
நாட்டின் வேகமாக வளர்ந்து வரும் ஆயுள் காப்புறுதி சேவைகள் வழங்குனரான ஜனசக்தி லைஃப், 2025 முதல் காலாண்டில், முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் தேறிய கட்டுப்பண வழங்கல்களில் (GWP) 49% உயர்வை பதிவு செய்திருந்தது. 2024 முதல் காலாண்டில் பதிவாகியிருந்த ரூ. 1,231 மில்லியனுடன் ஒப்பிடுகையில், நடப்பு ஆண்டில் ரூ. 1,830 மில்லியனை பதிவு செய்திருந்தது. வாடிக்கையாளர் கையகப்படுத்தல், சந்தை விரிவாக்கம் மற்றும் தயாரிப்பு புத்தாக்கம் ஆகியவற்றில் அதன் மூலோபாய நோக்கை இந்த நிதிப் பெறுபேறுகள் வெளிப்படுத்தியிருந்தன.
வழமையான முதல் ஆண்டு கட்டுப்பணம் (FYP) முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 86% எனும் பாரிய வளர்ச்சியை பதிவு செய்து, பரந்தளவு வாடிக்கையாளர் இருப்பை கவரக்கூடிய தனது ஆற்றலை வெளிப்படுத்தியிருந்தது.
அதுபோன்று, புதிய வியாபார கட்டுப்பணங்கள் 78% இனால் உயர்ந்து, ஜனசக்தி லைஃப்பின் வளர்ந்து வரும் சந்தைப் பங்கை மேலும் உறுதி செய்துள்ளது. நிறுவனத்தின் மொத்த சொத்துகள் 2025 மார்ச் 31 ஆம் திகதியன்று ரூ. 38,849 மில்லியனாக உயர்ந்திருந்தது. முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 3% அதிகரிப்பாகும். காலாண்டின் வரிக்குப் பிந்திய தேறிய இலாபம் ரூ. 292 மில்லியனாக பதிவாகியிருந்தது. காலாண்டில், ரூ. 782 மில்லியனை உரிமை வழங்கல்கள் மற்றும் அனுகூலங்களாக ஜனசக்தி லைஃப் வழங்கியிருந்தது. அதனூடாக, காப்புறுதிதாரர்களின் நம்பிக்கையை வென்ற பங்காளர் எனும் தனது நிலையை மேலும் உறுதி செய்திருந்தது.
ஜனசக்தி இன்சூரன்ஸ் பிஎல்சியின் பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி ரவி லியனகே கருத்துத் தெரிவிக்கையில், “மற்றுமொரு காலாண்டில் சிறந்த நிதிப் பெறுபேறுகள் வளர்ச்சியை அறிக்கையிட்டுள்ளதையிட்டு நாம் பெருமை கொள்வதுடன், மீளாய்வுக்குட்படுத்தப்பட்ட காலப்பகுதியில் வேகமாக வளர்ந்து வரும் ஆயுள் காப்புறுதி சேவை வழங்குனராக ஆயுள் காப்புறுதித் துறையில் உயர்ந்த ஸ்தானத்தில் காணப்பட்டதையிட்டும் மகிழ்ச்சியடைகிறோம். அதிகரித்துச் செல்லும் வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு சேவைகளை பெற்றுக் கொடுக்க, கவனமான முறையில் தெரிவு செய்யப்பட்ட தீர்வுகள் மற்றும் முறையாக கட்டமைக்கப்பட்ட விநியோக மூலோபாயம் ஆகியன இந்த வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியிருந்தன. புத்தாக்கம், டிஜிட்டல்மயமாக்கம் மற்றும் துரித வினைத்திறன் நிர்வாகம் போன்றன கவனம் செலுத்தப்படும் முக்கியமான பகுதிகளாக அமைந்துள்ளன. பாரம்பரிய சந்தைப் பிரிவுகளில் மட்டுமன்றி சகல பிரிவுகளிலும் போட்டிகரத்தன்மையில் முன்னிலையில் திகழ்வதற்காக, துரித சந்தை கையகப்படுத்தல் மூலோபாயத்தை நிறுவனம் செயற்படுத்தியுள்ளதுடன், தனது எதிர்காலத்துக்காக பெருமளவு வாடிக்கையாளர்களை சென்றடையும் வகையில் வர்த்தக நாமம் தனது பிரசன்னத்தையும் மேம்படுத்தும்.” என்றார்.

“எமது அணி வலுப்படுத்தப்பட்டு, தொழிற்துறையின் தேவைப்பாடுகளுக்கு அப்பால் நிறைவேற்றக்கூடிய வகையில் கவனம் செலுத்தும் வகையில் தயார்ப்படுத்தப்பட்டு, அதனூடாக சேவை வழங்கல்கள் மற்றும் வர்த்தக நாமத்தின் உறுதித்தன்மையை மேம்படுத்தும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படும்.” என்றார்.
லியனகே மேலும் குறிப்பிடுகையில், “எதிர்கால அளவுகோல் மற்றும் வாடிக்கையாளர் பெறுமதி உருவாக்கம் ஆகியவற்றுக்கு ஆதரவளிக்கும் வகையில், இந்தக் காலாண்டில் நாம் முக்கியமான முதலீடுகளை மேற்கொண்டுள்ள நிலையில், இலாபகரமான வளர்ச்சியை பேணுவதில் நாம் அதிகளவு கவனம் செலுத்துவோம். ஊழியர்கள், செயன்முறைகள், திறன்கள் மற்றும் ஆற்றல்கள் போன்றவற்றில் நோக்கும் போது, ஜனசக்தி லைஃப் என்பது, எதிர்காலத்துக்கு தயாரான வியாபாரமாக அமைந்திருப்பதுடன், சந்தையில் காணப்படும் சிறந்த நிறுவனமாக திகழ்வதற்கான சகல அம்சங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது.” என்றார்.
ஜனசக்தி இன்சூரன்ஸ் பிஎல்சியின் தலைமை அதிகாரி அன்னிகா சேனாநாயக்க கருத்துத் தெரிவிக்கையில், “இந்த சிறந்த பெறுபேறுகளினூடாக, எமது வியாபார அடிப்படைகளின் வலிமை மற்றும் நீண்ட கால வளர்ச்சி மூலோபாயத்தின் வெற்றிகரத்தன்மை ஆகியன வெளிப்படுத்தப்பட்டுள்ளன. வாடிக்கையாளர் பயணம், போட்டிகரமான அனுகூலம், கடுமையான நிதிசார் முதலீடு மற்றும் எமது மனித மூலதனத்தை வலிமைப்படுத்தல் போன்றவற்றில் நாம் சந்தை தலைமைத்துவத்தை கட்டியெழுப்புவதில் தொடர்ந்தும் கவனம் செலுத்தி, உலகத்தரம் வாய்ந்த காப்புறுதித் தீர்வுகளைப் பெற்றுக் கொடுப்போம். புதிய வியாபார கட்டுப்பணங்களில் பெருமளவு அதிகரிப்பு பதிவாகியுள்ளதனூடாக, சந்தையில் அதிகரித்துச் செல்லும் எமது பொருத்தப்பாடு வெளிப்படுத்தப்பட்டுள்ளதுடன், இன்று நாம் மேற்கொள்ளும் படிகள், எதிர்வரும் காலாண்டுகளில் நிலையான வளர்ச்சி மற்றும் பெறுமதி உருவாக்கத்துக்கு காரணமாக அமைந்திருக்கும் என்பதில் நம்பிக்கை கொண்டுள்ளோம்.” என்றார்.
ஜனசக்தி லைஃப் தனது சந்தைப் பிரசன்னத்தை விரிவாக்குவது, புத்தாக்கத்தில் முதலிடுவது மற்றும் வாடிக்கையாளர்களை மையப்படுத்திய காப்புறுதித் தீர்வுகளை வழங்குவதில் தன்னை அர்ப்பணித்துள்ளது. இவை வாழ்க்கைக்கு வலுவூட்டும் வகையிலும், பாதுகாப்பான எதிர்காலங்களை ஏற்படுத்தும் வகையிலும் அமைந்திருக்கும்.
1994 ஆம் ஆண்டு ஆயுள் காப்புறுதி நிறுவனமாக ஸ்தாபிக்கப்பட்ட ஜனசக்தி இன்சூரன்ஸ் பிஎல்சி (ஜனசக்தி லைஃவ்), துறையில் புத்தாக்கமான செயற்பாட்டாளராக தன்னை அடையாளப்படுத்தியுள்ளதுடன், 30 வருடங்களுக்கு மேலாக அனைவர் மத்தியில் அறியப்படும் நாமமாகவும் திகழ்கின்றது. நாடு முழுவதிலும் உறுதியான பிரசன்னத்தை ஜனசக்தி லைஃப் கொண்டுள்ளதுடன், பரந்த 75 கிளைகள் மற்றும் பிரத்தியேகமான அழைப்பு நிலையத்தையும் கொண்டுள்ளது. “வாழ்க்கையை மேம்படுத்தல் மற்றும் கனவுகளுக்கு வலுவூட்டல்” எனும் நோக்கத்துக்கமைய, ஆயுள் காப்புறுதித் துறையில் முன்னோடியாக திகழ்வதற்காக ஜனசக்தி லைஃப் தன்னை அர்ப்பணித்துள்ளதுடன், அதற்காக தனது வாடிக்கையாளர்கள் மற்றும் பங்காளர்களுக்கு காப்புறுதிக்கு அப்பாலான சேவையை வழங்குகின்றது. காப்புறுதி, நிதி மற்றும் முதலீட்டு துறைகளில் இயங்கும் நிதிசார் பன்முகப்படுத்தப்பட்ட நிறுவனமான ஜனசக்தி குழுமத்தின் அங்கத்துவ நிறுவனமாக ஜனசக்தி இன்சூரன்ஸ் பிஎல்சி திகழ்கின்றது.