம்பட பயன்படுத்துவது குறித்து, NAITA இன் பயிற்சிப் பிரிவின் பணிப்பாளர் அசித ரத்நாயக்க விளக்கமளித்தார். NAITA பரிசோதகர்கள் தொழில்துறை சார்ந்த பயிற்சிகளின் முதன்மை ஒருங்கிணைப்பாளர்களாகவும் தூதுவர்களாகவும் எவ்வாறு செயற்படுகிறார்கள் என அவர் இங்கு விளக்கினார். அவர்களின் பொறுப்புகளில் பயிற்சி நிறுவனங்களை அடையாளம் காணுதல், பயிற்சியாளர்களை நியமித்தல், ஆய்வுகளை நடத்துதல், பயிற்சியாளர்களின் முன்னேற்றத்தைக் கண்காணித்தல், மதிப்பீடுகளை ஒருங்கிணைத்தல், பயிற்சியின் தரத்தை உறுதி செய்தல், தொழிற்சாலை பயிற்சி, OJT, முற்கூட்டிய கற்றலை அங்கீகரிக்கும் (RPL) மதிப்பீடுகளை ஏற்பாடு செய்தல் ஆகியன உள்ளடங்குகின்றன. CareerOne தளத்தை திறம்பட பயன்படுத்துவது பயிற்சி வாய்ப்புகளின் முகாமைத்துவம், பயிற்சியாளர் வேலைவாய்ப்புகள், தொழில் வழங்குனரின் ஈடுபாடு மற்றும் தரவு கண்காணிப்பு ஆகியவற்றை மேம்படுத்தும் அதே வேளையில், தொழில்துறை தொடர்புகளையும் வேலைவாய்ப்பு பெறுபேறுகளையும் வலுப்படுத்தும் என ரத்நாயக்க மேலும் குறிப்பிட்டார்.
TVEC இன் உதவிப் பணிப்பாளர் வஜிர விஜேசிங்க, வணிக நிறுவன துறையில் TVET பயிற்சியாளர்களை ஈர்ப்பதற்கான வெற்றிகரமான அணுகுமுறைகள் மற்றும் சிறந்த நடைமுறைகள் குறித்தும், திறனை கொண்ட தொழிற்பயிற்சி பட்டதாரிகளை வேலைக்கு அமர்த்துவதன் நன்மைகள் குறித்தும் உரையாற்றினார். திறன் தேவைகளை அடையாளம் காணுதல், OJT வசதிகளை ஏற்படுத்துதல், மதிப்பீடுகளை நடத்துதல் மற்றும் வேலைவாய்ப்பு வழங்கலை ஆதரிப்பதில் பயிற்சி நிறுவனங்கள், தொழில்துறை மற்றும் ஒழுங்குபடுத்தல் நிறுவனங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை அவர் இங்கு வலியுறுத்தினார்.

நிறுவனப் பதிவு, வேலை வாய்ப்புப் பதிவு மற்றும் பணியிடப் பயிற்சி (OJT) பதிவு ஆகியவற்றை உள்ளடக்கிய ‘CareerOne’ டிஜிட்டல் தளத்தின் நடைமுறை ரீதியான விளக்கத்தை திட்ட செயற்பாட்டு அதிகாரி ஹெய்லி இங்கு முன்னெடுத்தார். இந்த அமர்வு பங்கேற்பாளர்களுக்கு ஆட்சேர்ப்பு மற்றும் பயிற்சி நோக்கங்களுக்காக தளத்தை எவ்வாறு திறம்பட பயன்படுத்துவது என்பது குறித்த நேரடி வழிகாட்டலை வழங்கியது.
இந்நிகழ்வின் போது ஒரு விசேட கலாசார நிகழ்ச்சியும் இடம்பெற்றது, இது பங்கேற்பாளர்களுக்கு இலங்கையின் கலாசார பாரம்பரியத்தை அனுபவிக்கவும் பாராட்டவுமான ஒரு வாய்ப்பை வழங்கியது.
கலந்துரையாடல் அமர்வை ‘Future Lanka Research and Development Foundation’ அமைப்பை பிரதிநிதித்துவப்படுத்திய தயான் படுகே வழிநடத்தினார். இந்த அமர்வு, CareerOne டிஜிட்டல் தளத்தில் மும்முரமாகப் பங்கேற்பதன் முக்கியத்துவம் குறித்து வணிக நிறுவன பிரதிநிதிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும், அதன் பலன்களை அதிகப்படுத்துவதற்கான உத்திகளை கண்டறிவதிலும் கவனம் செலுத்தியது.
நிறைவுரையை TVEC இன் பணிப்பாளர் நாயகம் கலாநிதி கே.ஏ. லலிததீர வழங்கினார். இலங்கையில் CareerOne தளத்தின் நீண்டகால வெற்றி மற்றும் தொழிற்கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளின் முன்னேற்றத்தை உறுதி செய்வதற்காக அரச நிறுவனங்கள், தொழிற்பயிற்சி நிறுவனங்கள், தொழில் வழங்குனர்கள் மற்றும் மேம்பாட்டுப் பங்காளிகளுக்கு இடையே நீடித்த ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை அவர் இங்கு வலியுறுத்தினார்.