சிறந்த நிறுவன பிரஜை நிலைபேற்றுத்தன்மை (Best Corporate Citizen Sustainability) விருதுகளில் DPMC இன் ‘e-Drive’ திட்டத்திற்கு தேசிய அங்கீகாரம்

இலங்கை வர்த்தக சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மதிப்புமிக்க சிறந்த பெருநிறுவன பிரஜை நிலைபேற்றுத்தன்மை விருது (Best Corporate Citizen Sustainability Awards) விழாவில், டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனி (DPMC) அதன்  ‘e-Drive’ முன்னணித் திட்டத்திற்கு ‘சிறந்த நிலைபேற்றுத்தன்மை திட்டத்திற்கான’ மெரிட் (Merit) விருதை பெற்றுள்ளது. இந்த அங்கீகாரமானது, இலங்கையில் நிலைபேறான மற்றும் புத்தாக்கமான போக்குவரத்து தீர்வுகளில் DPMC நிறுவனத்தின் தலைமைத்துவத்தை மீண்டுமொரு முறை உறுதிப்படுத்துகிறது.

சிறந்த பெருநிறுவன பிரஜை நிலைபேற்றுத்தன்மை விருது என்பது சூழல் பாதுகாப்பு, சமூகப் பொறுப்புணர்வு மற்றும் நிலைபேறான வணிகத் தலைமைத்துவம் ஆகியவற்றில் சிறந்து விளங்கும் நிறுவனங்களை வருடாந்தம் கௌரவிக்கும் ஒரு நிகழ்வாகும். இதில் குறிப்பாக, ‘சிறந்த நிலைபேற்றுத்தன்மை திட்ட விருது’ ஆனது சமூகம் மற்றும் சூழல் ஆகியவற்றில் அளவிடக்கூடிய மற்றும் நீண்ட கால சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் முயற்சிகளுக்காக வழங்கப்படுகிறது.

DPMC நிறுவனத்தின் ‘e-Drive’ திட்டமானது, பெற்றோலில் இயங்கும் முச்சக்கர வண்டிகளை முழுமையாக மின்சார வாகனங்களாக மாற்றுவதில் கவனம் செலுத்துகிறது. இது காபன் வெளியீட்டைக் குறைப்பதற்கும் அனைத்தையும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்குமான நடைமுறை ரீதியான  தீர்வை  வழங்குகிறது. இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து கொழும்பு, யாழ்ப்பாணம், மாத்தறை ஆகிய இடங்களில் 58 மின்சார e-Drive வாகனங்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இவை மொத்தமாக 2.35 மில்லியன் கிலோமீற்றருக்கும் அதிகமான தூரத்தை சுற்றாடல் நட்புறவான முறையில் கடந்துள்ளன. இதன் விளைவாக, பச்சை வீட்டு வாயுவான  CO₂ வின் சுமார் 156 தொன் வெளியீடு தவிர்க்கப்பட்டுள்ளதுடன், 102,213 லீற்றர் எரிபொருள் நுகர்வும் சேமிக்கப்பட்டுள்ளது.

சூழல் தொடர்பான நன்மைகளுக்கு அப்பால், இந்த முயற்சியானது நான்கு பெண் சாரதிகளுக்கான வேலைவாய்ப்பு உள்ளிட்ட 65 பேரின் வாழ்வாதாரத்திற்கான வாய்ப்புகளையும் உருவாக்கியுள்ளது. அதே நேரத்தில் 171 சாரதிகளுக்கு வீதிப் பாதுகாப்பு மற்றும் தொழில்முறை தரங்களை மேம்படுத்துவதற்கான பயிற்சிகளும் வழங்கப்பட்டுள்ளன.

DPMC நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (R&D) குழு மற்றும் உள்ளக குழுக்களால் முழுமையாக உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட இந்த ‘e-Drive’ திட்டமானது, தொழில்நுட்ப புத்தாக்கத்தை சூழல் பொறுப்புணர்வு, சமூகத்தின் உள்ளீர்ப்பு மற்றும் பொருளாதார வலுவூட்டல் ஆகியவற்றுடன் தடையின்றி ஒருங்கிணைக்கிறது. இது ஐக்கிய நாடுகள் சபையின் 10 நிலைபேறான வளர்ச்சி இலக்குகளுக்கு (SDGs) பங்களிப்பதோடு, 2040 ஆம் ஆண்டளவில் காபன் நடுநிலைப்படுத்தலை (carbon neutrality) அடைவதற்கான DPMC நிறுவனத்தின் நீண்ட கால உறுதிப்பாட்டை நேரடியாக ஆதரிக்கிறது.

டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனி லிமிடெட் ஆனது, இலங்கையின் மிகப்பெரிய வாகன நிறுவனமாகும். இது கட்டுப்படியான விலை, நம்பகத்தன்மை மற்றும் சிக்கனம் ஆகியவற்றுடன் பெரும்பான்மையான மக்களுக்கு சேவை செய்கிறது. நாடு தழுவிய விற்பனை மற்றும் உதிரிப் பாகங்களின் விற்பனையாளர்களின் வலையமைப்பைக் கொண்டுள்ள DPMC, குறைவில்லாத தரம் மற்றும் சிறந்த பெறுமதி ஆகியவற்றுடன் இலங்கையின் வாகனத் துறையில் முன்னிலை வகிக்க உறுதி பூண்டுள்ளது.

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *