Bolero City பிக்அப் வாகனங்களுக்கு பிரத்தியேக லீசிங் தீர்வுகளை வழங்குவதற்காக மேர்கன்டைல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் மற்றும் ஐடியல் மோட்டர்ஸ் ஆகியன கைகோர்த்துள்ளன.

இலங்கையின் முன்னணி நிதிச் சேவை வழங்குனர்களில் ஒன்றான மேர்கன்டைல் இன்வெஸ்ட்மென்ட்ஸ், சிறு வணிகங்கள், வர்த்தகர்கள், மற்றும் பொருள் போக்குவரத்து செயற்பாட்டாளர்களின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள வலிமைமிக்க மஹிந்ரா Bolero City பிக்அப் வர்த்தக வாகனங்களுக்கு கவர்ச்சிகரமான  லீசிங்  தீர்வுகளை வழங்குவதற்காக ஐடியல் மோட்டர்ஸ் நிறுவனத்துடன் மூலோபாயம் மிக்க கூட்டாண்மையொன்றை ஏற்படுத்தியுள்ளது.   

இக்கூட்டாண்மையினூடாக, வாடிக்கையாளர்கள் துரிதமாகவும், இலகுவாகவும் பெற்றுக்கொள்ளும் அதேசமயம், பல்வேறு விசேட வரப்பிரசாதங்களை அனுபவிப்பதை உறுதிப்படுத்தும் வகையில் ஒரு தொகுதி Bolero City பிக்அப் வாகனங்களை மேர்கன்டைல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் கையிருப்பில் பேணும். முதலாம் ஆண்டில் இலவச காப்புறுதி, இலவச மோட்டார்வாகனப் பதிவு, சாரதிக்கான வைத்தியசாலை அனுமதிக் காப்புறுதி, ரூபா 300,000 தொகை வரையில் விபத்துக் காப்புறுதி, திருத்தவேலைகளுக்கு ஒரு மாதத்திற்கு மேல் செல்லுமாயின் குத்தகை வாடகைக் கட்டணங்களுக்கு விலக்களிப்பு போன்றன அவற்றுள் அடங்கியுள்ளன.     

இலகுவான நிதித் தீர்வுகளுடன், நம்பிக்கைமிக்க, உடனடியாக ஓட்டுவதற்கு தயாரான வர்த்தகப் பயன்பாட்டு வாகனங்களை வழங்கி வழங்கல் செயற்பாட்டாளர்கள், சிறு வணிகங்களின் உரிமையாளர்கள், மற்றும் தொழில் முயற்சியாளர்களுக்கு உதவுவதில் தனது அர்ப்பணிப்பை மேர்கன்டைல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் இதனூடாக வெளிக்காண்பித்துள்ளது. வாணிபம், பொருள் போக்குவரத்து, மற்றும் ஏனைய வர்த்தக முயற்சிகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு அதன் நீடித்த உழைப்பு மற்றும் செயல்திறன் ஆகியவற்றின் நன்மதிப்பு காரணமாக மிகவும் உகந்த போக்குவரத்து தீர்வாக Bolero City பிக்அப் வாகனங்கள் காணப்படுகின்றன.   

மேர்கன்டைல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் மற்றும் ஐடியல் மோட்டர்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு இடையிலான நீண்டகால நம்பிக்கை மற்றும் பரஸ்பர உறுதிப்பாட்டை மேலும் வலுவாக்கும் வகையில் இரு நிறுவனங்களுக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றும் கைச்சாத்திடப்பட்டுள்ளது. மேர்கன்டைல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் பிரதம செயல்பாட்டு அதிகாரி திரு. லக்சந்த குணவர்த்தன, மற்றும் ஐடியல் மோட்டர்ஸ் சட்ட மற்றும் நிறுவன விவகாரங்களுக்கான பணிப்பாளர் நிமிஷா வெல்கம ஆகியோர் இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையில் உத்தியோகபூர்வமாக கைச்சாத்திட்டுள்ளனர்.   

இலங்கையில் மோட்டார் வாகனங்கள் மற்றும் அவற்றின் உதிரிப்பாகங்களின் விற்பனைத் துறையில் முன்னணி செயல்பாட்டாளராகத் திகழ்ந்து வருகின்ற ஐடியல் மோட்டர்ஸ் (பிரைவேட்) லிமிட்டெட், 2009ம் ஆண்டு முதற்கொண்டு மஹிந்ரா நிறுவனத்தின் வர்த்தக மற்றும் பிரயாணிகள் பயன்பாட்டு வாகனங்களுக்கான உத்தியோகபூர்வ விநியோகஸ்தராகச் செயற்பட்டு வருவதுடன், நாட்டில் மோட்டார் வாகனத் துறையின் பரிணாம வளர்ச்சிக்கு கணிசமான அளவில் பங்களித்துள்ளது.

அதன் பரந்த நாடளாவிய வலையமைப்பும் மற்றும் நம்பிக்கைமிக்க விற்பனைக்குப் பின்னரான சேவையின் மீதான வலுவான கவனமும், இலங்கையில் இலகுரக டிரக் வாகனங்கள் பிரிவில் ஐடியல் மோட்டர்ஸ் வளர்ச்சி காண்பதற்கு மூலகாரணமாக அமைந்துள்ளன. தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு முதலிடம் அளிக்கும் அணுகுமுறை ஆகியவற்றின் பக்கபலத்துடன், நாடெங்கிலும் வணிகங்கள் மற்றும் தனிநபர்களின் பல்வகைப்பட்ட தேவைகளை நிறைவேற்றுவதற்கு முழுமையான போக்குவரத்து தீர்வுகளை இந்நிறுவனம் தொடர்ந்தும் வழங்கி வருகின்றது.

இலங்கை எங்கிலும் தனது வாடிக்கையாளர்களுக்கு நிதி, அணுகல் வாய்ப்பு, சௌகரியம், மற்றும் மதிப்புக் கூட்டப்பட்ட ஆதரவு ஆகியவற்றை வழங்கி வணிக வளர்ச்சிக்கான உண்மையான கூட்டாளராகத் திகழ்வதில் தனது வகிபாகத்தை மேர்கன்டைல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் இந்த ஒத்துழைப்பின் மூலமாக மேலும் வலுப்படுத்தியுள்ளது. இந்த முயற்சியின் மூலமாக, வணிக உரிமையாளர்களுக்கு நம்பிக்கை, ஆதரவு, மற்றும் வலுவூட்டும் நிதித் தீர்வுகள் ஆகியவற்றுடன், வாடிக்கையாளர்களுக்கு முதலிடம் என்ற தனது அணுகுமுறையை மேர்கன்டைல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் தொடர்ந்தும் சிறப்பாக முன்னெடுத்து வருகிறது.        

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *