சரித்திரம் மீள்திரும்புகிறது: உண்மையான சிலோன் மோட்டார் வாகன கண்காட்சி முன்னெப்போதையும் விட பிரமாண்டமாக மீண்டும்

வரலாற்றுச் சிறப்புமிக்க சிலோன் மோட்டார் வாகன கண்காட்சி 2025 (Ceylon Motor Show 2025) ஆனது, இவ்வருடம் ஒக்டோபர் 24 – 26 வரை கொழும்பு BMICH இல் மீள்பிரவேசம் செய்யவுள்ளது. இது புதிதாகக் நிர்மாணிக்கப்பட்ட மேற்கு வாகனத் தரிப்பிட மண்டபங்களில் முதன்முதலில் இடம்பெறும் நிகழ்வாக முன்னெடுக்கப்படவுள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த நிகழ்வு சிலோன் மோட்டார் வாகன வர்த்தகர்கள் சங்கம் (Ceylon Motor Traders Association – CMTA) மற்றும் சிலோன் கிளசிக் கார் கழகம் (Classic Car Club of Ceylon – CCCC) ஆகியவற்றால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், LOLC Holdings PLC நிறுவனம் இதன் பிரதான அனுசரணையாளராக (Title Partner) விளங்குகின்றது. இந்நிகழ்வு, இலங்கையின் மிகப்பெரிய மற்றும் மிகவும் செல்வாக்கு மிக்க வாகனக் கண்காட்சி (Automotive Exhibition) எனும் அதன் நிலையை மீண்டும் உறுதிப்படுத்தவுள்ளது.

ஆறு வருட இடைவெளிக்குப் பின்னர் இடம்பெறும் இந்த மோட்டார் வாகன கண்காட்சி மூன்று நாட்களுக்கு நடைபெறவுள்ளது. இந்தக் கண்காட்சியில் 30,000 இற்கும் அதிகமான பார்வையாளர்கள் எதிர்பார்க்கப்படுவதனால், இது தொழில்துறைத் தலைவர்கள், வாகன ஆர்வலர்கள் மற்றும் குடும்பங்களை மீண்டும் ஒன்றிணைக்கவுள்ளது. இது கார்கள், SUVகள், மோட்டார் சைக்கிள்கள், பாரவூர்திகள் மற்றும் வாகன துணைப் பாகங்கள் மற்றும் கருவிகள் உள்ளிட்ட இலங்கையில் இதுவரை இடம்பெறாத வகையிலான வாகனங்களின் மிகப்பெரிய கண்காட்சி நிகழ்வாக இடம்பெறவுள்ளது. இலங்கையில் வாகன வர்த்தகநாமங்களுக்கான அங்கீகரிக்கப்பட்ட அனுமதிப்பத்திரம் பெற்றவர்கள் ஊடாக 30 இற்கும் மேற்பட்ட உலகளாவிய முன்னணி வர்த்தகநாமங்கள் இதில் காட்சிப்படுத்தப்படவுள்ளன.

அடுத்த தலைமுறைப் போக்குவரத்தில் கவனம் செலுத்துவதே இந்தக் கண்காட்சியின் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்றாகும். இதில் மின்சார வாகனங்கள், கலப்பு வகை (Hybrid) வாகனங்கள் என பல்வேறு வாகனங்கள் அங்கம் வகிக்கவுள்ளன. அத்துடன் மேம்பட்ட வடிவமைப்பு, புத்தாக்கம் மற்றும் வாகன தொழில்நுட்பத்தில் புதிய அனுபவங்களை வழங்கும் பங்கேற்புடனான செயன்முறை விளக்கங்கள் ஆகிய அம்சங்களும் இதில் உள்ளடங்குகின்றன. CMTA உறுப்பு நிறுவனங்கள், இலங்கைச் சந்தையில் புதிய அறிமுகங்களை ஏற்படுத்தும் வகையிலான, பிரத்தியேகமான புதிய வாகன வெளியீடுகள் மற்றும் புதிய மாதிரிகளின் அறிமுகங்களும் இதில் இடம்பெறவுள்ளன.

இந்த நிகழ்வுக்கு மேலும் வலுவூட்டும் வகையில், CCCC ஆனது 150 இற்கும் மேற்பட்ட பழைமை வாய்ந்த மற்றும் கிளசிக் வகை வாகனங்களின் அற்புதமான காட்சிப்படுத்தலுக்கு தயாராகி வருகின்றது. இது இலங்கையில் இதுவரை காட்சிப்படுத்தப்பட்ட மிகப்பெரிய வாகனங்களின் தொகுப்பாக அமையும். இது, உரிமையாளர்கள் மற்றும் வாகன புனரமைப்பில் ஈடுபடும் வல்லுனர்களுடன் தொடர்பு கொள்ளவும், ஒப்பிட முடியாத வாகனங்களின் வரலாறு மற்றும் கைவினைத்திறன் பற்றிய நுண்ணறிவுகளைப் பெறவும் ஒரு தனித்துவமான வாய்ப்பை வருகை தரும் பார்வையாளர்களுக்கு வழங்குகிறது.

Ceylon Motor Show 2025 கண்காட்சியின் உத்தியோகபூர்வ வானொலி மற்றும் தொலைக்காட்சி பங்காளராக Capital Maharajah Group, உத்தியோகபூர்வ அச்சு ஊடகப் பங்காளராக Wijeya Newspapers, உத்தியோகபூர்வ வெளிப்புற டிஜிட்டல் சிக்னேஜ் பங்காளராக Emerging Media ஆகியன ஆதரவு வழங்குகின்றன.

Ceylon Motor Show 2025 கண்காட்சியானது, புத்தாக்கம் மற்றும் பாரம்பரியத்தின் தனித்துவமான கலவையுடன், இலங்கையின் வாகனத் தொழில் துறையை தொடர்ந்து பலப்படுத்தி வரும் புத்தாக்கம், பாரம்பரியம் மற்றும் ஆர்வம் ஆகியவற்றைக் கொண்டாடும் ஒரு முக்கிய நிகழ்வாக அமைவதற்கு தயாராகி வருகிறது.

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *