இலங்கையில் நீதியை அணுகுவதை வலுப்படுத்துவதற்கும், சட்ட உதவி வழங்கும் முறையை மீளமைப்பதற்குமான ஒரு முக்கிய நகர்வாக, Legal Aid Dialogue 2026 (சட்ட உதவி உரையாடல் 2026) கொழும்பில் ஆரம்பமானது. பெப்ரவரி 20 – 21ஆம் திகதிகள் இடம்பெற்ற இந்த மாநாடு, ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன், நீதி அமைச்சின் பங்களிப்போடு, UNDP மற்றும் UNICEF ஆகிய நிறுவனங்களால் முன்னெடுக்கப்படும் ‘Support to Justice Sector Project – JURE’ (நீதித் துறைக்கான ஆதரவுத் திட்டம்) மற்றும் சட்ட உதவி ஆணைக்குழு ஆகியவற்றினால் ஏற்பாடு செய்யப்பட்டது. நீதித் துறையில் பிரதிபலிப்பு, புத்தாக்கம், ஒத்துழைப்பை ஏற்படுத்துவதற்கான ஒரு உயர்மட்ட தளமாக இந்த உரையாடல் அமைகிறது.
இதன் ஆரம்ப நிகழ்வில், நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சின் செயலாளர் அயேஷா ஜினசேன, சட்ட உதவி ஆணைக்குழுவின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி விவேகானந்தன் புவிதரன், இலங்கையிலுள்ள UNDP இன் வதிவிடப் பிரதிநிதி அஸுசா குபோட்டா, பங்காளர் நிறுவனங்கள் மற்றும் நீதித் துறையின் உயர்மட்டப் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.
இந்த இரண்டு நாள் நிகழ்வானது, சட்ட உதவி ஆணைக்குழு, நீதி அமைச்சு, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், நீதித்துறை, பல்கலைக்கழகங்கள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் அபிவிருத்தி பங்காளிகள் என பல்வேறு தரப்பினரை ஒன்றிணைத்தது. ஆழமான கலந்துரையாடல்கள் மூலம், நவீனமாக, அனைவரையும் உள்ளடக்கியதாக, உரிமைகள் சார்ந்த பொதுச் சேவையாக சட்ட உதவியை எவ்வாறு மாற்றலாம் என்பது குறித்து இவர்கள் இங்கு ஆராய்ந்தனர்.
இதன் ஆரம்ப நிகழ்வில் உரையாற்றிய நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சின் செயலாளர் அயேஷா ஜினசேன, சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவதிலும் சமமான நீதியை உறுதி செய்வதிலும் சட்ட உதவியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். UNDP இன் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி அஸுசா குபோட்டா, மக்கள் மைய அணுகுமுறை மற்றும் நிலைபேறான அபிவிருத்தியை நோக்கி, பல்வேறு தரப்பு பங்காளர்களை உள்ளடக்கியதாக, சட்ட உதவி முறைகளை வலுப்படுத்துவதன் அவசியத்தை இங்கு சுட்டிக்காட்டினார்.
சட்ட உதவி ஆணைக்குழுவின் தலைவர், ஜனாதிபதி சட்டத்தரணி விவேகானந்தன் புவிதரன் தனது உரையில், சட்ட உதவிச் சட்டம் இயற்றப்பட்டு 48 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், புத்தாக்கமான கண்ணோட்டங்கள் மற்றும் புதிய அர்ப்பணிப்புடன் சட்ட உதவியை மறுசீரமைக்க வேண்டிய தருணம் இது என்று குறிப்பிட்டார்.
நீதியை அணுகுவதற்கான அணுகுமுறையை மீளமைப்பதில் இலங்கை தற்போது ஒரு முக்கியமான கட்டத்தில் உள்ளது. நீதித்துறை முழுவதிலுமிருந்து தகவல்களை ஒருங்கிணைக்கும் JURE இன் திட்டமான ‘நீதித் தரவு சுருக்கம்’ (Justice Data Snapshot) இலிருந்து புதிய ஆதாரங்களின் ஒருங்கிணைப்பு மற்றும் JURE திட்டத்தின் மூலம் பலதரப்பட்ட பங்காளர்களின் ஆதரவு ஆகியன, இலங்கையின் சட்ட உதவிச் சேவைகளில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான ஒரு தனித்துவமான வாய்ப்பை உருவாக்கியுள்ளன.
இந்த மாநாட்டில் கொள்கை சீர்திருத்தம், சேவை வழங்கல் மாதிரிகள், தொழில்நுட்ப புத்தாக்கங்கள் குறித்து சுமார் 100 பங்கேற்பாளர்கள் இணைந்து தங்களது ஆலோசனைகளையும் கருத்துகளை வழங்கியிருந்தனர். இது வெறுமனே ஒரு கருத்துப் பரிமாற்றத் தளமாக மட்டுமன்றி, மனித உரிமைத் தத்துவங்களின் அடிப்படையில் இயங்கும் அனைவரும் அணுகக்கூடிய, பயனுள்ள, மனித உரிமை கொள்கைகளில் உறுதியாக வேரூன்றிய ஒரு வலுவான சட்ட உதவி முறையை உருவாக்குவதற்கான ஊக்கியாகவும் அமைந்தது.
புதிய தரவுகளை அடிப்படையாகக் கொண்டு, உலகளாவிய நடைமுறைகளின் வழிகாட்டலுடனும், தேசிய நிறுவனங்கள் மற்றும் அபிவிருத்தி பங்காளர்களின் ஆதரவுடனும் முன்னெடுக்கப்பட்ட இந்த உரையாடல், உரிமைகள் சார்ந்த சீர்திருத்தங்களில் ஒரு பாரிய மாற்றத்தை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டமைந்திருந்தது. சட்ட உதவியை ஒரு அடிப்படை மனித உரிமையாகவும் பொது நன்மையாகவும் கருதும் வகையில் அதன் தொலைநோக்குப் பார்வையை இது மீள்வரையறை செய்கிறது. அத்துடன், கொள்கை மேம்பாட்டிற்கான வழிகாட்டல்கள் மற்றும் காலக்கெடுவுடன் கூடிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்த உடன்பாட்டுடன் இந்த நிகழ்வு நிறைவடைந்தது. மக்களின் தேவைகளுக்கு சிறப்பாகப் பதிலளிக்கக்கூடிய ‘திருத்தப்பட்ட சட்ட உதவிக் கொள்கை’ (Revised Legal Aid Policy) ஒன்றினை முன்வைப்பதற்கான தளமாக இந்த உரையாடல் அமைந்ததுடன், இது மிகவும் சமத்துவமான மற்றும் நெகிழ்வுத்தன்மை கொண்ட நீதித் துறையை உருவாக்குவதற்கு பங்களிப்புச் செய்தது.
**ENDS**
JURE பற்றி:
நீதித் துறைக்கான ஆதரவுத் திட்டம் (JURE), ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன், நீதி அமைச்சின் பங்களிப்போடு, இலங்கையில் உள்ள UNDP மற்றும் UNICEF ஆகிய ஸ்தாபனங்களால் கூட்டாக நடைமுறைப்படுத்தப்படுகிறது. பொறுப்புக்கூறல், வெளிப்படைத்தன்மை, செயல்திறன், தரம் ஆகியவற்றில் கவனம் செலுத்தி, நவீனமான மற்றும் அனைவரையும் உள்ளடக்கியதாக நீதித் துறையை உருவாக்குவதற்கு இத்திட்டம் மும்முனை அணுகுமுறையை மேற்கொள்கிறது. UNDP இன் முதன்மையான திட்டங்களில் ஒன்றான JURE, இலங்கையின் நீதித் துறை நிறுவனங்கள் மற்றும் பங்குதாரர்களுடன் நெருக்கமான ஆலோசனையுடனும் பங்காளித்துவத்துடனும் செயற்படுத்தப்பட்டு வருகிறது.
UNDP பற்றி:
UNDP என்பது வறுமை, சமத்துவமின்மை, காலநிலை மாற்றம் போன்ற அநீதிகளுக்கு எதிராக போராடும் ஐக்கிய நாடுகள் சபையின் முன்னணி அமைப்பாகும். 170 நாடுகளில் செயற்படும் எமது பரந்துபட்ட நிபுணர்கள் மற்றும் பங்காளர்களின் வலையமைப்புடன் இணைந்து, மக்களுக்கும், பூமிக்கும் நீடித்த தீர்வுகளை உருவாக்க நாம் நாடுகளுக்கு உதவுகிறோம்.
மேலதிக விபரங்களுக்கு: www.undp.org/srilanka அல்லது எம்மை சமூக வலைத்தளங்களில் பின்தொடருங்கள்: @UNDPSriLanka
தொடர்புகளுக்கு: [email protected] | 0779804188 | Ext. 1501 சமூக வலைத்தளங்கள்: UNDP on X | Facebook | Instagram | LinkedIn