யூனிலீவர் ஸ்ரீலங்கா மற்றும் கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சின் கைத்தொழில் அபிவிருத்திச் சபை (IDB) ஆகியன ஒன்றிணைந்து, இரண்டாவது கட்டமாக பத்து சிறு தொழில்முயற்சியாளர்களுக்கு நிதியுதவியளித்துள்ளன. 2024ம் ஆண்டில் யூனிலீவர் மற்றும் IDB ஆகியவற்றுக்கு இடையில் கைச்சாத்திட்டப்பட்ட 3 ஆண்டுகளுக்கான புரிந்துணர்வு உடன்படிக்கையின் ஒரு பகுதியாக இது உள்ளதுடன், பெண் தொழில்முயற்சியாளர்களுக்கு நிதி மற்றும் ஆற்றல் மேம்பாட்டு உதவிகள் இதன் கீழ் அளிக்கப்பட்டு வருகின்றன. 2025ம் ஆண்டின் முடிவில் இந்நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் 60 தொழில்முயற்சியாளர்களுக்கு இவ்வாறான உதவிகளை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. பற்றிக் மற்றும் கைத்தறி, மிட்டாய் வகை, பாதணி மற்றும் மசாலாப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் அவர்கள் முதலீடுகளை மேற்கொண்டு, தமது வர்த்தக முயற்சிகளை விரிவுபடுத்தியுள்ளனர்.
வழிகாட்டல் மற்றும் அறிமுகங்களை ஏற்படுத்திக் கொள்ளல் போன்றவற்றினூடாக ஆற்றலை மேம்படுத்துவதற்கான மேலதிக உதவியைப் பெறும் முகமாக Women’s Chamber of Industry & Commerce (WCIC) உடனான கூட்டாண்மையுடன் இந்த புரிந்துணர்வு உடன்படிக்கை இவ்வாண்டில் மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளது.
இதனைக் கையளிக்கும் வைபவத்தில் கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் திருமதி திலகா ஜெயசுந்தர அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்துள்ளார்.
IDB தலைவர் ரவி நிசங்க அவர்கள் கருத்து தெரிவிக்கையில், “உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்தி, ஏற்றுமதியால் முன்னெடுத்துச் செல்லப்படும் பொருளாதாரத்தை வளர்க்க வேண்டும் என்ற தேசிய இலக்கிற்கு இந்நிகழ்ச்சித்திட்டம் உதவுகின்றது. சிறு தொழில்முயற்சியாளர்களுக்கு நிதியுதவிக்குப் புறம்பாக, பயிற்சி மற்றும் வழிகாட்டலை வழங்குவது வேலைவாய்ப்பைத் தோற்றுவிக்க உதவி, சர்வதேச தராதரங்களுக்கு ஈடான உயர் தர தயாரிப்புக்களை ஏற்றுமதி செய்ய வழிவகுக்கின்றது,” என்று குறிப்பிட்டார்.
யூனிலீவர் ஸ்ரீலங்காவின் பிரதம நிறைவேற்று அதிகாரி அலி தாரிக் அவர்கள் இது குறித்து கருத்து தெரிவிக்கையில், “வாழ்வாதாரங்களை மேம்படுத்துவது யூனிலீவரின் நிலைபேற்றியல் நிகழ்ச்சிநிரலில் முக்கியமான ஒரு தூணாகக் காணப்படுகின்றது. பெண் தொழில்முயற்சியாளர்களுக்கு ஆதரவளித்து, வலுவூட்டுவதற்காக IDB மற்றும் Women’s Chamber of Commerce and Industries ஆகியவற்றுடன் ஏற்படுத்தியுள்ள கூட்டாண்மை இலங்கையின் சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்கு நாம் ஆற்றுகின்ற பங்களிப்புக்களில் ஒன்றாகும்,” என்று குறிப்பிட்டார்.
WCIC தலைவர் கயனி டி அல்விஸ் அவர்கள் இது குறித்து மிகுந்த உற்சாகத்துடன் கருத்து தெரிவிக்கையில், “சரியான அறிவு, அறிமுகங்கள், மற்றும் வழிகாட்டலை பெண் தொழில்முயற்சியாளர்களுக்கு வழங்குவது அவர்களுடைய வெற்றிக்கு மிகவும் முக்கியம். அவர்களுடைய திறன்கள் மற்றும் தொழில் மதிநுட்பம் ஆகியவற்றை வலுப்படுத்துவதால், நீண்ட கால அடிப்படையில் நல்விளைவை ஏற்படுத்துவதற்கு அவர்கள் தமது வணிக முயற்சிகளை விரிவுபடுத்தி, “பெண்களுக்கு சொந்தமான, பெண் தலைமைத்துவ வணிகங்களுக்கு” வலுவூட்டி, இன்னும் வலுவான மற்றும் சமத்துவமான தொழில்முயற்சியாண்மை கட்டமைப்பொன்றை நாங்கள் வளர்க்கின்றோம்,” என்று குறிப்பிட்டார்.
முற்றும்